Blessed are the meek, for they will inherit the earth

Blessed are the meek, for they will inherit the earth

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.
மத்தேயு 5 :5.

**********
எனக்கு அன்பானவர்களே,

நீடிய சாந்தமுள்ளவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நீடிய சாந்தம் என்பது ஆவிக்குரிய கனிகளாகிய ஒன்பது கனிகளில் ஒன்றாக இருக்கிறது. இது எல்லா மனுஷருக்குள்ளிலும் தேவன் எதிர்பார்க்கிற காரியம். ஆனால், இதனை வாசிக்கும் போது நம்மையே நாம் ஆராய்ந்து பார்க்க கடனாளிகளாயிருக்கிறோம்.

இது நம்மை பரிசுத்தப்படுத்துகிற ஒரு நல்ல குணமாக இருக்கிறது. ஆவிக்குரிய நற்கிரியைகள் நம்மிடம் இருக்குமானால் இந்த நீடிய சாந்தம் இருக்க வேண்டும் என்று தேவ வசனம் நமக்கு அழகாக போதிக்கிறது.

எண்ணாகமம்:12:3-ல் மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.

மோசேயைப் போல சாந்தகுணமுள்ள மனிதன் இதற்கு முன்பு இருந்ததுமில்லை. என்று கர்த்தர் சொன்னார். இஸ்ரவேல் புத்திரர்
6,00, 000 புருஷர்கள். இவர்கள் எகிப்தின் அடிமையிலிருந்து மீட்டுக் கொண்டுவர கர்த்தர் தெரிந்தெடுத்த ஒரு முக்கியமான பாத்திரம் மோசே.

கர்த்தர் மோசேயை குறித்து சொல்லுகிற வார்த்தை,
எண்12:6-8

அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.

என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்;

இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார்.

இவ்விதமாக நம்முடைய தேவனாகிய கர்த்தர் மோசேயை குறித்து சாட்சி கூறுகிறார்.

காரணம் மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான் என்று ஆண்டவரே சாட்சி கொடுக்கிறார்.

மோசேயை குறித்து தேவன் மிகுந்த சாந்தகுணம் என்று சொல்லுகிறதை பார்க்கிறோம். மிகுந்த சாந்த குணம் இருந்ததால் தான் பிள்ளைகள், ஸ்திரீகள் தவிர ஆறு லட்சம் புருஷர்களை எத்தனையோ நெருக்கத்தின் மத்தியிலும் மிகுந்த பொறுமையோடு நடத்தி வர முடிந்தது.

ஜனங்களுக்காக மிகவும் மன்றாடி வந்தான். ஆனால் ஜனங்களோ உணராதவர்களாக இருந்தார்கள். தேவன் மோசேயோடே முகமுகமாயும் பிரத்தியட்சமாயும் பேசிக் கொண்டிருந்தார்.

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்.

வேதத்தில் பார்ப்போம்,

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
பிலிப்பியர்:4 :5.

மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
எண்ணாகம: 12 :3.

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மன மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
சங்கீதம் 37 :11.

பிரியமானவர்களே,

நம்முடைய உள்ளத்தில் சாந்தகுணம் இருந்தால் தான், துர்க்குணம், பொல்லாப்பு நம்மை விட்டு மாறும். நாம் கேட்கிற, வாசிக்கிற வசனத்தை நாம் சாந்தமாய் ஏற்றுக் கொள்ள முடியும். பொல்லாப்பு , துர்குணத்தை தேவன் பழைய புளித்த மா என்று கூறுகிறதை பார்க்கிறோம்.

1 கொரிந்தியர் 5:6-8

நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?

ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும் படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப் போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.

ஆகையால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக் கடவோம்.

ஆதலால் பிரியமானவர்களே,
நம்முடைய எல்லா வித பழைய சுபாவத்தை மாற்றி புதிய இருதயத்தை தேவன் இந்நாட்களில் தரும்படியாக நாம் எப்போதும் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நாம் இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொண்டோமானால் நீடிய சாந்தம் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும் அது தான் இரட்சிப்பு.

கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார். சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள் என்று சாந்தகுணமுள்ளவர்களை பற்றி சங்கீதம்:149:4,5-ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறது.

“இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று.. (மத்தேயு 21:4) – ல் வாசிக்கிறோம்.

நம் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து சாந்தகுணமுள்ளவர் என்றால், நாமும் அவ்வழி செல்ல வேண்டும் அல்லவா?

நீடிய சாந்தமுள்ள ஆண்டவருக்கு, நாமும் நீடிய சாந்தகுணமுள்ளவர்களாகவே தேவைப்படுகிறோம்.

ஆகவே நாம் கர்த்தரிடம் நீடிய சாந்தகுணத்தை பெற்றுக் கொள்ளும் படி கேட்போம். மோசேயைப் போல நம்மை சுற்றிலும் எத்தனை இடர்பாடுகளில் இருந்தாலும் சாந்தகுணத்தை தரித்தவர்களாய் வாழுவோம்.

நீடிய சாந்தகுணத்தை தேவன் நம் யாவருக்கும் தந்து நம்மை ஆசீர்வதித்து வழிநடத்தி காப்பாராக.
ஆமென்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *