பூரண ரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம். ஏசாயா: 33 :6.
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பண்டையக் காலங்களில் தங்கள் பொக்கிஷங்களை நிலத்திற்குள் புதைத்து வைப்பது வழக்கம்.
அக்காலத்தில் திருடு, கொள்ளை அதிகமாகக் காணப்பட்டது. ஆட்சி அதிகாரம் மாறுகிற சமயங்களிலெல்லாம், பெரும் செல்வந்தர்களின் வீடு புகுந்து, சூரையாடுகிற அபாயமும் அந்நாட்களில் காணப்பட்டது.
அதனால் தான், செல்வந்தர்கள் தங்கள் உடைமைகளை மறைத்து வைத்துப் பாதுகாக்க முயன்றனர். நிலத்திற்குள் புதைப்பதே பாதுகாப்பானதெனக் கருதினார்கள். பெரும்பாலும் புதைத்த இடம் மறக்கப்பட்டுப் போகும்;
புதைத்தவர் மரிக்கலாம்; அல்லது கைது நடவடிக்கை நாடு கடத்துதலுக்கு ஆளாகி புதையலை விட்டுப் பிரியலாம்; எனவே பெரும்பாடுகளுக்கு மத்தியில் அவர்கள் மறைத்த அந்தப் பொக்கிஷம், யார் கையில் கிடைக்கிறதோ அவர் அதிர்ஷ்டசாலி தான்.
விவசாயம் செய்வதற்காக ஒருவன் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுக்கிறான்; ஏர் பூட்டி உழுகிற போது, நிலத்தில் புதைக்கப்பட்ட பொக்கிஷம் வெளிப்படுகிறது. பொக்கிஷத்தைக் கண்ட உடனே ஒரு நல்ல வாய்ப்பு தனக்கு எட்டியிருப்பதைப் புரிந்து கொள்கிறான்.
கண்டெடுத்த பொன்னை அந்த மறைவிடத்திலேயே வைத்து விட்டு, தன் வீட்டிற்கு திரும்பிச் சென்றதும், அந்தப் பொக்கிஷமுடைய நிலத்தை விலைக்கு வாங்கும்படி தனக்குண்டான எல்லாவற்றையும் விற்கிறான்.
அவன் ஒரு பைத்தியக்காரனைப் போலச் செயல்படுவதாக அவனுடைய குடும்பத்தாரும் அயலகத்தாரும் நினைக்கிறார்கள். அந்த வயலைப் பார்க்கும் போது, “அந்த தரிசு நிலம் ஒன்றுக்கும் உதவாது” என எண்ணுகிறார்கள்.
ஆனால் அவன் செய்வதறிந்து செயல்படுகிறான்; அந்த நிலத்தின் உரிமையாளனான பிறகு, தான் பார்த்திருந்த பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்க, ஓர் இடம் விடாமல் அங்கு தேடுகிறான்.
பின்பு அந்த நல்ல பொக்கிஷத்தைக் கண்டு பிடித்தான்,
அது போலவே, பரலோகத்தின் பொக்கிஷத்தை கண்டுபிடிக்கிறவன், சத்தியத்தின் ஐசுவரியங்களைச் சொந்தமாக்க, எப்படிப்பட்ட பிரயாசத்தையும், எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய தயங்க மாட்டான்.
வேதத்தில் பார்ப்போம்,
பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
மத்தேயு 6 :19.
நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக் காட்டுகிறான்.
மத்தேயு 12 :35.
உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
மத்தேயு 6 :21.
பிரியமானவர்களே,
இவ்வுலக மனிதர்கள்
இலாபம் ஈட்டுவதிலும் பொக்கிஷங்களை சம்பாதிப்பதிலும் மூழ்கியிருக்கிறார்கள். நித்தியத்திற்கடுத்த நிஜங்களைக் காண மறந்துப் போகிறார்கள் .
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என்று கேட்டார்.
மத்தேயு 16:26.
விழுந்து போன மனுகுலத்தார் நித்தியத்திற்கடுத்த நிஜங்களைக் காணும் படி,
சொல்லொண்ணா மகிமையால் நிறைந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
அந்த முடிவேயில்லாத உலகத்தின் வாசலுக்குள் அழைத்துச் சென்று அங்குள்ள பொக்கிஷத்தின் மத்தியில் தம் மக்கள் மகிழ்ந்திருக்கும்படி விரும்புகிறார்.
அந்தப் பொக்கிஷத்தின் மதிப்பு , இவ்வுலக சுரங்கங்களில் கிடைக்கும் வெள்ளியையும் அல்லது பொன்னையும் விட மேலானது. இதற்கு ஒப்பாகாது.
“ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. அதற்கு ஈடாகத்தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக்கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல ; பசும் பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக் கூடாது.
பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப் பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது”
யோபு 28:14-18.அப்படிப்பட்ட பொக்கிஷம் வேத வாக்கியங்களில் உள்ளது.
வேதாகமமானது தேவனுடைய மகத்தான புத்தகமாகும்; மெய்யான அறிவியலின் அஸ்திபாரம் ஆராய்ந்தறிய முடியாத கிறிஸ்துவின் ஐஸ்வரியங்கள் அடங்கிய சுரங்கம் தான் வேதாகமம்.
ஆனால், விழுந்து போன மனிதர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. பாவம் அவன் பார்வையை மறைத்து விடும்; தேவனுடைய வார்த்தையை அந்த மனிதனால் அதை விவரிக்க இயலாது.
ஆனால், பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தில் நடப்பவர்கள், அந்த ஈடு இணையற்ற நல்ல பொக்கிஷத்தை பெற்றுக் கொள்ள, தனக்கு உண்டான அனைத்தையும் விற்றாவது அந்த நல்ல நிலத்தை வாங்க விரும்புவார்கள்.
சத்தியத்தின் ஐஸ்வரியமாம் வேதத்திலே அநேக பொக்கிஷங்கள் இருக்கிறது.இந்த பொக்கிஷங்களை ஒவ்வொரு நாளும் நமக்கு சொந்தமாக மாற்றி பரலோக வாழ்வுக்கென்று தகுதிபடுவோம்.
கரத்தர் இப்படிப்பட்ட பரலோக ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ள நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.