செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? நீதிமொழி:27 :24
எனக்கு அன்பானவர்களே!
நிலையான ஒரே செல்வமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
மனித வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியத் தேவை.எவ்வளவு தான் குணம் இருந்தாலும் பணம் தேவையாக இருக்கிறது.
பணத்தைப் பற்றிச் சொல்லும் போது “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே”,
“பணம் பாதாளம் வரை பாயும்”.
“பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்” என்பார்கள்.
ஒரு செல்வந்தரும் ஞானியும் பேசிக் கொண்டிருந்த போது செல்வந்தர் கூறினார்,” செல்வம் எந்த வழியில் வேண்டுமானாலும் வரலாம் என்று சொன்னார்”.
உடனே ஞானி, அப்படி சொல்லாதே “செல்வம் நேரான வழியில் தான் வரவேண்டும்”என்று கூறிவிட்டு ஒரு டம்ளர் பாலை குடிக்க கொடுத்தார்.
அவனும் குடித்து விட்டு, இதென்ன மண்ணெண்ணெய் வாடை வருகிறது என்று கேட்டான்.
உடனே ஞானி, அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினால் மண்ணெண்ணெய் வாடை வராது. நான் சிம்னி விளக்கில் வைத்துக் காய்ச்சினேன்.
பால் ஒன்று தான் ஆனால் நான் காய்ச்சிய முறைதான் வேறு.
அது போலவே செல்வம் ஒன்று தான். ஆனால் வருகிற முறை தான் வேறு.
செல்வம் நேரான வழியில் வந்தால் தான் அது நம்மோடு கூட இருக்கும்.அது நமக்கு மகிமையை தரும்.
பணம் என்பது கடல் நீர் போன்றது. குடிக்க குடிக்கத் தாகத்தை அதிகம் ஆக்குவதே அதன் தன்மை!
“அநியாயமாக கதவின் வழியாக வரும் செல்வம், ஜன்னல்களின் வழியாக வெளியே செல்லுகிறது” என்று எகிப்து நாட்டில் பழமொழி.
பணம் கடல் நீர் போன்றது.அளவாய் பயன்படுத்துவோம். வளமாய் வாழ்வோம்
வேதத்தில் பார்ப்போம்,
வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும், செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவெட்டாது.
பிரசங்கி 5:12.
அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
பிரசங்கி 5:13.
பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே: இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
நீதிமொழி: 1:19.
பிரியமானவர்களே,
பாருங்கள், “பணம், பாம்புக்கு ஒப்பானது. அதில் நஞ்சும் உண்டு, மருந்தும் உண்டு” என்று இமாம் கஸாலி அவர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். எல்லாம், முறையாக பயன்படுத்தினால் வாழ்வு தான்.
பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப் பிரியன் செல்வப் பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே பிரசங்கி:5:10;6:1,2. என்று கூறுகின்றார்.
பணம் தேவையை திருப்தியாக்குவதில்லை. தேவையை அதிகரிக்கும். எந்த ஒரு செல்வந்தனும் தனக்கு இருக்கிறது போதும் என திருப்பியடைந்ததை நாம் கண்டதில்லை.
பணம் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும்.
இப்படி மனுஷன் வாயை கட்டி வயிற்றை கட்டி சம்பாதிப்பதை பல நேரங்களில் அவன் அனுபவிப்பதில்லை.
எனவே அதுவும் மாயையாய் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது .
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள் 1தீமோத்தேயு:6:10,11.
நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்த குணத்தையும் அடையும்படி நாடு [1தீமோத்தேயு:6:10,11.என்று பவுல் கூறுகின்றார்.
நாம் சம்பாதிக்கும் செல்வம் நிலையற்றது. நிலையான செல்வம் நம் இயேசு ஒருவரே. எனவே தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் பண ஆசையினால் விசுவாச வாழ்க்கையை விட்டு விலகாமல் தேவனுடைய குணாதிசயங்களை சம்பாதிக்கும் படி நாடுவோம்.
வேதம் கூறுகிறது போதுமென்ற மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். பண ஆசை கொண்ட சகேயுவை ஒருநாள் இயேசு சந்தித்தார். பண ஆசை போனது. இரட்சிப்பை கண்டு கொண்டான்.
இரட்சிப்பை பெற்றுக் கொண்ட நாம் விசுவாசத்திலிருந்து நம்மை விலக செய்யும் பணஆசையை உதறி தள்ளிவிட்டு நல்ல போராட்டத்தை போராடி நித்திய ஜீவனுக்கென்று ஓடுவோம்.
நிலையான செல்வமாகிய இயேசு கிறிஸ்துவை பற்றிக் கொள்வோம்.அவர் தருகிற ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வோம்.
ஆமென்.