Daily Manna 116

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். யாக்கோபு 4 :10

எனக்கு அன்பானவர்களே,

தமது கிருபையை தாழ்மையுள்ளவர்களுக்கு அளிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

தாழ்மை என்பது ஓர் இளைப்பாறுதலுக்கான ஜீவிதம். தாழ்மையுள்ள ஒரு மனிதன் பரிகாசிக்கப்படும் போது, நிந்திக்கப்படும் போது, துன்புறுத்தப்படும்போது, அவமானப்படுத்தப்படும் போது தன் உணர்வால் தன் மனதை புண்படுத்த முடியாது.

ஏனென்றால் அவன் தாழ்மையின் சுபாவத்தை அணிந்திருக்கிறான். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும் கிருபையும் அளிக்கிறார்.

ஒரு மனுஷன் கர்த்தருக்கு பிரியமானவைகளை செய்ய வேண்டுமானாலும் அல்லது ஒரு நல்ல விசுவாசியாக கர்த்தருக்காக இந்த உலகத்தில் ஜெயமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டுமானாலும் அவனுக்கு மிகவும் தேவையான ஆவிக்குரிய ஆயுதம் தாழ்மை ஆகும்.

இந்த தாழ்மை என்கிற குணநலன் இல்லாத எந்தவொருக் மனுஷனையும் அதாவது அந்த மனுஷன் ஒருவேளை கர்த்தருடைய ஊழியக்காரராக கூட இருக்கலாம்.

அவர்களிடத்தில் இந்த தாழ்மை இல்லாத பட்சத்தில் கர்த்தர் அவர்களையும் வெறுக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

வேதம் சொல்லுகிறது, தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.
யாக்கோபு 4:6 , 1பேதுரு 5:5, அது மட்டுமல்லாமல் யாரிடத்தில் எல்லாம் இந்த தாழ்மை இல்லையோ அவர்கள் பாவம் செய்கிறார்கள் என்றும் அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் விழுந்து போகிறார்கள் என்றும் வேதம் நமக்கு அழகாக சொல்லுவதை நாம் நீதிமொழிகள்: 21:4 மற்றும் 16:18 ல் பார்க்க முடிகிறது.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து மிகவும் உயர்ந்தவராய் இருந்தும் இந்த உலகத்தில் வாழுகிற பாவியான தம்முடைய பிள்ளைகளை மீட்பதற்காக அவர் தம்மைத் தாமே தாழ்த்தி பூமிக்கு இறங்கி வந்தார் என்று வேதம் சொல்லுகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த தாழ்மை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் எவ்வளவு காலம் இருந்தது என்று பார்ப்பீர்களானால் அவர் இந்த பூமியில் மனுஷகுமாரனாக வந்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் வரை காணப்பட்டது என்று வேதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசுவின் பிள்ளைகளாக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள் முதலாவது அவர் நடந்தது போல அதாவது அவர் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாகக் வந்து எப்படி ஒரு ஜீவனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து காட்டினாரோ அதே போல நாமும் வாழ வேண்டும்.

அப்படி நாம் வாழ வேண்டுமானால் கிறிஸ்துவின் சிந்தையாகிய இந்த தாழ்மையை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சரீரத்தில் அணிகலனாக அணிந்து கொள்ள வேண்டும் அப்பொழுது மாத்திரமே கர்த்தருடைய கிருபை நமக்கு கொடுக்கப்படும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

வேதத்தில் பார்ப்போம்,

அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும் படி தம்மைத் தாழ்த்துகிறார்.
சங்கீதம் 113:6.

கர்த்தர் உயர்ந்தவராய் இருந்தும் தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார் மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
சங்கீதம் 138:6.

ஒருவரோடொருவர் ஏக சிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.
ரோமர் 12 :16.

பிரியமானவர்களே,

நாம் எவ்வளவு நீதிமானாக காணப்பட்டாலும் இவையெல்லாம் கர்த்தருக்கு முன்பாக ஒன்றும் இல்லாததாக அதாவது அழுக்கான கந்தையாய் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

இன்று அனேகர் தங்களிடம் அதிக திறமை இருக்கிறது. ஆகவே கர்த்தர் தங்களைத் தான் அவருடைய ஊழியத்திற்கு பயன்படுத்துவார் என்று தப்பான எண்ணம் கொள்வதை அனேகருடைய வாழ்க்கையில் பார்க்க முடிகிறது.

அவர் ஒரு கழுதையைக் கொண்டும் தம்முடைய வேலையை செய்து முடிக்க அவரால் முடியும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

ஆகவே முதலாவது இந்த உலகத்தில் நீங்கள் எவைகளை மேன்மையாக எண்ணுகிறீர்களோ அவைகள் எல்லாவற்றையும் முதலாவது தூக்கி எறிந்து விட்டு கர்த்தருக்கு முன்பாக முதலில் உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது மாத்திரமே கர்த்தர் உங்களைப் பயன்படுத்த முடியும் .

ஏனென்றால்? பெருமையோடு வாழுகிறவர்களை கர்த்தரால் ஒருபோதும் தம்முடைய பிள்ளையாக எண்ணுவதுமில்லை. தம்முடைய கிருபையை கொடுப்பதுமில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.

பெருமையோடு யாரெல்லாம் வாழுகிறார்களோ அவர்களை எல்லாம் தேவன் அருவருக்கிறார். என்று வேதம் தெளிவாக நமக்கு சொல்லுகிறது.

​ தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான் தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
லூக்கா 18:14.
இன்று சகல துர்குணத்திற்கும் காரணம் பெருமை.

தாழ்மையுள்ளவன் ஒருபோதும் இடறல் அடைவதில்லை. தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளை பேசுவார்கள்.

அவர்கள் வாழ்க்கை முழுவதையுமே தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்கச் செய்கிறார். இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார். பிதா அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார்.

பொறுமையோடு நீடிய சாந்தமுள்ள சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தினார். நீங்கள் பிறருக்கு நன்மை செய்து அதனால் பாடுபடும் போது பொறுமையோடு சகித்தால் அதுவே தேவனுக்கு பிரியம்.

இன்று மனிதர்கள் மத்தியில் சகிப்புத் தன்மை இல்லை, பொறுமை இல்லை, சாந்தகுணம் இல்லை.

அவருடைய குணாதிசயங்களை பெற்று வாழ்கின்றவர்களுக்கு எல்லா செயலிலும் சமாதானம் உண்டாகும். நீடிய பொறுமையுடையவர்கள் அவரிடத்திலிருந்து இரக்கமும் கிருபையும் பெற்றுக் கொள்வார்கள்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள மனத் தாழ்மையோடு, தேவன் தருகிற உயர்வுகளை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *