Daily Manna 11

இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். லூக்கா 6:45.

எனக்கு அன்பானவர்களே!

நல் வார்த்தைகளால் நம்மை மகிழ்விக்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான்.

அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்” என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான்.

அவனும் துறவியிடம் “வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?” என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி “மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்” என்று சொன்னார்.

அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு துறவி “இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை.

அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, “முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது” என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

வேதத்தில் பார்ப்போம்,

தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
நீதிமொழி: 13 :3.

உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்கு முன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
பிரசங்கி 5 :6.

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
சங்கீதம் 37 :30.

பிரியமானவர்களே,

பேசுவது என்பது இறைவன் கொடுத்த வரம். விலங்கு, பறவைகள் பேசுவதில்லை. மனிதனுக்கு மட்டுமே பேசும் சக்தி உண்டு.

மனிதன், சக மனிதனிடம் தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் காலக் கண்ணாடி தான் இந்த பேச்சு. எந்த ஒரு காரியமும் வெற்றியா, தோல்வியா
என்பதை பேசுகிற பேச்சை வைத்து தான் முடிவு செய்ய முடியும்.

சிலரின் பேச்சு வியக்க வைக்கும், சிலரின் பேச்சு வியர்க்க வைக்கும், சிலரின் பேச்சு மலைக்க வைக்கும். எப்படி இருப்பினும் நம் பேச்சானது பிறரை காயப்படுத்தாமல் இருந்தால் அதுவே சிறப்பு.

வள்ளுவர் தனது குறளில், பயனுள்ள சொற்களை பேச வேண்டும் என்பதை “சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்” என்றார்.

“வில்லில் இருந்து புறப்பட்ட அம்பும், அருவியில் இருந்து கால்வாயில் விழும் நீரும்,மனிதனின் வாயிலிருந்து வந்த வார்த்தை ஆகிய இவை மூன்றும் உலகில் என்றும் மீண்டும் திரும்பாது.

அதனால் தான் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், நல்ல வார்த்தைகளாக இருக்கட்டும் என்பதற்காகவே நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள அதில் ஈரம் இருக்குமாறு கடவுள் படைத்திருக்கிறார்.

வாய்க்கு போகும் உணவு பொருட்களில் அறுசுவையை எதிர்பார்க்கும் நம் நாக்கு, அதே வாய் வழியே வெளியே வரும் வார்த்தைகளையும் சுவையாக பேசினால், தேவையில்லாத பல சங்கடங்கள் தவிர்க்கப்படும்.

நாம் அனைவரும் இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேசக் கற்றுக் கொள்கிறோம். ஆனால், எத்தனை வயது ஆனாலும் எப்படி பேச வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்கிறோமா என்பது தான் சந்தேகம்.

வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதை விட யாரையும் பேச்சால் வேதனை படுத்தவில்லை என்பதே சிறந்தது.

எனவே, சிந்தித்து பேசப்படும் பேச்சு, சிக்கல்களை களைகிறது. சீரழிவை தடுக்கிறது. சிறப்பான பலன்களை தருகிறது.

உள்ளத்தில் இருந்து வரும் நல்ல பேச்சு உறவுக்கு கை கொடுக்கிறது. இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. நம்மை உயர்வான நிலைக்கு கொண்டு செல்கிறது.

எனவே, பொருள்பட பேசுவோம். பொழுதை நம் வசமாக்குவோம்.

வேதத்தில் நாம் பார்க்கும் போது, நம் அருமை ஆண்டவர் இயேசு பேசும் வார்த்தைகளைக் கேட்க திரளான மக்கள் திரண்டு வந்து, அவர் பேசும் வார்த்தைகளை கேட்டு இன்புற்று அற்புதங்களை கண்டனர்.

நாமும் அவரின் வழிகளை பின்பற்றி நல்ல வார்த்தைகளை பேசுவோம்.
இப்படிப்பட்ட நல்வார்த்தைகளால் மற்றவர்களை நல்வழிப்படுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.

ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *