ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். {இயேசு} லூக்கா 12:15
எனக்கு அன்பானவர்களே!
நமக்கு வாழ்வையும், சமாதானத்தையும் தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை” என்று சொல்லி கேட்டிருப்போம். இது ஒரு விதத்தில் உண்மைதான்.
சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது.
பணத்தை வைத்துக் கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது. புத்தகத்தை வாங்கலாம் புத்தியை வாங்க முடியாது.. என சொல்லிக் கொண்டே போகலாம்.
வாழ்வதற்கு பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவரே திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்.
மார்ட்டின் லூதர் கிங் கிறிஸ்தவ மதக் கோட்பாட்டை உருவாக்கியவர். ஏழ்மை நிலையிலிருந்த அவருக்குப் பல குழந்தைகள் இருந்தனர்.
பொருளும் செல்வமும் சேர்த்தால் தான் உன் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று பலரும் கூறி வந்தனர்.
அதற்கு லூதர் கிங், என் குழந்தைகளுக்குப் பொருள் சேர்த்து வைப்பதைக் கடமையாகவும் பெருமையாகவும் நான் ஒரு போதும் கருதவில்லை.
கடவுளின் அருளே செல்வத்திலும் சிறந்த செல்வம் அதுவே என் பிள்ளைகளுக்கு போதும் என்றார்.
எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும். அந்த நல்ல எண்ணத்தை உருவாக்குவதும் தெய்வ பக்தியே.
வேதத்தில் பார்ப்போம்
வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக் கொள்ளுவான் என்று அறியான்.
சங்கீதம் 39 :6.
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்
குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
லூக்கா 12 :15.
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்து கொண்டாரென்று அறியுங்கள், நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
சங்கீதம் 4 :3.
பிரியமானவர்களே,
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று
1 தீமோத்தேயு 6:10.-ல் பார்க்கிறோம்.
பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது ஆசை வைத்திருப்பது தான் தவறு.
பணம் சம்பாதிக்கவே கூடாது என்றோ, பணக்காரர்கள் எல்லாரும் மோசமானவர்கள் என்றோ வேதம் சொல்வதில்லை.
பணம் வைத்திருப்பது தவறில்லை. ஆனால், பணமே கதி என்று இருப்பது தான் தவறு.
“நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
எபிரெயர் 13:5
இருப்பதை வைத்து திருப்தியோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு பணக் கஷ்டமே இருக்காது என்று சொல்ல முடியாது.
ஆனால், அவர்கள் பணத்தைப் பற்றிய கவலையிலேயே மூழ்கிவிட மாட்டார்கள். உதாரணத்துக்கு, அவர்களுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அதை பற்றி அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
அதற்கு பதிலாக, அப். பவுலைப் போல் நடந்து கொள்வார்கள்.
“என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்.
தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
பிலிப்பியர் 4:11-12 என்றார்.
பணம் வைத்திருந்தால் தான் எல்லாரும் என்னை மதிப்பார்கள் என்று நினைக்கிறோமா??
பணம் பாதாளம் வரை பாயும்.. பரலோகத்துக்குப் பாய கிருபையை சம்பாதிக்க வேண்டும். ஜெபிக்க வேண்டும். தேவ கிருபையை சார்ந்து கொள்ள வேண்டும்.. கிருபையளிக்கும் கர்த்தரை நாம் தேட வேண்டும்.
ரஷ்யாவை ஆண்ட சர்வாதிகாரி இறைவனைப் பற்றிய சிந்தனையோ பயமோ இல்லாதவர். அவர் தன்னுடைய கடைசி காலத்தில் நாட்டு மக்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில் நாடும் வீடும் வளர்ச்சி பெற்று,நலமாய் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினார்.
தெய்வத்துக்கு அஞ்சக் கூடியவர்கள் தான் வாழ்க்கையில் தவறுகள் செய்ய அஞ்சுவார்கள். தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் பிறருக்கு உதவி செய்வார்கள்.
உதவி செய்ய இயலாவிட்டாலும் மனதால் கூட மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள்.
எனவே, மனிதனை பக்குவப்படுத்த கூடிய தெய்வ பக்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொள்ளுவோம்.
கடவுள் மீதுள்ள பக்தியே நமது துன்பத்தை நீக்கி நமக்கு இன்பத்தையும், சமாதானத்தையும், வாழ்வையும் வழங்குகிறது.
எனவே, நமது அருமை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நேசிப்போம். இவ்வுலகில் மனரம்மியத்தோடு வளமாய் வாழுவோம்.
ஆமென்.