Daily Manna 106

நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். 1 கொரி 14 :15

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

தமிழ் நாட்டிலுள்ள ஒரு பிரபல ஊழியக்காரரிடம் ஒரு வாலிபனை கொண்டு வந்தார்கள். அவனோடு வந்தவர்கள் அந்த ஊழியக்காரரிடம் ஐயா இந்த வாலிபன் பொது இடத்தில் உங்களை தூஷித்ததினால் திடீரென்று பேச முடியாமல் ஊமையாகி போனான் என்றனர்.

அந்த ஊழியக்காரரும் அந்த வாலிபனுக்காக ஜெபிக்க முற்படும் போது ஆவியானவர் அந்த ஊழியக்காரரிடம் கண்டிப்புடன் இவனுக்காக ஜெபிக்காதே என்று எச்சரித்தார்.

உடனே அந்த ஊழியக்காரர் அந்த வாலிபனிடம் தம்பி நான் உன்னை மன்னித்து விட்டேன். ஆனால் நீ போய் ஆண்டவரிடம் மன்னிப்பு கேள். நிச்சயம் உன்னை குணமாக்குவார் என்று சொல்லி அனுப்பி விட்டார்.

இன்றைக்கு பலருடைய வாழ்க்கையில் துன்பங்கள் அனுமதிக்கப்படுவதற்கு காரணம் அவர்கள் செய்யும் துணிகரமான பாவங்களின் விளைவுகளே ஆகும்.

இதை அறிந்து கொள்ளாமல் அங்கு செல்லும் ஊழியக்காரர்கள் மற்றும் விசுவாசிகள் இயேசுவின் நாமத்தை கொண்டு யுத்தம் பண்ணி ஜெபிக்க ஆரம்பிக்கின்றனர்.

தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்காக நீங்கள் யுத்தம் பண்ணி ஜெபிக்கும் போது அதன் விளைவுகள் உங்களை நிச்சயம் பாதிக்கும். எனவே ஆண்டவரின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நபருக்காக ஒருவேளை ஆவியானவர் தேவனிடம் மன்றாடி இரக்கத்திற்காக ஜெபிக்கத் தூண்டுவார்.

பில்லி சூனிய கட்டுகளினாலும் பிசாசுகளினாலும் கட்டப்பட்ட ஒருவருக்காக நீங்கள் யுத்தம் பண்ணி ஜெபிக்கும்படி ஆவியானவர் ஏவுவார். மேலும் தேசத்தின் மக்கள் செய்த பாவங்களுக்காக கண்ணீரோடு மன்றாடி ஜெபிக்கும்படி தூண்டுவார்.

விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். விசுவாசத்தில் உறுதியாய் இருந்து பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று வேதம் சொல்லுகிறது.

விசுவாசம் என்பது பரிசுத்த ஆவியானவரால் அருளப்படுகிற ஆவியின் வரம்
[ 1கொரி 12 ], விசுவாசம் என்பது பரிசுத்த ஆவியானவரால் உருவாக்கப்படுகிற ஆவியின் கனி
[ கலா 5:22,23 ], ஆவியில் நிறைந்து நாம் ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் விசுவாசம் என்கிற வரத்தினால் நம்மை வர்த்திக்கப் பண்ணுகிறார்.

அது மட்டுமல்லாமல் பரிசுத்த ஆவியானவரால் அருளப்படும் விசுவாசத்தைக் கொண்டு ஏறெடுக்கும் ஜெபம் நம் வாழ்க்கையில் ஒரு எழுப்புதலை ஏற்படுத்துகிறது.

இத்தகைய ஜெபம் தேவன் நமக்கு கொடுத்த அதிகாரங்கள் மற்றும் ஆவிக்குரிய ஆயுதங்களை உறுதியோடு பயன்படுத்தி சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ள பெலன் அளிக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

நீங்கள் ஜெபம் பண்ணும் போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
மாற்கு 11:25.

நீங்கள் சொஸ்தமடையும் படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5 :16.

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
யாக்கோபு 5 :15.

பிரியமானவர்களே,

நாம் ஜெபிக்கும் போது நம்முடைய மனது புதுபிக்கப்படுகிறது அதாவது பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆளுகை செய்யும் போது நம் மனது புதுபிக்கப்பட்டு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்கிறோம்.

அடுத்ததாக தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்கிறோம். இப்படி ஜெபிக்கிறவர்கள் மாத்திரமே வெளிப்பாடுகளையும், தேவ சித்தத்தையும் அறிந்து கொண்டு ஜெபித்து வெற்றி பெறுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவன் ஆவியாயிருக்கிறார் அவரை தொழுது கொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுது கொள்ள வேண்டும் என்றார்
[ யோவான் 4:24 ]

அதே போல அப்.பவுல், என் பேச்சும் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நய வசனிப்புள்ளதாயிராமல் ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருக்கிறது என்று
1கொரி 2:5 ல் குறிப்பிட்டுள்ளார்.

இதே காரியத்தை, அப்.பேதுரு,
1பேதுரு 1:12ல் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்களாய் சுவிஷேம் பிரசங்கிக்கப்பட வேண்டும், மேலும்
2பேதுரு 1:21ல் தீர்க்கதரிசினங்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசப்பட வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துவதை நாம் வாசித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்ததாக பரிசுத்த ஆவியானவரே சகலத்தையும் போதிக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. எனவே மேல் வீட்டறையில் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டதற்கு பிறகு கர்த்தருடைய அப்போஸ்தலர்கள் எல்லா காரியங்களையும் பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையின் படியாகவும் அவர் வழிநடத்துதலின் படியாகவும் செய்தார்கள்.

எனவே நம்முடைய ஜெபங்களும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குட்பட்டு இருக்குமானால் அது மிகுந்த பெலன் கொடுக்கும். இத்தகைய பெலனை நன்றாக அறிந்த பவுல் எபேசியர் 6:18ல் ஆவியினால் ஜெபம் பண்ணும்படி எபேசியர் பட்டணத்துக்கு அறிவுரை சொல்லுகிறார்.

இன்றைய சூழ்நிலைகளில் நம்முடைய ஜெபமும் இப்படியாகத் தான் இருக்க வேண்டும். அப்பொழுது நமக்கு ஜெயம் கிடைக்கும்.

சில வேளைகளில் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தாலும், எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை அறியாதிருக்கிறோம். இதை தான் பவுல் பெலவீனம் என்கிறார்.

இத்தகைய பெலவீனமான நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் எப்படி ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று கற்று தருகிறார்.

ஒருமுறை ஒரு ஊழியக்காரர் யாராலும் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்பட்ட ஒரு தொழிலதிபருக்காக ஜெபிக்கும் படிக்கு அழைக்கப்பட்டார் . ஊழியர் ஜெபிக்கும் போது ஆவியானவர் அந்த ஊழியக்காரரிடம் அந்த மனுஷருக்காக நீ ஜெபிக்க வேண்டாம்
என்றார் .

ஏனென்றால் அவர் செய்த கொடிய பாவத்தினிமித்தம் அவர் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு கட்டளையிடப்பட்டிருக்கிறது என்றார்.

பரிசுத்த ஆவியானவர் அனுமதி மறுக்கும் இடங்களுக்கு சென்று ஜெபிப்பது நல்லதல்ல. நம்மிடம் பரிசுத்தமில்லாமல் குறைகள் வைத்து கொண்டு அந்தகார வல்லமைகளுக்கு விரோதமாக நாம் யுத்தம் பண்ணி ஜெபிக்க கூடாது.

பாருங்கள் யோசுவா 7:13ல் சாபத்தீட்டானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்கும் வரை நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்க கூடாது என்று கர்த்தர் சொல்லுகிறார்

பவுலின் விண்ணப்பத்தை நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன் கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன் என்று சொல்லுகிறார். நாமும் ஜெபம் பண்ணும் போது ஆண்டவரின் சித்தம் இன்னது என்று அறிந்து ஜெபிப்போம்.

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல் அரண்களை நிர்மூலமாக் குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது.

பரிசுத்த ஆவியானவரால் அருளச் செய்யப்பட்ட ஜெபம் உங்களுக்கு அதிகாரங்களை கொடுத்து பிசாசின் ராஜ்ஜியங்களை தகர்த்தெரிய செய்கிறது.

எனவே பிரியமானவர்களே
பரிசுத்த ஆவியானவரை அனுமதித்து அவருக்கு நம்மை ஒப்பு கொடுத்து வேதத்தில் கூறியுள்ளது போல அவர் நம்மில் செயல்பட அனுமதிப்போம். அவரின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம்.

கர்த்தர் தாமே நம்முடைய ஜெப வாழ்க்கையில் வெற்றி பெற இந்த ஓய்வு நாளில் நமக்கு உதவி செய்வாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *