இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணியநாள். 2கொரிந்தி: 6:2
எனக்கு அன்பானவர்களே!
பரிசுத்த ஓய்வு நாளில் நம்மை மனநிறைவோடு வாழச் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருமுறை சில வாலிபர்களுக்கு டி.எல். மூடி பிரசங்கியார் வேதபாட வகுப்பு நடத்தினார். அதில் ஒருவனைத் தவிர மற்றவர்களனைவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டு தங்கள் தீய வழிகளை விட்டு மனந்திரும்பினர்.
அந்த மனந்திரும்பாத வாலிபனிடம் ஒருநாள் மனந்திரும்புதலை குறித்து மிக உருக்கமாக பேசினார். அவனோ, “நான் வெளியூருக்கு சென்று பணம் சம்பாதித்து திரும்பி வந்த பின் இயேசுவை ஏற்றுக் கொள்வேன்” என்றான்.
டி.எல். மூடி துக்கப்பட்டார். சில வாரங்களுக்குப் பின் அவன் நோய் வாய்ப்பட்டவனாக மருத்துவமனையிலிருந்தான். மூடி அவனை சந்தித்து “இனியும் தாமதியாதே, உன் இரட்சிப்பைக் குறித்து முடிவு செய்” என வேண்டினார். அவனோ மறுத்தான்.
“நான் சாகமாட்டேன், முன்பு சொன்னபடி பணம் சேர்த்த பின் ஆண்டவரை ஏற்றுக் கொள்கிறேன்” என்றான். பின்பு ஒரு நாள் குதூகலத்துடன் அவர் வீட்டிற்கு வந்து, ‘நான் பயணமாக செல்லும் முன்பு உங்களிடம் விடைபெற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்றான்.
மீண்டும் மூடி அவன் தோளின் மேல் தம் கையை வைத்து பரிவுடன் ஆத்ம இரட்சிப்பைக் குறித்து பேசினார். அவன் மீண்டும் உதாசீனம் செய்துவிட்டு போனான்.
சில நாட்கள் கழிந்து ஒரு நடு ராத்திரி அவர் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். வெளியே ஒரு பெண்மணி,”என் கணவர் சாகுந்தருவாயிலிருக்கிறார், உடனே வாருங்கள்”என்று அழைத்தாள்.
அது அந்த வாலிபனின் மனைவி என அறிந்து அவர், “இனி நான் அவனுடன் பேசி பயனில்லை. தனக்கருளப்பட்ட தருணங்களையெல்லாம் அவன் தள்ளி விட்டானே'” என்றார். எனினும் அவளுடைய கெஞ்சலுக்காக அவனைப் பார்க்க சென்றார்.
அவனோ மதியிழந்தவனாக மேலே பார்த்து கொண்டு “பிந்தி விட்டதே, பிந்தி விட்டதே” என்று புலம்பி கொண்டேயிருந்தான். அவனுடன் அவர் ஒன்றும் பேச முடியவில்லை; “பிந்தி விட்டதே” என்று அவன் கதறிக் கொண்டே தன் உயிரை விட்டான். அந்தோ பரிதாபம்! தேவனின் தயவை அவன் புறக்கணித்து விட்டான்.
பிரியமானவர்களே ,
இன்றைய நாட்களில் அநேகர் தேவனை நம்பாமல் தங்கள் விசுவாசத்தை பணத்தின் மீதும் பொருள்களின் மீதும் வைத்து தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்து போகின்றனர்.
வேதத்தில் பார்ப்போம்,
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1 தீமோ 6:10.
பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப் பிரியன் செல்வப் பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
பிரசங்கி 5 :10.
வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
நீதிள் 28 :22.
பிரியமானவர்களே,
பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் என்று சொல்லும் வேதம், பண ஆசையோ எல்லா தீமைக்கும் வேர் என்றும் சொல்லி நம்மை எச்சரிக்கிறது. பணமில்லாவிட்டால் நாம் ஜீவிப்பது கடினமே. ஆனால் பணமே அல்லது வசதிகளே என் வாழ்வு என்று வாழ்வோமானால் நாம் அதற்கு அடிமைகளாக மாறி விடுவோம்.
ஒரு மனிதனுக்கு பணம் சேர சேர அதில் அவன் திருப்தி அடைந்து விடுவதில்லை. இன்னும் அதிகமாக சேர்க்க வேண்டும் என்றே அவன் மனம் வாஞ்சிக்கிறது. பணம் சேர சேர, முதலில் ஒழுங்காக இருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக பாவத்தில் விழ ஆரம்பிக்கிறான்.
முடிவில், பாவம் அவனை மேற்கொண்டு, அதற்கு அடிமையாக மாறி விடுகிறான். ‘ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்’ என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.
ஆகவே நாம் நமக்கு கிடைக்கும் சம்பளத்தில் வாழ கற்றுக் கொள்வோம். மிஞ்சி ஆசைப்படாமல், நம் வரவுக்கு தக்கதாக செலவு செய்வோமானால், கடனே இல்லாமல் வாழ முடியும். நம் தேவைகள் அதிகமாகும் போது, அதற்காக எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் குறுக்கு வழிகளை கடைபிடித்து, அதனால் வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.
‘போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்’ .எது இருக்கிறதோ அதிலே மனதிருப்தியும், மன நிறைவும் காணக் கற்றுக் கொள்வோம்.
மேலும், அநேகர் பலரை ஏமாற்றி தவறாக அபகரித்த பணம் அவர்களுடைய கடைசி நாள்களில் சாபமாக அவர்களையும் அவர்கள் சந்ததிகளையும் உருவக் குத்துகிறது.
ஊழியங்களில் கூட அநேக ஊழியக்காரர்கள் பணத்தை அதிகமாக சம்பாதிக்கும் பொருட்டு தேவன் சொன்னதை செய்யாமல் தங்கள் சுயசித்தத்தையும் சுயதிட்டத்தையும் செய்து தங்கள் தரிசனங்களை இழந்து போய் விடுகிறார்கள்.
ஆகவே பிரியமானவர்களே, பணத்தை நேசிக்கும் இச்சையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பணத்தை கையாளும் காரியங்களில் நாம் உண்மையுள்ளவர்களாக இருப்போம். தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் போது ஏழைகளுக்கும் திக்கற்றோர்களுக்கும் உதவி செய்வோம்.
அநேக மனிதர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. காரணம் உள்ளத்திலும், வாழ்க்கையிலும் பாவம் நிறைந்து இருக்கிறது. பாவம் நிறைந்து இருக்கிற இடத்தில் மகிழ்ச்சிக்கு இடமே இல்லை.
மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாலே வெறுமை காணப்படும். மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை எப்படி வெறுமையான வாழ்க்கையோ, அதே போல பெலன் இல்லாத வாழ்க்கையாகவும் இருக்கிறது.
மகிழ்ச்சியை தேடி மனிதன் தேடாத இடம் இல்லை. செல்லாத இடமும் இல்லை. ஆனால் இந்த மகிழ்ச்சி பாவத்தை விட்டு, மனந்திரும்பும் பொழுதே, கர்த்தருக்குள் கிடைக்கிறது என்று வேதாகமம் சொல்லுகிறது.
கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சி பெருகும் போது, மனித வாழ்வில் பலமும் பெருகுகிறது.
“கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் ‘’ என்று வேதம் கூறுகிறது. உள்ளத்தின் நிறைவால் மட்டுமே மகிழ்ச்சி உண்டாகும். பாவத்தை விட்டு விலகும் போதே, உள்ளத்தின் சந்தோஷம் பெருகும்.
ஆகவே இன்றே அனுக்கிரக காலம் என்பதை உணர்ந்து கர்த்தருக்குள்ளாய் எல்லா காரியங்களிலும் மனரம்மியத்தோடு வாழுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் சமாதானத்தையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்.