Daily Manna 148

கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளுவார். சங்கீதம் 6:9.

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் தேவனோடு நெருங்கி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு பிரயாசப்படுகிறவர்கள் அநேகர். தினமும் மூன்று முறை ஜெபிப்பது வாரத்தில் ஒரு முறை உபவாசம் இருப்பது போன்ற பல நல்ல பழக்க வழக்கங்களை கையாளுகிறோம்.

ஆனாலும் காலம் செல்ல செல்ல உலகக் கவலைகள் சிற்றின்பங்கள் ஐசுவரியத்தின் மயக்கம் நம்மை நெருக்கி நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை அனலுமில்லாமல் குளிருமில்லாமல் வலுவிழந்து போகச் செய்கிறது.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நம் தேவாதி தேவனாகிய இயேசு கிறிஸ்துவை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி வைத்து அவரையே சார்ந்திருப்பது. அதாவது நம்முடைய உலகப் பிரகாரமான எல்லா உறவுகளையும் விட, நமக்கிருக்கிற எல்லாவற்றையும் விட தேவனுக்கு முதலிடம் கொடுத்து அவர் மேல் நம் முழு நம்பிக்கையும் வைத்து வாழும் விசுவாச வாழ்க்கையாகும்.

இதற்கு உதாரணமாக நாம் தாவீது ராஜாவை சொல்லலாம். தாவீது ராஜா கூறுகிறார் “நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர் சங்கீதம் :73:23. இவ்வசனம் தாவீது ராஜா தேவனிடம் கொண்டுள்ள ஆழமான உறவை எடுத்துக் காட்டுகிறது.

தாவீது ராஜா தன்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள், நெருக்கங்கள் போராட்டங்கள் சந்தித்த போதும் அவர் “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக் கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்” என்று அருமையாக கூறுகின்றார்.

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
புலம்பல் 3 :24.

கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
சங்கீதம் 116 :1.

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
எசேக்கியேல்: 37 :14.

பிரியமானவர்களே,

தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருந்தான். ஏனென்றால் அவன் எப்போதும் கர்த்தருக்கு நன்றியுடன் இருந்தான். ஆகவே தான், தேவன் அவரைக் குறித்து மனமகிழ்ந்தார்.

நன்றியுள்ள இருதயத்தை தேவன் நேசிக்கிறார். புதிய ஏற்பாட்டில் பத்து குஷ்டரோகிகளைக் குறித்து வாசிக்கிறோம். இயேசு ஒரு கிராமத்திற்கு சென்ற போது, பத்துப்பேர் அவருக்கு எதிராக தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.

அவர்களை பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களை காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.

அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பி வந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினான்.

அப்பொழுது இயேசு, சுத்தமானவர்கள் பத்துப் பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பி வரக் காணோம் என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் லூக்கா 17:12-19.

தேவனிடத்திலிருந்து பெறுகிற எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

பிரியமானவர்களே, நாம் தாவீதைப் போல எப்பொழுதும் நம் தேவாதி தேவனை நம் முன்பாக வைத்திருப்போம்.

ஒவ்வொரு நிமிடமும் ஜெபம் நம் மூச்சாக இருக்கட்டும். என்ன வேலை செய்தாலும் நம் மனம் தேவனோடு உறவாடட்டும். நாம் தேவனுக்கும் மனிதர்களுக்கு முன்பாக குற்றமற்ற மனசாட்சியுள்ளவர்களாய் வாழ தேவ உதவியை நாடுவோம்.

எப்பொழுதும் இயேசுவை நம் வாழ்க்கையில் காண்பிக்கும்படி கிருபையுள்ள வார்த்தைகள் நம் வாயிலிருந்து புறப்படட்டும்.

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் தம்முடைய பரிசுத்த பிரசன்னத்தினால் நிறைத்து
தம்முடைய மெய்யான ஆசீர்வாதத்தை இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் தந்து வழிநடத்துவாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *