தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழி: 28 :13
எனக்கு அன்பானவர்களே,
பாவங்களை நீக்கி பரிசுத்த வாழ்வு வாழ செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
அமெரிக்கா தேசத்தில் ஒரு இளைஞனுக்கு கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதி தூக்குத் தண்டனையை கொடுத்தார்.
ஒரு குறிப்பிட்ட நாளில் இவனை தூக்கில் போட வேண்டும் என்று ஒரு நாளையும் குறித்திருந்தார்.
இதனை அறிந்த ஊர் மக்கள் அந்த மாகாணத்தின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையினால் அவன் இந்த கொலையை செய்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் அவன் தாய்க்கு ஒரே மகன் என்பதால்
அவனுக்கு சிறிய
அளவில் தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால்
ஆளுநர் இந்த மனுவையும் நிராகரித்தார்.
பல கடிதங்கள் எழுதினார்கள். அவன் தாயும் எழுதினார்கள்.
எல்லா மனுக்களையும் ஆளுநர் நிராகரித்தார் .
தூக்கில் போடுவதற்க்கு
ஒரு நாள் முன்பு
ஒரு போதகர் அவனை பார்க்க சென்றார்.
அவனிடம் அவர் தம்பி நாளையுடன் உன் உலக வாழ்வு முடிவு பெறுகிறது . இப்போதும்
உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நீ செய்த பாவத்திற்காக இயேசுவிடம் மன்னிப்பு கேள். அவர் மன்னிக்க தயையுள்ளவராய் இருக்கிறார்.
உன் பாவத்தை அறிக்கை இடு என்றார்.
ஆனால்
அவனோ நான் எதற்காக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்று மட்டும் தான் உயிருடன் இருக்க போகிறேன் .
என் ஊர் மக்கள் மற்றும் என் தாய் எவ்வளவோ மனுக்களை ஆளுநருக்கு அனுப்பினார்கள்.
எந்த பயனும் இல்லை.நாளை நான் சாகப் போகிறேன் நான் எதற்காகவும் பாவ மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றான்.
உடனே போதகர் அவனிடம்
ஆளுநர் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் இப்போது நீ பாவ மன்னிப்பு எடுத்தால் நாளை உனக்கு கிடைக்க இருக்கும் தூக்குத் தண்டனையைக் கூட நிறுத்த முடியும் என்றார்.
அவனோ போதகரை பார்த்து சிரித்து விட்டு
இத்தனை நாட்களும் விடுவிக்காதவரா இனிமே விடுவிக்க போகிறார்
என்று கூறி போதகரை துரத்தினான்.
துக்க முகத்துடன் போதகர் திரும்பி சென்றார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த
சிறை காவலர்கள் அவனிடம் ஓடி வந்து நல்ல ஒரு வாய்ப்பை தவறவிட்டாயே வந்தது யார் தெரியுமா…?
இந்த மாகாணத்தின் கவர்னர் அவர்.
உன்னை விடுவிக்க போதகர் வேடமிட்டு வந்தார்.
ஆனால் நீயோ அவரை உதாசினப்படுத்தி விட்டாய் என்றார்கள்.
அடுத்த நாள் காலை வந்தது
தூக்கு கயிற்றின் முன்பு அவனை நிறுத்தினார்கள் . அவன் பேசினான்.
“நான் செய்த பாவத்துக்காக நான் சாகவில்லை…???
பாவ மன்னிப்பை உதாசீன படுத்தியதற்காகவே சாகிறான் என்றான்”…!!!
வேதத்தில் பார்ப்போம்,
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
நீதிமொழி:28:13.
நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன், என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன், தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.)
சங்கீதம்: 32:5.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான்: 1:9
பிரியமானவர்களே,
இன்றைய மனிதர்கள் தேவனுடைய முழுமையான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு முதல் காரணம் நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களில் உண்மையான மனந்திரும்புதல் இல்லாமல் இருப்பதே ஆகும்.
மனந்திரும்புதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்று வேதம் சொல்லுகிறது, புதிய ஏற்பாட்டின் துவக்கத்தில் யோவான் ஸ்நானன் தன் ஊழியத்தை ஆரம்பித்த பொழுது மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது என்றான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தன் ஊழியத்தை ஆரம்பித்த பொழுது சொன்ன வார்த்தை மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது என்பதாகும்.
நெகேமியாவின் காலத்திலும் காண்கிறோம்.
இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடி முதலாவது
ஒரு ஜாமம் வரைக்கும் தேவனாகிய கர்த்தரின் நியாயப் பிரமாணம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமம் மட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, அவர்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள்.
இன்று நம்மை நாமே ஆராய்ந்துப் பார்ப்போம் நமது பாவ நிலையை உணர்ந்து, மனங்கசந்து, மனந்திரும்ப முயற்சிக்கிறோமா? அல்லது மற்றவர்களை குற்றம் படுத்திக் கொண்டிருக்கிறோமா?
தன்னை உணர்ந்தவன் நீதிமானாகிறான். பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தவன் பாவத்தை சேர்த்துக் கொள்கிறான்.
ஆகவே, எப்பொழுதும் பாவத்தைக் குறித்த விழிப்புணர்வு நமக்கு மிகவும் அவசியம்.
தேவ சமுகத்திற்கு வரும் போதெல்லாம் நம்மை ஆராய்ந்து பார்த்து, நம் குறைவுகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குகிறவர் முன்னிலையில் நமது பாவங்களை அறிக்கையிட தயங்காதிருப்போமாக.
ஆம், பாவம் செய்யாத மனிதன் யாருமே இல்லை. ஆனால்,
செய்த பாவத்தை மறைக்காமல் இயேசுவிடம் மன்னிப்பு கேட்பது மிகுந்த ஆசீர்வாதத்தை கொண்டு வரும் .
நம் அன்பான இயேசு கிறிஸ்து நம்மை மன்னிக்க தயையுள்ளவராய் காத்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் இயேவையே நோக்கி பார்ப்போம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட நாம் இவ்வுலகில் வளமாய் வாழ நமக்கு உதவி செய்வார் .
ஆமென்.