இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள். மத்தேயு:18:10
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பொதுவாக நாம் நம்மை விட வயதில் படிப்பில், திறமையில் குறைந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.
எளிதில் அவர்களை நம்பி எந்த பொறுப்பையும் கொடுப்பதில்லை.
இவனுக்கு ( அல்லது) இவளுக்கு என்ன தெரியும்? என்று சொல்லி அவர்களுடைய திறமையைப் பாராமல் , அவர்களை அற்பமாய் பேசி அவர்களின் மனதை எளிதில் நோகடித்து கலங்க வைத்து விடுகிறோம்.
ஆனால் வேதம் ‘ஒருவரையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்’ என்று நம்மை எச்சரிக்கிறது.
ஒரு 18 வயது கூட நிரம்பாத ஒரு மூர்ஹவுஸ் என்ற வாலிபன் உலகப் பிரசித்திப் பெற்ற டி.எல் மூடியின் சிகாகோ நகர ஆலயத்தில் பிரசங்கிக்க விரும்புவதாக கூறினார்.
ஆனால் மூடியோ அவரை ஏற்றுக் கொள்ள சம்மதியாமல் தட்டிக் கழித்தார். ஆனால் தேவ திட்டத்தின்படி பல மாதங்களுக்குப் பிறகு டி.எல் மூடியின் சபையில் மூர் பிரசங்கித்தார். அநேகர் தங்களது பின் மாற்ற வாழ்விலிருந்து மனம் திரும்பினர்.
டி.எல். மூடியும் கண்ணீரோடு அந்த பிரசங்கத்தை கேட்டார். அதன் பிறகு இனி யாரையும் நான் அலட்சியமாய்ப் பார்க்க போவதில்லை என்று முடிவு செய்தார்.
வேதத்திலும் இப்படி சில வாலிபர்கள் அற்பமாய் எண்ணப்பட்டார்கள். யோசேப்பின் சொப்பனமும், அவனது பேச்சும் அவனது சகோதரர்களுக்கு அற்பமாய் காணப்பட்டது.
தாவீதும் யுத்தக் களத்திலேயுள்ள தன் சகோதரர்களால் அற்பமாய் பேசப்பட்டான். ஆனால் தேவன் இவர்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.
அன்று பரிசேயனும் ஆயக்காரனை அற்பமாக எண்ணினான். நான் இவனைப் போலெல்லாம் இல்லை, நான் கர்த்தருக்கு விசேஷித்தமானவன் என்று மற்றவனை அற்பமாய் எண்ணினான்.
ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக் கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
லூக்கா 18 :13.
ஆனால் தேவனின் பார்வைக்கு ஆயக்காரனே விசேஷித்தவனாக தோன்றினான்.
மனிதர்கள் அலட்சியமாய், அற்பமாய் நினைத்த அநேகரை தேவன் ஆசீர்வதித்து உயர்த்தினார்.
வேதத்தில் பார்ப்போம்,
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப் போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
மாற்கு 9:42.
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 10 :42.
இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப் போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
மத்தேயு 18 :14.
பிரியமானவர்களே,
இன்று நாமும் கூட , பல நேரங்களில் நம்முடன் வேலை செய்யும் அலுவலகத்திலோ, சபையிலோ, அல்லது நமது குடும்பத்திலுள்ள ஏழை மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளுகிறோம். பல வேளைகளில் நாம் நம்மை அறியாமலே அவர்களை அற்பமாய் எண்ணுகிறோம். என்பது தான் உண்மை.
ஒருவேளை
நம் செய்கைகளினால், நம் பேச்சினால், நம் பார்வையினால் நான் உன்னை விட உயர்ந்தவன் உயர்ந்தவள் என்று காட்டிக் கொள்கிறோமா? அப்படி நாம் செய்வோமானால் இது தேவனுடைய பார்வையில் பாவமே!
உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று இருந்தால் கர்த்தர் அதை அருவருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும்.
‘மனத் தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள்’
பிலிப்பியர்:2:3 என்றல்லவா வேதம் கூறுகிறது! ஆனால் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம்?
நம்மிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால், என்னை விட்டால் இதை செய்வதற்கு யாருமில்லை என்று நினைக்கிறோமா? தேவனால் கற்களை கொண்டும் பேச வைக்கவும், செய்ய வைக்கவும் முடியும் என்பதை நாம் அறிய வேண்டும்.
நம்மோடு இருக்கும் மற்றவர்களை நம்மிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணுவோம். அதுவே கிறிஸ்துவின் சிந்தை. இந்த சிந்தை நம் ஒவ்வொருவருக்கும் இருக்குமானால் நாம் யாரையும் அற்பமாய் எண்ணமாட்டோம்.
நம் தாய் தகப்பனைமாரை அற்பமாய் எண்ணாதிருப்போம். நம் உடன் பிறந்த சகோதர சகோதரிகளை அற்பமாய் எண்ணாதிருப்போம். சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளை அற்பமாய் எண்ணாதிருப்போம். நம்மோடு வேலை செய்யும் மற்றவர்களை அற்பமாய் எண்ணாதிருப்போம்.
கிறிஸ்துவின் சிந்தையே நம்மில் இருக்கக் கடவது. மற்றவர்களை மேன்மையாய் எண்ணுவோம். அப்போது கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
ஆமென்.