Blessed is the one who trusts in the LORD
விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
நீதிமொழி: 16: 20.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே!
விவேகமாய் நற்காரியங்களை போதிக்கிற கர்த்தராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறி போய் விட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உட்கார்ந்துக் கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, “சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்” என்று கூறியது.
இதைக் கேட்ட சிங்கம் “அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது” என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.
இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நட்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் ஏதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, “இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்” என்று குரங்கை முதுகில் ஏற்றிய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, “இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகி விட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே” என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி விசி எறிந்து விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஓடியே போய் விட்டது.
இதைப் போன்று நாம் பணிபுரியும் இடத்திலோ அல்லது சமூகத்திலோ இந்த குரங்குகளை போல் பலர் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.
“கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்” இக்கட்டான சூழ்நிலையிலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதை விட விவேகத்துடன் செயல்பட்டால் தான் வெற்றி நிச்சயம். பொருளாதார நிலைமையும் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.
வேதத்தில் பார்ப்போம்,
தன் வழியைச் சிந்தித்துக் கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
நீதிமொழி: 14 :8.
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக் கடவன்.
யாக்கோபு 3 :13.
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
நீதிமொழி: 27: 12.
பிரியமானவர்களே,
விவேகம் உள்ளவர்களைத் தான் விவேகி என்பார்கள். அவர்கள் செயலிலே வேகம் இருக்கும். சிந்தையிலே விவேகம் இருக்கும். ஒருவிதக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தே இவர்கள் செயல்படுவார்கள்.
விவேகம் என்பதற்கு பகுத்தறிவு, புத்திக் கூர்மை, மதிநுட்பம், ஞானம், அறிவு, சாமர்த்தியம் என்று பொருள் கொள்ளலாம்.
விலங்கினங்கள் எதற்குமே அடிமை ஆவதில்லை. ஆனால், மனிதனோ, பணத்தாசை பிடித்தவனாக, பாசத்தால் பலவீனமானவனாக உயிருக்குப் பயப்படுபவனாக, முரடனாக, அப்பாவியாக, பல்வேறுபட்ட குணம் படைத்தவனாக இருக்கிறான்.
இதனால் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் விவேகம் என்பது தீமையைக் குறைத்து நன்மையை நாடுவதாகும்.
கடும் போட்டிகள் சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று விவேகம். அடுத்து என்ன செய்வது? என்று எல்லா காலக் கட்டங்களிலும் தெளிவாக அறிந்து செயல்படுவது தான் விவேகம்.
கடலின் ஆழத்தில் முத்தைக் கண்டுபிடிப்பது போல பிரச்சனைகளின் ஆழத்தில் முடிவை, அல்லது தீர்வைக் கண்டுபிடிப்பது தான் விவேகம்.
விவேகம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்து விவேகத்துடன் எதிர்கொண்டு கடந்து வந்தவர்களே இன்றைய வெற்றியாளர்கள்.,
ஆம். எனக்கு அருமையானவர்களே,எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகமாகும்.
இருள் தடுமாறச் செய்கிறது. விவேகம், ஞானம் என்கிற வெளிச்சம் உற்சாகம் தருகிறது. அபரிதமான நம்பிக்கையைத் தருகிறது. விடியலைக் காண செய்கிறது.
வேதப் பிரமாணத்தைக் கைக் கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்.
நீதிமொழி:28:7 என்று வேதம் கூறுகிறது.
ஆம் பிரியமானவர்களே,
நாமும் விவேகமுள்ளவர்களாய் வாழ வேத பிரமாணங்களை கைக்கொள்ள வேண்டும்.
அப்பொழுது நம் அருமை ஆண்டவர்
யோசேப்பை போல, ( ஆதியாக:41:39)
பெசலயேலைப் போல, (யாத்திரா:36:1)
தானியேலைப் போல, (தானியேல்:5:11)
செர்கியு பவுலைப் போல ( அப்போஸ்தலர்:13:7)நமக்கு விவேகத்தை தருவார் என்பதில் எந்தவித சந்தேகமில்லை.
இப்படிப்பட்ட விவேகமுள்ள வாழ்வை நாம் பெற்று அனுபவித்து கர்த்தருக்கு சாட்சியுள்ள வாழ்வை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை புரிவாராக.
ஆமென்