பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின் மேல் நடந்தான். மத்தேயு 14:29.
எனக்கு அன்பானவர்களே!
நம்மோடு இருக்கும் இம்மானுவேலராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு காலத்தில் பிரசங்கிமார்கள், குதிரையில் ஏறி ஊர் ஊராகச் சென்று பிரசங்கித்து வந்தார்கள். சில சமயங்களில் அவர்கள் பெரிய ஆற்று வெள்ளத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அன்று ஆற்றை கடந்து செல்லுவதற்கான பாலம் பெரும்பாலும் இருந்ததில்லை. வெள்ளத்தின் வழியாகத் தான் குதிரையை நடத்திச் செல்ல வேண்டும். ஆற்றில் அவ்வாறு கடந்து செல்லும் போது வலது புறமுமோ, அல்லது இடது புறமுமோ பார்த்தால் வெள்ளத்தின் மூர்க்கத்தையும் சீற்றத்தையும் சுளிகளையும் காணும் போது மயக்கமே வந்து விடும் .
குதிரையிலிருந்து தண்ணீருக்குள் விழுந்தால், தண்ணீரால் அடித்துச் செல்லப்படும் அபாயமும் இருந்தது.
அதனால் அப்படிப் பயணம் செய்கின்ற மக்கள் அந்த ஆபத்தை தவிர்ப்பதற்கு ஒன்று செய்வார்கள்.
தன் கண்களை அங்கும் இங்கும் வேறு எந்தப் பக்கமும் திருப்பாமல், எதிர்க்கரையில் இருக்கிற ஒரு மரத்தின் அடிப் பகுதியைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி கரையேறும் வரை அவர்களுடைய பார்வை மரத்தின் அடிப்பகுதியில் மட்டுமே இருக்கும் .
இவ்வாறு பயணம் செய்யும் மக்கள் மயங்கி தண்ணீருக்குள் விழாமல் பாதுகாப்புடன் கரையேறி உற்சாகமாய் வருவார்கள்.
அதுபோலவே நாமும் நம்முடைய கண்களை இயேசுவை விட்டு வேறு பக்கமாய் திருப்புகிறோமோ அப்போதே நம்முடைய வாழ்க்கையில் பலத்த புயல் வீச ஆரம்பித்து விடும். நாம் தவறி விழுந்து விடுவோம்.
எனவே நம்முடைய பார்வை எப்போதும் ஈசாயென்னும் அடி மரமாகிய இயேசுவின் மேல் இருக்கட்டும்.
வேதத்தில் பார்ப்போம்,
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகி வருகிறது.
சங்கீதம் 69:1.
காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்து போகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
மத்தேயு 14:30
உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
மத்தேயு 14:31
பிரியமானவர்களே,
நாம் அனைவருமே
உறுதியான நிலப்பரப்பில், நல்ல வெளிச்சத்தில் நடக்கும் போது, கவலை இன்றி, அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்க நம்மால் முடியும். அதே நிலப்பரப்பில், வெளிச்சமில்லாத இரவில் நடக்கும் போது, சிறிது நிதானமாக, கவனமாக நடக்க வேண்டியிருக்கும்.
பகலோ, இரவோ, நீர்ப்பரப்பில் நடப்பது என்பது, பொதுவாக, மனிதர்களால் இயலாத ஒரு செயல். அத்தகைய ஒரு செயலைச் செய்யத் துணிகிறார், பேதுரு. அதுவும், வெளிச்சமில்லாத இரவில், எதிர்காற்று வீசும் வேளையில், கடல் மீது நடக்க பேதுரு முயல்கிறார்
பேதுரு நீரின்மேல் நடந்ததையும், பின்னர் தடுமாறி, தண்ணீரில் மூழ்கியதையும் மையப்படுத்தி, நம் விசுவாச வாழ்வில் நிகழும் ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி, இறையியல் பேராசிரியரான அருள் பணி Ron Rolheiser அவர்கள், அழகாக விளக்கமளித்துள்ளார்.
நம் விசுவாச வாழ்வில், சிகரங்களைத் தோட்ட நேரங்கள் உண்டு; பாதாளத்தில் புதைக்கப்பட்ட நேரங்களும் உண்டு.
நம் விசுவாசம், சில நாள்கள், நம்மை, தண்ணீரின் மேல் நடக்க வைக்கிறது; வேறு சில நாள்கள், தண்ணீரில் போட்ட கல்லைப் போல, நம்மை மூழ்கடித்து விடுகிறது என்று கூறியுள்ளார்.
இந்த மாற்றத்திற்கு அவர் கூறும் ஒரு முக்கிய காரணம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
எப்போதெல்லாம் நம் விசுவாசம் ஆண்டவரை மையப்படுத்தியிருந்ததோ, அப்போதெல்லாம் நம்மால் தண்ணீரின் மேல் நடக்க முடிந்தது.
ஒரு சில வேளைகளில், நாம் ஆற்றும் செயல்கள், நம்மையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுவதால், நமது கவனம் ஆண்டவரை விட்டு விலகி, நமது சக்தி, நமது திறமை ஆகியவற்றில் பெருமை கொள்ள வைக்கின்றன.
இன்னும் சில வேளைகளில், நம்மால் இது முடியாதா என்ன என்று பெருமைக் கொள்ளுகிறோம்.
அவ்வேளைகளில், நாம் தண்ணீரில் மூழ்கத் துவங்குகிறோம். இதுதான் பேதுருவுக்கு நிகழ்ந்தது.
பேதுரு தண்ணீரில் மூழ்கினார்’ என்ற விவரம் நமக்கு வியப்பளிக்கிறது. பிறந்தது முதல், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த பேதுருவுக்கு, நீச்சலடிப்பது என்ற செயல், சுவாசிப்பது போன்றது, அவரது இயல்பாக மாறியிருக்க வேண்டும். மாறவில்லை ஏன்?பயம். பயம் ஒரு மனிதனை நிலை தடுமாறிப் செய்து விடும்.
புயலோடும், கடல் அலைகளோடும் போராடிக் கொண்டிருந்த சீடர்கள், தன்னை அழைக்கவில்லை என்ற போதும், அவர்களைத் தேடிச் சென்றார் இயேசு கிறிஸ்து. என்னைக் காப்பாற்றும்’ என்று பேதுரு கத்தியபோது, உடனே கரம் நீட்டி அவரைக் காப்பாற்றினார்.
இதுதான் இயேசுவின் அன்பு. தன்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், உதவிக்கு வருபவரே இறைவன்.
உலகப்புகழ் பெற்ற மனநல மருத்துவர், கார்ல் யுங் (Carl Jung) அவர்களின் அறைக்கு வெளியே, ஒரு கல்லில் பொறிக்கப்பட்டிருந்த சொற்கள் இவை: “Called or Not, God is Present” “தன்னை அழைத்தாலும், அழைக்கவில்லை என்றாலும், கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார்”.
‘கடவுள் நம்மோடு’ இருக்கிறார் என்ற மறுக்க முடியாத உண்மையை, ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் நாம் பேசுகிறோம். அதே நம்பிக்கையை ஆண்டின் ஒவ்வொரு நாளும் நம் மனதில், வைத்திருந்தால் நமக்கு சக்தியளிக்கும் என்று கூறுகிறார்.
ஆம் பிரியமானவர்களே,
நாம் எந்த சூழ்நிலையிலும் இருந்தாலும் நம்மை காப்பாற்ற, விடுவிக்க , நமக்கு நல்வாழ்வை தர கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்போதும் நம்முடனே கூட இருக்கிறார்.
ஆகவே கர்த்தர் என்னோடு கூட இருக்கிறார் விசுவாசத்தோடு ஒவ்வொரு நாளும் விசுவாச வாழ்வை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.