Daily Manna 149

வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. நீதிமொழிகள்:27 :21

எனக்கு அன்பானவர்களே!

நமது அருமை ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வட அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் ‘கூழாங்கற் கடற்கரை’ என்று அழைக்கபடும் ஒரு கடற்கரை பகுதி உள்ளது.

இக்கடலின் நீண்ட அலைகள் கரையில் வந்து மோதும் போது கடற்கரையிலுள்ள கூழாங்கற்கள் ஒன்றோடொன்று மோதி ஒரு பெரிய ஓசையை உண்டாக்குகிறது.

மேலும் அலைகளின் கையில் அகப்பட்ட கற்கள் கடினமான பாறைகளின் மேல் உருட்டியடிக்கப்பட்டும், ஒன்றோடொன்று உரசியும் பளபளப்பாக்கப்படுகின்றன. இவ்வழகிய கற்களைக் காணவும், அதன் ஓசையை கேட்கவும் உலகெங்குமுள்ள சுற்றுலா பயணிகள் அங்கு தினமும் வருவதுண்டு.

இக்கற்களை எடுத்துச்சென்று தங்கள் வீடுகளின் அலங்கார பொருட்களுடன் வைத்து அலங்கரிப்பர். இக்கடற்கரையிலிருந்து சற்றுத் தொலைவிலும் பாதுகாப்பான இடத்தில் அநேக கற்கள் காணப்படுகின்றன.

இவைகளுக்கு கடல் அலைகளின் மோதலோ, உராய்வுகளோ இல்லாததால் அழகற்று கற்கள் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் எவரும் இதை விரும்புவதில்லை.

கடற்கரையின் இரண்டாவது பகுதியில் காணப்பட்ட கற்களைப் போல இன்றைக்கு நாம் பாதுகாப்பாக தான் இருக்க விரும்புகிறோம்.

பாடுகளும், கஷ்டங்களும் வேண்டாம் என்கிறோம். யாருடைய கேள்விக்கும், நிர்பந்தத்திற்கும் உட்படாமல் யாரும் நம்மேல் அதிகாரம் செலுத்துவதையும் விரும்பாமல் சுயாதீனமாக இருக்க ஆசைப்படுகிறோம்.

சொல்லப் போனால் சுகமாக, பாதுகாப்பாக இருப்பதையே அதிகம் விரும்புகிறோம். அதோடு எல்லோரும் என்னை கனம் பண்ண வேண்டும், மேன்மையான ஸ்தானத்தில் நான் வைக்கப்பட வேண்டுமென்ற ஆசையும் நம்மில் அநேகருக்கு இருக்கிறது.

சிலுவையை சுமக்காமல் கிரீடம் பெற விரும்புவதும், பாடுகள் இல்லாமல் பரலோகம் செல்ல விரும்புவதும் நமக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.

ஆனால் ஒரு மனிதன் எப்போது பொன்னாக விளங்குவான் என்றால் ,அவன் தன் வாழ்விலே தேவனை பிரதிபலிக்கிறவனாக மாறுகிற வரைக்கும் அவன் சோதனைக்குள்ளாக கடந்து செல்ல வேண்டும் . நாம் பொன்னாக மாற வேண்டுமானால் புடமிடப்படுதல் என்பது மிகவும் அவசியமானதாகும்.

நாம் கடந்து செல்லுகிற ஒவ்வொரு சோதனைகளுக்கும் அர்த்தம் என்னவென்றால் , நாம் புடமிடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதாகும் .

புடமிடப்பட்ட பிறகு நாம் சுத்த மணவாட்டியாய் ,
தேவனுக்கு பிரியமான பிள்ளையாக மாறுவோம் என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமல்ல முடிவில் யோபுவைப் போல ஆசீர்வாதத்தையும் இரண்டதனையாய் பெற்று கொள்ளுவோம்

வேதத்தில் பார்ப்போம்,

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத் தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
1கொரிந்தியர்:10:13

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள். என்றாலும் துன்பப்பட வேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சகாலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
1 பேதுரு:1:6

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு:1 :12

பிரியமானவர்களே

பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவர் பயன்படுத்திய மனுஷர்கள் அனைவரும் இக்கூழாங்கற்களைப் போல மிகவும் அலசடிபட்டவர்கள் தான்.

எகிப்தின் பிரதான தலைவனாக உயர்த்தப்படும் முன்பு மோசே அனுபவித்தப் பாடுகளை வேதம் நமக்கு ஒரு சரித்திரமாகவே கூறியுள்ளது. அதுபோலவே
அப்போஸ்தலர் பவுலைக் குறித்து தேவன் கூறும் போது ‘என் நாமத்திற்காக எவ்வளவாய் பாடுபட வேண்டும்’ என குறிப்பிட்டு பேசினார்.

ஆம், இந்த செய்தியின் மூலம் தேவன் நம்மை மீண்டும் அழைக்கிறார்.
தேவ சித்தத்தை விட்டு வழி விலகி உலகத்தோடு சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மைத் தான் தேவன் அழைக்கிறார்.

குயவனாகிய என்னிடம் உன்னைக் கொடுத்தால் நான் உன்னை அனைவருக்கும் பயன்படும் பாத்திரமாக வனைந்து உன்னை சிறந்திருக்கப் பண்ணுவேன் என்று தேவன் கூறுகிறார். வனைபவரும், வடிவமைப்பவரும் அவரே.

இவ்வார்த்தைகளை நம்பி “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடனே கூட நடக்க நான் ஆயத்தம்” என ஒரு அடி எடுத்து வைக்க முன் வந்தால், நமக்கு உதவி செய்யும்படி அன்பான இயேசு கிறிஸ்து இரண்டு அடி நம்மோடு முன் வருவது நிச்சயம்.

நம் வாழ்வில் வரும் கஷ்டங்களும், தோல்விகளும் நம்மை அழிப்பதற்காக அல்ல.மாறாக நம்மை பொன்னாக விளங்குவதற்காகத் தான் நமக்கு பல சோதனைகளும், பாடுகளும் வருகிறது.

வேதத்தில் அநேக தேவ மனிதர்கள் பலர் கஷ்டங்களையும், பாடுகளையும் அனுபவித்தனர்.
ஆனால் அவர்கள் அதன் மூலமாய் வீழ்ந்து போகவில்லை. மாறாக முன்பை விட அதிகமாக ஆண்டவரோடு பலப்பட்டனர் என்பதை வேதத்தில் பார்க்கிறோம்.

எனவே நமது பாடுகளும் வேதனைகளும் நம்மை வீழ்த்துவற்கு அல்ல நம்மை உருவாக்கவே என்று விசுவாசிப்போம்.

பாடுகளின் வாயிலாக பரலோகத்திற்கு செல்ல பரிசுத்த தேவன் தாமே நம் யாவரையும் தகுதிப்படுத்துவாராக

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *