Daily Manna 12

உன் தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். மீகா 6 :8

எனக்கு அன்பானவர்களே!

தாழ்மை உள்ளவர்களுக்கு தம்முடைய கிருபையை அளிக்கிற நம் அன்பு இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு முறை அசோக மன்னர் தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரே ஒரு துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.

அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.
அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.

மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல், *ஒரு* *ஆட்டுத் தலை* , *ஒரு* *புலித்தலை* , *ஒரு* *மனிதத்தலை* *மூன்றும்* *உடனே* *வேண்டும்* என ஒரு வினோதமான ஆணையிட்டார்.

மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.ஆட்டுத்
தலை உடனே விலை போயிற்று.

புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன் வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சி பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.

விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையை யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார். இலவசமாக கூட வாங்கக் யாரும் தயாராக இல்லை.

இப்போது அசோகா மன்னர் சொன்னார்,
”தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது. இருந்தும் இந்த உடல் உயிர் உள்ள போது என்ன ஆட்டம் , என்ன வீராப்பு, கோபங்கள், சண்டைகள் வைராக்கியம்.

நாம் இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை, மரியாதையும் இருக்காது என்பது நமக்கு நன்கு தெரியும்.

சங்கீதம்:144:4 – ல் வேதம் கூறுகிறது, மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்து போகிற நிழலுக்குச் சமானம்.

உடலில் உயிர் இருக்கும் போதே, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?”தளபதியாரே என்று கேட்டார் மன்னர்.

இன்று பலர் தனக்கு நிகராக இருக்கும் மனிதர்களைக் கூட மதிப்பதில்லை.
தான் சொல்வது தான் சரி, தான் செய்வது தான் சரி.தனக்கு மாத்திரமே எல்லாம் தெரியும், தனக்கு மட்டுமே கர்த்தரின் வெளிபாடுகள் உள்ளது. மற்றவர்கள் சரியான விளக்கத்தோடு எதை கூறினாலும் பெருமை என்ற கர்வத்தோடு அதை ஏற்காமல் தட்டிக் களிப்பவர்கள் பலர் உள்ளனர்.

சரியானதை மற்றவர்கள் கூறினால் கூட அதை ஏற்க மறுத்து தான் கூறுவதே சரி என வாதிடுவோரும் இருக்கத் தான் செய்கிறார்கள். இவர்களிடம் பெருமை, ஆணவம் என்பது குடிகொண்டுள்ளது என்பதை இவர்களின் நடத்தையே காண்பித்து விடும்.

வேதத்தில் பார்ப்போம்,

நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத் தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
1 பேதுரு 5 :5.

ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத் தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொண்டு;
கொலோ 3:12.

தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
நீதி 22:4.

பிரியமானவர்களே,

இன்றைக்கு ஒரு சிலர் ஆண்டவரை நன்கு அறிந்த போதிலும் மனத்தாழ்மை என்பது அவர்களிடம் இல்லை.
கிறிஸ்துவை அறியாத‌ ஒரு சில மக்களிடமும் மனத் தாழ்மையும் இல்லை. விட்டுக் கொடுக்கும் தன்மையுமில்லை. அன்பின் ஐக்கியம் இல்லை.

எனவே அவர்களிடம் தேவன் எதிர்பார்க்கிற ஒருமனம் காணப்படுவதில்லை.

அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக் கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால்,பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்.
மத்தேயு 18-19 என்று இயேசு சொன்னதிலிருந்து ஏன் நம் ஜெபங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதை அறியலாம்.

இன்றைக்கு இயேசு காட்டிய மாதிரியாகிய தேவ அன்பும் மனத்தாழ்மையும் அநேக மக்களிடம் காணப்படவில்லை .
ஒருவரைவோருவர் நேசிக்கும் மன பக்குவமும் இல்லை.

இன்றைக்கு சபைகளில் ஜனங்கள் கூடி ஜெபிக்கிறார்கள், மேலும் அநேக தேசங்களில் சபைகள் ஒன்று சேர்ந்து தேசத்துக்காகவும் அதன் எழுப்புதலுக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறார்கள்.

ஆனால் அநேக ஜெபங்களுக்கு தேவன் பதில் கொடுக்காததற்கு காரணம் அவர்களது கிரியைகளின் பொல்லாப்பு என்று கர்த்தர் சொல்கிறார். தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து விட்டு மிகுதியாக ஜெபம் பண்ணினாலும் நான் கேட்க மாட்டேன் என்று தேவன் சொல்கிறார்.

ஏனென்றால் இன்றைக்கு அநேகர் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் ஊழியத்திலும் தேவ நீதியை செய்வதில்லை. தங்கள் சுய நீதியினால் தேவன் எதை செய்ய சொல்கிறாரோ அதற்கு கீழ்படியாமல்
,தங்கள் மனதும் மாம்சமும் விரும்பினவைகளை செய்து தேவனுக்கு கீழ்படியாமல் இருப்பதால் தாங்கள் செய்யும் ஜெபத்துக்கு பதில் கிடைப்பதில்லை.

மன்னர் துறவிக்கு மரியாதை செய்தது தளபதிக்கு பிடிக்கவில்லை. தளபதி சொல்லும் வார்த்தையை பாருங்கள். ஒரு பரதேசி யின் காலில் விழுவதா என்று வருத்தப்பட்டார்.
இன்றைய மக்களின் மன நிலையும் இதுவே

மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

ஆம் பிரியமானவர்களே,
தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? நியாயம் செய்து,இரக்கத்தை சிநேகித்து, தேவனிடத்தில் மனத்தாழ்மையாய் இருப்பதையே எதிர்பார்க்கிறார்.

இப்படிப்பட்ட தேவன் விரும்புகிற நற்காரியங்களை நாம் செய்து மனத்தாழ்மையை அணிந்து, கிருபை மேல் கிருபையை பெற்று வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *