உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். ஏசாயா 41 :13
எனக்கு அன்பானவர்களே!
ஏல்ஷடாய் என்னும் நாமமுடைய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பல ஆண்டுக்கு முன்னர் கொலம்பஸ் கடலில் பயணம் செய்தார் ஜான் பிராங்கிளின்.
ஒரு கப்பல் ஐரோப்பாவிலிருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்தது.அவை உலகின் விளிம்பிலிருந்து விழுந்து விடும் அல்லது பயங்கரமான ஆபத்தை எதிர்கொள்ளும் என்பது ஜனங்களுடைய பொதுவான நம்பிக்கையாயிருந்தது.
அப்படி ஒரு பயம் அவர்களிடம் காணப்பட்டது. இங்கிலாந்தில், கிங் நான்காம் ஹென்றியின் முந்தைய காலத்தில் கடலைக் குறித்து ஒரு பழங்கால வரைபடம் இருந்தது.
அதில், வரைபடத் தயாரிப்பாளர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில், “இங்கே டிராகன்கள் இருக்கிறது; இங்கே பேய்கள் இருக்கிறது; இங்கே ஆபத்து இருக்கிறது” என்ற எச்சரிப்பின் வார்த்தைகளை எழுதி வைத்திருந்தனர்.
மேலும் அந்த மூட எச்சரிக்கையின் அடிப்படையில், மாலுமிகள் அங்கு பயணம் செய்வதற்கு பயந்தார்கள். ஆனால், ஜான் ஃபிராங்களின் என்றொரு ஆங்கிலேய மாலுமி இருந்தார்.
அவர் ஆண்டவர் மீது பற்றுக் கொண்ட மனிதர். தேவனுடைய வார்த்தைகளை அவர் அறிந்திருந்தபடியால், அவர் அதே வரைபடத்தை எடுத்து, அந்த பயமுறுத்தும் வார்த்தைகளைத் தாண்டி,
“இங்கே ஆண்டவர் இருக்கிறார்” என்ற மூன்று வார்த்தைகளை இணைத்தார். ஆம் பயத்தை நீக்கும் வார்த்தைகளை அவர் அங்கு இணைத்தார். ஆம்,
விசுவாசிக்கிறவன் பதறான்.
உங்கள் வாழ்க்கையில் எந்த காரியமாகிலும் உங்களை மிகவும் தொந்தரவு செய்கிறதா? அல்லது உங்களைத் துன்புறுத்துகிற பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் நீங்கள் போராடுகிறீர்களா? அல்லது பயம் உங்களை மேற்கொள்ளுகிறதா?
“ஏல்ஷடாய்” என்ற தேவன் உங்களோடு இருக்கிறார்.
அவர் உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார். நீங்கள் எதிர்கொள்ளுகிற போராட்டங்கள் அனைத்திலும், தேவபெலனும் உற்சாகமும் தந்து உங்களை பெலன் அடைய செய்வார்
வேதத்தில் பார்ப்போம்,
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 41 :10
ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்;
எரேமியா 30 :10.
இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக் கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
ஏசாயா 43 :1.
பிரியமானவர்களே,
வேதத்தில் 365 நாட்களுக்கும் 365 முறை பயப்படாதே என்ற வார்த்தை இருக்கிறது என்று வேத வல்லுனர்கள் கூறுகின்றனர். இது எதை குறிக்கிறது என்றால் நாம் ஒவ்வொரு நாளும் பயப்படாமல் இருக்கும்படி நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் வாழ்க்கையிலும் இருண்ட காலங்களில் நீங்கள் பயணம் செய்யும் போது, “ஆண்டவர் உங்களோடு கூட இருக்கிறார்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆம் உங்களைக் கைவிடாமல் காப்பாற்றுவதற்கு அவர் எப்போதும் உங்களுடனே கூட என்றென்றும் இருக்கின்றார்.
கோலியாத் என்னும் பெயர் கொண்ட ஒரு வீரனை சந்திக்க ஒரு தேசமே பயந்த போதிலும், சாதாரண ஒரு சிறுவன், ஆடுகளை மேய்ப்பவன், தேவன் மேல் நம்பிக்கை வைத்து, கோலியாத்தை மிகச் சுலபமாக வீழ்த்தினான்.
தேவன் மேல் முழு நம்பிக்கை வைத்ததினாலேயே, ‘உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன்’ என்று தைரியமாக தாவீது கூறுகிறார்.
வானத்தை தமது கரங்களால் விரித்த ஜீவனுள்ள தேவனுடைய அன்பான கரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
ஆகவே, எல்லா சூழ்நிலைகளிலும் நாம் தேவன் மேல் நம்பிக்கை வைப்போம். அவர் நம்மை பலப்படுத்தி, நமக்கு உதவி செய்வார்.
மனிதனிடம் ஓடுவதற்கு பதிலாக, தேவனுடைய வாக்குறுதிகளை நம்பி அவரை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்கள் பிரச்சினைகள் யாவற்றிலிருந்தும் மகிமையான வழியில் உங்களை நடத்துவார்.
தேவன் தாமே ஏல்ஷடாயாக நம்மோடு இருந்து நம் தேவைகள் யாவையும் நன்மையாக செய்து முடித்து அவரின் வருகை பரியந்தமும் காத்து வழிநடத்துவாராக.
ஆமென்.