நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் எபிரேயர் :13 :5
எனக்கு அன்பானவர்களே!
ஆசீர்வாதத்தின் ஊற்றும் உறைவிடமும் காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
சென் என்ற சகோதரர் கூறுகிறார்“எனக்கு ஒரேவொரு தங்கை, அவள் பெயர் நெஸ்ரிம். நாங்கள் இரண்டு பேரும் ரொம்ப பாசமாக சந்தோஷமாக இருப்போம். ஆனால், பணத்தால் எங்களுக்குள்ளே பிரச்சினை வருமென்று நான் ஒரு போதும் நினைத்து கூட பார்க்கலை.
எங்க அப்பா அம்மா இறக்குறதுக்கு முன்னாடி, அவங்க சேர்த்து வைச்ச கொஞ்ச பணத்தை நாங்கள் ரெண்டு பேரும் சமமா பிரிச்சிக்கணும்னு சொன்னாங்க.
நாங்களும் சரி என்று ஒத்துக் கொண்டோம். ஆனால் அவங்க இறந்ததுக்கு அப்புறம், என் தங்கச்சி பணத்துல
பெரும் தொகையை கேட்டாள். நான் அப்பா-அம்மா சொல்லை மீறக்கூடாது என்று சொன்னேன்.
ஆனால் அவளோ அதுக்கு ஒத்துக்கவே இல்லை. மாறக என்னை மிரட்டினாள்… பயமுறுத்த தொடங்கினாள். இன்றைக்கு வரைக்கும் அவள் குணம் மாறவே இல்லை கோபமாக தான் இருக்கிறாள்.”
பணத்தை வைத்து யாரையும் எப்போதும் எடைபோட முடியாது என்று கூறினார்.
பாருங்கள் இன்றும் பண பிரச்சினையினால் தான் நிறையப் குடும்பங்கள் பிரிந்து போகின்றார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
பணப் பிரச்சினையால் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். சிலருக்கு தங்கள் துணையை விட…ஏன் தங்கள் உயிரைவிட பணம் தான் முக்கியமாக இருக்கிறது.
ஆனால், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் அதையே முழுமையாக நம்பி இருக்க மாட்டார்கள். “
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு “மனநோய் வர வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல முதுகுவலி, தலைவலி, தொண்டைவலி போன்ற பிரச்சினைகளும் வருகின்றன. அவர்கள் போதை மருந்துக்கும், குடிப்பழக்கத்துக்கும் அடிமையாக வாய்ப்பு இருக்கிறது.
பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் நிறைய பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள்” என்று “தி நார்சிஸிஸம் எபிடெமிக்” என்ற புத்தகம் சொல்கிறது.
எனவே பணத்தைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்போம். ஏனென்றால், பணம் பாதாளம் வரை இழுத்துச் செல்லும்.
வேதத்தில் பார்ப்போம்,
பின்பு அவர் {இயேசு} அவர்களை நோக்கி: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
லூக்கா: 12:15
ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்;
பிரசங்கி 6 :9.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1 தீமோ 6:10.
பிரியமானவர்களே,
நாம் இவ்வுலகில் வாழ்வதற்கு பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவரே திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்.
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பணம் சம்பாதிக்கவே கூடாது என்றோ, பணக்காரர்கள் எல்லாரும் மோசமானவர்கள் என்றோ வேதம் சொல்வதில்லை. பணம் வைத்திருப்பது தவறில்லை ஆனால், பணமே கதி என்று இருப்பது தான் தவறு.
பணக்காரராக வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறவர்கள் நிறைய பிரச்சினையில் தங்களை உருவ குத்திக் கொள்ளுகிறார்கள்.
“நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
எபிரெயர் 13:5
இருப்பதை வைத்து திருப்தியோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு பணக் கஷ்டமே இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் பணத்தைப் பற்றிய அதிக கவலையிலேயே மூழ்கிவிட மாட்டார்கள்.
உதாரணத்துக்கு, அவர்களுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அதை பற்றி அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
அதற்கு பதிலாக, அப். பவுலைப் போல் நடந்து கொள்வார்கள்.
“என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை;
ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
பிலிப்பியர்: 4:11-12என்று கூறுகின்றார்.
மனிதர்கள் பணம் பணம் என்று ஓடுகின்றனர். ஆனால்
பணம் பாதாளம் வரை பாயும்.. பரலோகத்துக்குப் போக கிருபையை தான் சம்பாதிக்க வேண்டும். ஜெபிக்க வேண்டும்.
கிருபையளிக்கும் கர்த்தரை ஒவ்வொரு நாளும்
சார்ந்து கொள்ள வேண்டும்..
இப்படிப்பட்ட உன்னதமான ஆசீர்வாதங்களை பெற்று இம்மையிலும் மறுமையிலும் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.