இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும். 2 நாளா 7 :15
எனக்கு அன்பானவர்களே!
நம்மை காண்கிற தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
அநேக ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பாரத பிரதமர், பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தைப் பார்வையிடச் சென்றிருந்தார்.
அப்பொழுது அங்குள்ள அதிகாரிகள் ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒவ்வொருவராக சந்தித்து கைகுலுக்கிக் கொண்டே வந்தார்.
திடீரென அவர் தமக்கு தெரிந்த ஒரு நபரை அடையாளம் கண்டு, அவரிடம் “இங்கே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என வினவினார்.
அதற்கு அவர், “ஐயா! இங்கே நான் ஒரு இளநிலைப் பொறியாளராக வேலை செய்கிறேன்” என்று கூறினார். ஜவஹர்லால் நேரு, “இன்னுமா நீ இளநிலைப் பொறியாளனாயிருக்கிறாய்?” என கேட்டவாறே, பொது மேலாளரை ஒரு பார்வை பார்த்து விட்டு, அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தார்.
மறுநாளில் அந்த இளநிலைப் பொறியாளர் நிர்வாகப் பொறியாளராகப் பதவி உயர்வு செய்யப்பட்டார். எப்படியெனில், பிரதம மந்திரியின் முழு கவனமும், கரிசனையும் அந்த மனிதன் மீதே இருந்தபடியினால், அவர் ஒரே நாளில் பதவி உயர்வு
செய்யப்பட்டார்.
அன்பானவர்களே,
நமது அன்பு ஆண்டவரின் பார்வை நம் மீது பட வேண்டுமானால் இரவும் பகலும் அவருடைய வார்த்தைகளை தியானித்து அவைகளின் படி செய்ய கவனமாயிருக்கும் போது யோசுவா 1:8 கர்த்தருடைய கண்கள் நம் மீது கவனமாயிருக்கும். அவர் நம் விண்ணப்பத்திற்கு செவிகொடுத்து நம்மை உயர்வான இடத்தில் வைப்பார்.
வேதத்தில் பார்ப்போம்,
தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணும் படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது,
2 நாளா 16:9.
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமும் வெளியரங்கமுமாயிருக்கிறது,
எபிரேயர் 4:13.
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
சங்கீதம் 34:15.
பிரியமானவர்களே,
“கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும், தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது” நீதி 15:3. என்ற வேத வசனத்தின்படி, உங்கள் நிலைமையை கர்த்தர் கவனித்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
“ஆகார்” என்ற ஆபிரகாமின் அடிமைப் பெண் கர்ப்பிணியாக, தனிமையில், வனாந்தரத்தில் அலைந்து திரிந்ததைக் கண்ட கர்த்தர், அவளைத் தேடிவந்து, அவள் நடக்க வேண்டிய சரியான பாதையில் அவளை வழிநடத்தினார்.
“நீர் என்னைக் காண்கிற தேவன். என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா!” என்று அவள் மகிழ்ச்சியுடன் கூறுவதை வேதத்தில் வாசிக்கிறோம் ஆதி16:13.
அவர் காண்பித்த வழியில் அவள் நடந்தபொழுது, நன்மையினால் அவளை திருப்தியாக்கினாரே!
இவ்வுலக மனிதனான முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பார்வை தனக்கு தெரிந்த நபர் மீது விழுந்தபோது, அவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.
நமது அன்பு ஆண்டவர் உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கிறார். அவர் உங்களை உயர்த்தாமலிருப்பாரோ? நிச்சயமாக உயர்த்துவார்.
“குடும்பத்திலே இன்னும் கடனும், வியாதியும், பிரச்சனையும் இருக்கிறதா? அசுத்த ஆவிகளினால் அலைக் கழிக்கப்படுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம்.
ஆண்டவரின் கண்கள் உங்களை நோக்கியிருக்கிறது. அவர் நம்மை காண்கிற தேவன். அவருடைய தயவினால் உங்களுடைய எல்லாவிதமான பிரச்சனைகளும் பனி போல எளிதில் மறைந்து விடும்.
இப்படிப்பட்ட சந்தோசமும் மகிழ்ச்சியும், நிறைவான வாழ்வும், வாழ, நம் அருமை இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நமக்கு உதவி செய்வாராக.
ஆமென்.