As it was in the days of Noah, so it will be at the coming of the Son of Man
நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
மத்தேயு 24 : 37.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°எனக்கு அன்பானவர்களே!
இம்மட்டும் நமக்கு ஜீவனை தந்து, பாதுகாத்து வழிநடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இன்றைய உலகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதற்கு இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் சாட்சியாக உள்ளன.
இன்றைய சமுதாயம் சீர்கெட்டு விட்டது. மனுஷருடைய ஒழுக்கம், நடத்தை, நல்வாழ்வு, நேர்மை எல்லாமே கெட்டுப் போனது.
அக்கிரமத்தை அது அப்படித் தான் என்றும், கெட்டதைக் கேடில்லை என்றும் பாவத்தைப் பரவாயில்லை என்றும் நினைக்கின்ற, பேசுகின்ற, சாதிக்கின்ற அளவுக்கு மனிதனுடைய வாழ்வு இன்று சீரழிந்து கிடக்கிறது என்றால் அதை மறுப்பதற்கில்லை.
இது இன்றைய நேற்றையப் பிரச்சனை அல்ல; ஏதேனிலே ஆரம்பித்தது இன்றும் தொடருகிறது என்றால் அது மிகையாகாது.
நோவாவின் காலம்:
“மனுஷனுடைய அக்கிரமம் பூமியில் பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதிற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; இது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது” ஆதி.6:5,6.என்று பார்க்கிறோம்.
இது ஆதி காலத்தில் நடந்தது. அன்றைக்கே கர்த்தர் இவ்வளவாய் மனஸ்தாபப்பட்டார் என்றால் …இன்று அதிலும் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவைப் பாவ நிவாரணபலியாக ஒப்புக் கொடுத்து விட்ட நிலையில், இன்று அவர் பூமியைப் பார்த்து எவ்வளவாய் மனமுடைவார் என்று கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவின் சீஷர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
மனிதன் பாவத்தில் விழுந்தபோதும், தேவன் அவனை அழித்துப் போடாமல், ஏதேன் தோட்டத்துக்கு வெளியே தான் விட்டார். அதற்காக அவர்கள் பேரில் தாம் கொண்டிருந்த அநாதி திட்டத்திலிருந்து அவர் மனம் மாறவே இல்லை. இப்போது, “மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:…” ஆதி.6:1 மனுஷர் பெருக பாவமும் பெருகிற்று;
அக்கிரமமும் பெருகிற்று; நினைவுகளும் அவற்றின் தோற்றங்களும் பொல்லாததாக மாறிற்று. மனிதரோ தேவனோடுள்ள உறவைத் தேடுவதை விடுத்து, பாவத்தைத் தெரிந்து கொண்டதைத் தேவன் கண்டார். வேதனைப்பட்டார். ஒரு தகப்பனாக தம் பிள்ளைகளைக் குறித்து மனஸ்தாபப்பட்டார்.
நோவா காலத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், மனிதனுடைய பாவம் தேவனுடைய இருதயத்தை உடைத்து சுக்கு நூறாக்கி விட்டிருந்தது.
“சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்…” ஆதி.18: 20. கர்த்தர் மன வேதனையடைந்தார்.
லோத்துவின் வீட்டுக்கு இரண்டு மனுஷர் வந்ததைக் கேள்விப்பட்ட அந்தப் பட்டணத்து வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள அனைவரும் அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டு, “அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா” ஆதி.19:4-5. என்று கூக்குரலிட்டார்கள் என்றால் அவர்களின் ஒழுக்கம் நடத்தை அன்றைக்கே எவ்வளவாகச் சீர்கெட்டிருந்தது என்பதை நாம் உணரலாம்.
கர்த்தர் அந்தப் பட்டணங்கள் சுட்டெரிக்கப்பட விட்டு விட்டார்
இன்றும் இந்தச் சீர்கேடு இருக்கிறது என்கிறதிலும், அதிகரித்திருக்கிறது என்கிறதிலும், மிக மோசமான விதத்தில் நடந்தேறுகிறது என்று நினைக்கும் போது மனித வர்க்கத்தின் மீதே வருத்தப்படாமல் என்ன தான் செய்வது?
வேதத்தில் பார்ப்போம்,
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.
ஆதி 13 :13.
தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
ஆதி 6 :6.
அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப் போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;
2 பேதுரு 2 :5
பிரியமானவர்களே,
அடிமைத்தன வாழ்விலிருந்து மீட்கப்பட்டு, தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து கற்பனைகளையும் நியாயப் பிரமாணங்களையும் பெற்றுக் கொண்டு, மோசே யோசுவா என்ற அற்புதமான தலைவர்களால் வழி நடத்தப்பட்ட இஸ்ரவேல் சந்ததியில் நடந்தது என்ன?
களவு, பொய், விபச்சாரம், வேசித்தனம், கொலை, கொள்ளை என்றும், சண்டைகள் யுத்தங்கள் என்றும் எல்லாமே தொடர்ந்தது. நியாயாதிபதிகள் புத்தகம் 19 மற்றும் 20-ம் அதிகாரங்களைப் படித்துப் பாருங்கள்.
இவற்றுக்கும், இன்று நடைபெற்று வருகின்ற பல கேவலமான சம்பவங்களுக்கும் என்ன வேறுபாட்டை நாம் காணமுடியும்? இந்தச் சீர்கேடுகள் யாவும் தாவீது, சாலொமோன் என்று தொடர்ந்து ராஜாக்கள் யுகத்திலும் இடைவிடாமல் தொடர்ந்தது.
ஒன்று மனுஷன் ஜனத்தொகையில் பெருகும்போது, அல்லது அவன் சுகமாய் ஜீவனம் பண்ணும்போது ஒழுக்கச் சீர்கேடும் வளர்ந்துகொண்டேதான் இருந்தது.
இன்றைய சமுதாய ஒழுக்க சீர்கேட்டை வரிசைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. திருச்சபையின் சீர்கேடுகளையும் வரிசைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கர்த்தர் நம்மிடம், தமது பிள்ளைகளிடம் ஒரு எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்.
அன்று மனுஷரின் பாவம் பெருகி ஜலத்தினாலே தேவன் பூமியை நிர்மூலமாக்க நினைத்தபோது, அந்த சந்தர்ப்பத்திலும் கர்த்தர் ஒரு மனுஷனைக் கண்டாரல்லவா! அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
பூமியில் வாழ்ந்த அத்தனை மனுஷரும் ஒழுக்கத்தை கெடுத்துப் போட்டிருக்க, அவன் தனியனாய் நின்று தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். அதன் பலன் அவனுடைய குடும்பமே காப்பாற்றப்பட்டது.
இன்று இத்தனையாய் ஒழுக்க சீரழிவுகளும், அக்கிரமங்களும் பாவமும் பெருகி விட்டிருக்கின்ற இந்தக் காலப்பகுதியில், தேவன் நோவாவைப் போலல்ல, அவனிலும் உத்தமனாய், நடக்கையில் பரிசுத்தமுள்ள, தேவன் உண்மையுள்ள ஒருவனைக் கர்த்தர் காண்பாரோ?
அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனையே பலியாக ஈந்து பாவத்தின் சங்கிலியை உடைத்தெறிந்து விடுதலை தந்த பின்னரும், இந்த விடுதலையை அனுபவிக்கிறவர்கள் தேவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணலாமா?
முதலாவது இன்று தேவன் நம்மைத் தமது இருதயத்துக்கு ஏற்றவராகக் காண முடியுமா? நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணிய ரோமர் 5:8 பின்னரும் இந்த ஒழுக்கச் சீர்கேடு இன்னும் அதிகமாகப் பெருகி வருவது துக்கத்துக்குரிய விஷயமல்லவா!
பாவத்திற்கான விலைக்கிரயமாக, ஏக பலியாக இயேசு தம்மையே சிலுவையில் ஈந்து, மனுக்குலத்துக்கே பாவத்திலிருந்து மீட்பை அருளி விட்டார். இப்படியிருக்க கிறிஸ்துவுக்குள் புதிய மனுஷர் என்று விசுவாசித்து அதை அனுபவித்து வருகின்ற நாமும் சாத்தானின் வஞ்சக வலைக்குள் விழுவது தகுமா?என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவ சீஷனும் சிந்திக்க வேண்டும்.
எனக்கு அன்பான சகோதரனே சகோதரியே,
நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் புதிய மனிதர்களாய் அவரின் வருகைக்கு ஆயத்தப்படுவோம். நோவாவின் குடும்பம் பேழைக்குள் சென்று பிழைத்துக் கொண்டது போல,
நாமும் இயேசு என்னும் பேழைக்குள் நாமும் நமது குடும்பங்களும் பாதுகாக்கப்பட ஆயத்தப்படுவோம்.
கர்த்தர் தரும் பாதுகாப்பினை பெற்று இம்மையிலும் மறுமையிலும் அவரோடு என்றும் வாழ நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.