தேவன்: பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; . ஆதியாகமம்:1:11
எனக்கு அன்பானவர்களே!
பூமியையும், அதிலுள்ள யாவற்றையும் படைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
கர்த்தர் இவ்வுலகில் தாம் படைத்த அனைத்தையுமே நல்லது என்று கண்டார். அவரின் படைப்புகள் அனைத்தும் அதிசயமானவைகள்.
மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவை. இந்த ஆக்ஸிஜன் காற்று மண்டலத்தில் இருக்கிறது. மனிதர்கள் சுவாசிக்கும் போது உள்ளே செல்கிற காற்றில் ஆக்ஸிஜன் இருக்கிறது.
இந்த ஆக்ஸிஜனை நுரையீரல் எடுத்துக் கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை நுரையீரல் எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை இரத்தத்திற்கு அனுப்புகிறது.
இந்த ஆக்ஸிஜன் உடலில் பல பகுதிகளுக்கும் சென்று அங்கே இருக்கக் கூடிய உணவுப் பொருட்களை எரித்து, மனிதனுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இந்த ஆக்ஸிஜன் இல்லையென்றால் நாம் சாப்பிடுகிற உணவு எரிக்க முடியாது. அவ்வாறு உணவை எரிப்பதால் தான் நம்முடைய உடலிலே வெப்பம் உண்டாகிறது.
எப்போது உணவு எரிக்கப்படுவது நிற்கிறதோ, அப்பொழுது நம்முடைய உடல் குளிர்ந்து விடும். அதாவது நாம் இறந்துப் போவோம். மனித இனம் மாத்திரமல்ல மற்ற உயிர்களுக்கும் இப்படி தான்.
இதை ஈடு செய்ய தகுந்த விதத்தில் கார்பன் டை ஆக்சைடை, ஆக்சிஜனாக மாற்றக்கூடிய கருவியை தேவன் கொடுத்தார்.
எவ்வாறு நுரையீரல் இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துவிட்டு ஆக்ஸிஜனை இரத்தத்திற்கு கொடுக்கிறதோ
அது போலவே காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுவதற்கு ஆண்டவர் கொடுத்த கருவி தான்
தாவரங்கள். எனவே தாவரங்களை பூமியின் நுரையீரல் என்று சொல்லலாம்.
நம் தேவன் தாவரங்களை மூன்றாம் நாளிலே படைத்தார். தாவரங்களின் வேர்கள் பூமியிலிருந்து நீரை உறிஞ்சுகின்றன. இலைகள் காற்றிலிருக்கிற கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகின்றன. மனிதனின் வாழ்வுக் காகவே ஆண்டவர் மரங்களை முளைக்க செய்தார்.
ஒரு இடத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாக இருந்தால், அந்த இடத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். கார்பன் டை ஆக்சைடு குறைவாக இருந்தால் அங்கு வெப்பநிலை குறைவாக இருக்கும்.
பகலிலே மரங்கள் இருக்கின்ற இடங்களில் கார்பன்-டை-ஆக்சைடை குறைவாக இருக்கும். ஒரு நகரத்தில், மரங்கள் அதிகமாக இருந்தால், அந்த நகரத்தின் வெப்பநிலை குறைவாக இருக்கும்.
நாம் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக தேவன் படைக்கப்பட்டது தான், மரம், செடி, கொடிகள். அவைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதை அழிக்கக் கூடாது. தேவையின்றி அதிலிருந்து ஒரு இலை கூட பறித்து வீணாக்கக் கூடாது. ஏனென்றால் அவை தேவனால் உருவாக்கப்பட்டவைகள்.
வேதத்தில் பார்ப்போம்,
பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதை தரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக் கடவது;
ஆதி 1:29.
வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத் தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்.
எசே 34 :27.
அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டு விருட்சங்களும் கெம்பீரிக்கும்;
1 நாளா 16 :33.
பிரியமானவர்களே,
தேவன் இவ்வுலகை வார்த்தையினால் சிருஷ்டித்தது போல விதையையும் சிருஷ்டித்தார். அது வளர்ந்து, பெருக்கத்தக்கதாக அதற்கு வல்லமையைக் கொடுத்தார்.
தேவன், ‘பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று …. தேவன் அது நல்லது என்று கண்டார் ” ஆதியாகமம் 1:11,12. அந்த வார்த்தையே இன்றைக்கும் விதையை வளரச் செய்கிறது.
விதையிலிருந்து சூரிய ஒளியை நோக்கி வளரும் ஒவ்வொரு பச்சையான இலையும், அற்புதம் செய்யும் மருந்தாகவும், உணவாகவும், ஆண்டவர் மனிதனுக்கு கொடுத்தார்.
வீசி எறியப்படுகிற விதையானது செடியாக, கொடியாக ,மரமாக உயிர்பெற அநேக ஏதுகரங்களை நமது கர்த்தர் பயன்படுத்துகிறார். பூரண அறுவடை கிடைப்பதற்கு தேவையான அனைத்தையும் போதுமான அளவு வழங்குகிறார்.
சங்கீதக்காரனின் அற்புதமான வார்த்தைகள் இவை; தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவந்தியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து,
அதை மழைகளால் கரையப் பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். வருஷத்தை உம்முடைய நன்மையால் முடி சூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
சங்கீதம் 65:9-11.
நாம் காண்கின்ற இந்த உலகம் தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இயற்கையானது இயற்கை விதிகளுக்குக்கட்டுப்படுகிறது. ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் சித்தத்தைப் பேசுகின்றன; செயல்படுத்துகின்றன.
மேகமும், சூரிய வெளிச்சமும், பனித் துளியும் மழையும், காற்றும் புயலும் தேவனுடைய கண்காணிப்பில் உள்ளன; அவர் அவைகளுக்கு கட்டளையிட அப்படியே கீழ்ப்படிகின்றன.
தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே நிலத்திலிருந்து விதை முளைத்து, “முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் கொடுக்கிறது.
மாற்கு 4:28. அவருடைய கிரியைக்கு அவை எதிர்த்து நிற்காதபடியால், அதினதின் காலத்தில் அந்தந்த வளர்ச்சி நிகழ ஆண்டவர் செய்கிறார்.
ஆனால் தேவ சாயலிலே சிருஷ்டிக்கப்பட்டு, பேச்சாற்றலும் பகுத்தறிவும் வழங்கப்பட்டுள்ள மனிதன் மட்டும் அவருடைய ஈவுகளுக்கு நன்றியில்லாதவனாகவும், அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருக்கலாமா?
பகுத்தறிவுள்ள ஜீவிகள் மட்டும் உலகத்தில் குழப்பத்தை விளைவிக்கலாமா என்பதை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் மனுக்குலம் இருக்கிறது.
ஆகவே இயேசுவின் சாயலாக படைக்கப்பட்ட நாம் இவ்வுலகை வளமுடனும்,
செழிப்புடனும் வாழச் செய்வோம்.
பரத்திலிருந்து கர்த்தர் தருகிற ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்.