என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். யோவான்:14:2
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு வழிபோக்கன் ஒருவன் பிரயாணப்பட்டு, வெகு தூரமாய் சென்று கொண்டிருந்தான். இரவு நெருங்கி விட்டது. பகலெல்லாம் அவன் நடந்ததால் அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. எங்கேயாவது ஓய்வெடுத்தால் நலமாயிருக்கும் என்று அவன் எண்ணினான்.
சற்று தூரத்தில் ஒரு பெரிய வீட்டை கண்டான். அதன் பெரிய முற்றத்திலே பெரிய பெரிய திண்ணைகள் கட்டப்பட்டிருந்தன. வெளியில் வந்த வீட்டுக்காரரிடம் தன் பயணத்தை கூறி அன்றிரவு மட்டும் இந்த திண்ணையில் ஓய்வெடுத்து கொள்கிறேன் என்று கேட்டான்.
அதைக் கேட்ட அந்த வீட்டுக்காரர், ‘ இது என்ன சத்திரமா? போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் தங்கி போகவா இதை கட்டி போட்டிருக்கிறோம்’ என்று கத்தினார். வழிபோக்கர் அமைதியாக, ‘ஐயா இந்த பங்களாவை யார் கட்டியது?’ என்று கேட்டார்.
‘என் தாத்தா கட்டினார். அதன் பின் என் அப்பா இதில் வாழ்ந்தார். இப்போது நான், எனக்கு பிறகு என் மகன் வாழ்வான்’ என்று பெருமிதத்தோடு கூறினார். ‘அப்படியானால் இது சத்திரம் தானே’ என்று வழிபோக்கர் நாசுக்காக கூறினார்.
“உலகம் ஒரு நாடக மேடை” என்றார் ஒருவர். குறிப்பிட்ட காலம் வரை நமது கதாபாத்திரத்தை நடித்து விட்டு, செல்ல வேண்டியது தான். இப்பூமியில் கோடி கோடியாய் செலவிட்டு, ஆசை ஆசையாய் கட்டிய அந்த சொகுசு வீட்டில் கொஞ்ச காலம் தான் வாழ முடியும்.
இறந்த பிறகு அந்த வீட்டில் ஒரடி நிலமும் கூட தரமாட்டார்கள் நமது பிள்ளைகள்! மகன்{மருமகன்} ஊதாரியோ, குடிகாரனோ, நல்லவனோ யாராயிருந்தாலும் அவனுக்கு விட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும்.
நமது ஆயுள் எத்தனை காலம், என்று நம்மில் யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையற்ற உலகில் வாழும் நமக்கு, இதன் பேரில் தான் எத்தனை, எத்தனை பற்று! எத்தனை பெருமைகள்!
இவைகள் நம்முடன் என்றுமே வராது.எல்லாம் அழிவுள்ளது.
மாறக்கூடியது.
வேதத்தில் பார்ப்போம்,
அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் , அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை.
பிரசங்கி:4:8
எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
1 கொரிந்தி:15 :58.
இதோ உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச் செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே இவன் பங்கு.
பிரசங்கி 5 :18.
பிரியமானவர்களே,
நம்மிடம் அனேர், இந்த உலகம் நமக்கு நிரந்தரமானது என்பது போல், தன் வாயை கட்டி, வயிற்றை கட்டி சொத்து மேல் சொத்து சேர்த்து குவித்து கொள்கிறார்கள்.
எவ்வளவு பணம் சேருகிறதோ அவ்வளவுக்கு அதன் மேல் அவர்களுக்கு மயக்கமும், ஆசையும் ஏற்படுகிறது.
, அவர்களுக்கு இன்னும், இன்னும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாஞ்சையால் அவர்கள் பேச்சும், செயல்களும் அதிகமாய் இருக்கும்.
உலகத்தின் எல்லா காரியங்களும் மாயையானது. நம்முடைய ஆஸ்தி, அந்தஸ்து, ஞானம்,சம்பத்து, ஐசுவரியம், புகழ், பொருள், மூடநகைப்பு, வெற்றி, அங்கீகாரம் எல்லாம் நிலையற்றது.
வேதம் கூறுகிறது, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாதவன் கர்த்தருடைய கூடாரத்திலே தங்குவான்; அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்.
வீண் மாயைகளைப் பற்றிக் கொள்ளாமல் கர்த்தரையே நம்பியிருப்போம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து பரலோக வாழ்வுக்கு நேராக நம்மை வழிநடத்துவாராக.
ஆமென்.