நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும் போது, அதை செய்யத்தக் கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதிமொழி: 3 :27
எனக்கு அன்பானவர்களே!
நம் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு வாலிபன் ஒருநாள் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்படி அவன் போகும் போது, நிறைய நட்சத்திர மீன்கள் (Star Fish) கரையோரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதை கண்டான். ஒவ்வொன்றாக எடுத்து கடலில் தூக்கி போட ஆரம்பித்தான்.
ஏனெனில் அவை அங்கு மணலில் கிடந்தால், வெயில் பட்டு மரித்து விடுமே என்று எண்ணியவனாக, ஒவ்வொன்றாக எடுத்து கடலில் தூக்கி போட ஆரம்பித்தான். அதை கவனித்த ஒரு வயதானவர், அவனை நோக்கி, “என்ன செய்கிறாய் ?” என்று கேட்டார்.
அப்போது அந்த வாலிபன், ‘இந்த நட்சித்திர மீன்கள் இந்த வெயிலில் மரித்து போகாத வண்ணம் அவற்றை எடுத்து கடலில் போடுகிறேன்’ என்று கூறினான்.
அப்போது அவர், ‘என்ன பிரயோஜனம், நீ என்ன பெரிய வித்தியாசத்தை காணப் போகிறாய்?
இதோ இந்த கடற்கரையில் எத்தனை மில்லியன் நட்சத்திர மீன்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தாயா?’ என்று கேட்டார். அனைத்தையும் உன்னால் காப்பாற்ற முடியாதல்லவா?? என்றார்.
அப்போது அந்த வாலிபன், ‘என்னால் அனைத்தையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் இந்த ஒரு நட்சத்திர மீனுக்கு அது ஒரு பெரிய காரியமல்லவா? அதனுடைய உயிர் பிழைத்தது’ என்று கூறினான்.
இக்கதையில் உவரும் வாலிபனைப் போல ஒரு வேளை நாமும் பிறருக்கு செய்வது மிகவும் சிறிய காரியமாயிருக்கலாம்.ஆறுதல் சொல்லி ஒருவரை தேற்றியிருக்கலாம், அல்லது அவர்களுக்கு ஒரு சிறிய உதவியை செய்திருக்கலாம், நமக்கு ஒன்றும் அது பெரிய காரியமாக தோன்றாது, ஆனால் அதனால் தேற்றப்பட்ட மக்களுக்கு அது மிக பெரிய காரியமாகும்.
இன்று இந்த உலகில் அன்பை தேடி அலைந்து திரிகிற மக்கள் எத்தனை, எத்தனையோ பேர் தெரியுமா? ஆறுதல் இன்றி தவிப்பவர்கள் எத்தனையோ பேர். பெரிய பெரிய வேலைகளில் இருந்தாலும், அன்பை தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் அநேகர் உண்டு.
வெளியே பார்க்க மிகவும் பகட்டாக இருப்பார்கள், ஆனால் சிறிது நேரம் பேசிப் பார்த்தால் தெரியும், அவர்கள் உள்ளத்தில் எத்தனையோ விதமான வியாகுலங்களோடு அலைந்து கொண்டிருப்பார்கள் .
அப்படிப்பட்டவர்களை நாம் தேற்றும்போது, அது அவர்களுக்கு நிச்சயம் ஆசீர்வாதமாக இருக்கும். ஒருவேளை நாம் உலகத்தில் உள்ள எல்லாரையும் தேற்றி கொண்டிருக்க முடியாது.ஆனால் நம்மால் இயன்ற அளவு, யாருக்காவது ஒருவருக்கு ஆறுதலாயிருந்தால், நிச்சயமாக அவர்கள் அதை ஒரு போதும் மறக்கவே மாட்டார்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
ஆதலால், ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
யாக்கோபு 4:17
எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
கொலோ 3:24.
அன்றியும் நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
எபிரேயர் 13:16
பிரியமானவர்களே,
வேதம் கூறுகிறது நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும் போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே என்று கூறுகிறது.
கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மிலுள்ள தீமையான காரியங்களை அகற்றி விட்டு, பிறருக்கு நன்மை செய்கிற மக்களாக எந்த சூழ்நிலையிலும் எவ்விடத்திலும் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வண்ணம் நம்மால் இயன்றதை தேவையிலுள்ள மக்களுக்கு செய்வோம்.
நாம் பிறருக்கு நன்மைகள் செய்தாலும் பல நேரங்களில் அவர்கள் நமக்கு பல தீமைகளை செய்ய கூடும். இப்படிப்பட்ட பாடுகள் அடையும் போது பொறுமையோடு சகித்துக் கொள்ள
வேண்டும். அது தேவனுடைய சமூகத்தில் பிரீதியாயிருக்கிறது.
நாம் ஏதோ ஒரு உதவியை செய்வது மட்டும் நன்மையல்ல. ஒரு சகோதரன் இடகிறதற்காவது தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாய் ஒன்றும் செய்யாமலிருப்பதும் நன்மையே.
சாலொமோன் ராஜா நன்மை தீமை இன்னதென்று வகையறுக்க ஞானமுள்ள இருதயத்தை தேவனிடம் கேட்டார்.அது தேவனின் பார்வைக்கு உகந்த விண்ணப்பமாய் இருந்தது. தேவனுடைய பாதத்தில் அமர்ந்து நன்மை தீமை வகையறுக்கதக்க ஞானமுள்ள இருதயத்தை தாரும் என மன்றாடுவோம்.
நாம் உயிரோடிருக்கும் காலம் வரை நம்மால் இயன்ற நன்மைகளை பிறருக்கு செய்வோம்.
இவ்வுலகில் நித்திய ஜீவனை அறியாமலே மரித்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளம் பேர் உண்டு.
அதில் ஒருவருக்கு நாம் ஜீவனுக்கு செல்லும் வழியை காட்டினால், மறுமையில் அது அவர்களுக்கும், நமக்கும் மிகுந்த ஆசீர்வாதமாய் அமையும்
இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்த போது தம்மிடம் உதவிநாடி வந்த ஜனங்களுக்கு உதவி செய்ததோடு உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. இனி பாவம் செய்யாதே என கூறியதை நாம் வேதத்தில் காண்கிறோம்.
இயேசு கிறிஸ்து சரீர பிரகாரமான சுகத்தையும் ஆவிக்குரிய சுகத்தையும் ஜனங்களுக்கு அளித்தார். எனவே நாமும் சோர்ந்து போகாமல் நன்மைகள் செய்வதோடு நின்றுவிடாமல் அவருடைய ராஜ்யத்திற்கு ஜனங்களை ஆயத்தப்படுத்துகிற
மக்களாய் வாழுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் மேலான நன்மைகளை பெற்று வளமாய் வாழ இறைவன் நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.