உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார். மாற்கு:9:50
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற தமிழ் பழமொழி உண்டு. உப்பு என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும்.
நீண்ட காலம் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க உப்பை பண்டைய காலத்திலே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு மனிதன் அறுக்கப்பட்ட இரண்டு ஆட்டு தோல்களை தன்னுடைய மோட்டார் வாகனத்தின் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு ஆப்ரிக்க நாட்டின் சூரிய உஷ்ணத்தில் நீண்ட தூரம் பயணமானான்.
அவன் இறுதியாக அந்த பெட்டியை திறந்தப் போது, அங்கே சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. அந்த தோல்களில் மேல் புழுக்கள் நடமாடிக் கொண்டிருந்தன.
புழுக்கள் இருந்தப் போதிலும்,அந்த ஆட்டு தோலை கழுவி அதன் மேல் முற்றிலுமாக உப்பிடப்பட்டது. அவை பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட மிருதுவான படுக்கை அறை தரை விரிப்புகளாக மாறின.
பண்டைய சீனாவில் தங்கத்திற்கு அடுத்தப்படியாக மதிக்கப்பட்டது. “உப்பு” (அல்லது ஆங்கிலத்தில் “சால்ட்”) என்பதற்கான லத்தீன் வார்த்தை சால் என்பதாகும்.
ரோம சாம்ராஜ்யத்தின் நாட்களில் இராணுவ படைவீரர்கள் தங்களுடைய ஊதியமாக (சாலரியம்) உப்பை பெற்றார்கள். இதிலிருந்து தான் ஊதியத்திற்கு ஆங்கில வார்த்தையான “சாலரி” வருகிறது.
நமது நாட்டில் கூட உப்பை மையமாக வைத்து “உப்பு சத்தியாக்கிரகம்” நடந்தது என்பதை அறிந்திருப்போம்.
இன்று பெரும்பாலான இடங்களில் உப்பானது சாதாரணமானதாகவும் குறைந்த விலையுள்ளதாகவும் இருக்கிறது.
நம்முடைய உடல்கள் சுமார் எட்டு அவுன்சு அளவான (230 கிராம்) உப்பை தன்னுள் கொண்டிருக்கிறது. அது இல்லாவிடில் நாம் மரித்துப் போவோம். ஆகவே, உயிருக்கு உப்பு இன்றியமையாததாக இருக்கிறது.
ஏதாவதொரு உணவை தயாரிக்கையில், சமையல் செய்பவர் உப்பை சேர்க்க மறந்து விடுவாரானால் மக்கள் அதை சாப்பிட மறுக்கும் அளவுக்கு அந்த உணவு சுவையற்றதாக ஆகிவிடுகிறது.
யோபு சொன்னது போல: “ருசியில்லா பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக் கூடுமா?” யோபு:6:6)
ஆகவே தான் நம் அன்பான இயேசு கிறிஸ்து நீங்கள் உப்பைப் போல் பயன்தர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே முதன் முதலில் உப்பைப் பற்றி பேசுகிறார்.
வேதத்தின் பார்ப்போம்,
நீ படைக்கிற எந்த போஜன பலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக, உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
லேவி:2:13
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
கொலோ:4 :6
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
மத்:5:13
பிரியமானவர்களே,
உப்பு பாதுகாக்கும் தன்மையுடையது. இயேசுவின் செய்தி அநேகருடைய ஜீவனை பாதுகாக்கக் கூடியதாக இருக்கிறது.
இயேசுவை பின்பற்றியவர்களால் அறிவிக்கப்பட்ட நற்செய்தி ஜீவனை பாதுகாக்கக் கூடியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை
அப் 13: 48-ல் பார்க்கும் போது , புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள் என்று பார்க்கிறோம்.
உப்பு வேதாகம காலத்தில் அநேக இடங்களில் பயன்படுத்தப்பட்டதை பார்க்கலாம். பொருட்களை பாதுகாக்கவும், பலியிடவும், உடன்படிக்கைக்காகவும் பயன்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் உப்பு பல நிறங்களில் காணக் கிடைக்கிறது. உப்பு எந்த நிறமாக இருந்தால் என்ன, அது தனது சுவை கொடுக்கும் தன்மையை இழக்கப் போவது இல்லை.
என் அன்பு நண்பர்களே,
நாமும் எந்த தேச வரைபடங்களில் பிரிந்து இருந்தாலும், நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றே என்ற உண்மையை நம் மனதில் கொள்ளுவோம்.
வேதத்தில் இயேசு “உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள்” என்கிறார். உப்பினை எப்படி உடைத்தாலும் அதன் உருவம் ஒரு போதும் மாறாது. அது மட்டுமல்ல அதன் தன்மையும், சுவையும் ஒரு போதும் மாறாமல் இருக்கும்.
அது போல் நமது வாழ்வில் கஷ்டங்கள், போராட்டங்கள் வரும் போதும் நாம் நமது கிறிஸ்துவின் மீதுள்ள அன்பையும் குணத்தையும் மாற்றாது பிறருக்கு பயனுள்ளவர்களாக வாழ வேண்டும்.
எப்படி கடலில் இருந்து தண்ணீரைப் செகரித்து அந்த தண்ணீரை பாத்தியில் விட்டு அதில் இருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி நன்றாக உலர்த்தப்பட்டு உப்பாகிறதோ,
அதை போலவே தேவன் உங்களையும் உலகத்திலிருந்து தனியாக பிரித்தெடுத்து, நம்மில் இருக்கிற பாவ சாபங்களை பரிசுத்த இரத்தத்தினால் கழுவி, மீட்டெடுத்து,
நல்லதொரு உப்பாக கர்த்தர் உங்களை உருவாக்கியிருக்கிறார்.
ஆகவே நாம் உப்பாக இருப்போம்.நாம் இனிப்பாக இருந்தால் பிறர் நம்மை விழுங்கி விடுவார்கள். கசப்பாக இருந்தால் உமிழ்ந்து விடுவார்கள். உப்பாக இருந்தால் தான் சரியாக பயன்படுத்துவார்கள்.
உப்பு எப்படி உணவில் கலந்து தன்னை மறைத்து,அந்த உணவிற்கு சுவையை கொடுக்கிறதோ, நாமும் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து கிறிஸ்துவின் தன்மையை மாற்றாது பிரதிபலிப்போம்
ஆம், நாம் கிறிஸ்து என்கிறதான சாரம் உள்ளவர்களாய் நாம் எதுவரைக்கும் நிலைத்திருக்கிறோமோ, அதுவரைக்கும் கனத்துக்குரியவர்களாயும் தேவனால் உயர்த்தப்பட்டவர்களாயும் இருப்போம்.
இப்படிப்பட்ட கனத்தையும், ஆசீர்வாதங்களையும் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.