கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். யாத்திராகமம்: 15:3.
எனக்கு அன்பானவர்களே!
நம்மை ஆண்டு வழிநடத்தி வருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நம்மில் அநேகருக்கு ஏதேனும் பெரிய காரியங்களை முடித்தவுடன் பெருமையும், ஆணவமும் சேர்ந்தே ஒட்டிக் கொள்ளும். அதிலும் பதவியிலும், அதிகாரத்திலும் இருந்தால் சொல்லவே தேவையில்லை.
ஆனால் வேதம் இத்தகைய பெருமையையிலும்,
ஆணவத்திலும் இருந்தவர்களைப் பற்றி தெளிவாக கூறுகிறது.
வேதத்தில் பார்வோனின் இருதயத்தை தேவன் ஏன் கடினப்படுத்தினார்? என்பதே சிலரின் கேள்வியாகும். ஒன்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு முன்பே அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
இஸ்ரவேல் மக்களை கொடுமையாய் நடத்தினான்.
கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடும் படி அவர்களை போக விடும் என்று
மோசே சொன்ன பொழுது “அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்;
நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்”
யாத்திரா: 5:2.
“கர்த்தர் யார்? நான் கர்த்தரை அறியேன்; என்று பார்வோன் சொல்வதால் இஸ்ரவேலர்களின் தேவன் யார் என்பதை அறியாமல் இந்த வார்த்தைகளை அவன் சொல்லவில்லை.
அவன் அப்படி சொன்னவைகளின் அர்த்தம் என்னவென்றால் “கர்த்தர் சொன்னால் நான் அனுப்பி விட வேண்டுமா? அப்படி அவர் சொன்னதும் அனுப்புவதற்கு அவருக்கு நான் யார்? என்று தன் மனதைக் கடினப்படுத்தி அகந்தையாகவும், ஆணவமாகவும் கர்த்தருக்கு விரோதமாக பேசுகிறான்.
ஆகவே தான் பார்வோனுக்கு, தான் யார் என்பதை அறிந்து கொள்ளும் படி தேவன் அவனுக்கு செய்தார்.
இருதயம் ஆணவத்தின் உச்சியில் இருந்த பார்வோனுக்கு தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவருடைய அதிகாரம் என்ன? என்பதை அறிய வேண்டும் என்பதற்காகவே
இயற்கையின் மேல் இருக்கும் அதிகாரத்தை பார்வோன் அறிந்து கொள்ளும் படி பத்து வாதைகளினால் அவன் அதிகாரத்தையும், ஆணவமான பேச்சையும் சிதறடித்தார்.
எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன். நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும் போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்
யாத்திரா:7:3-5.
வேதத்தில் பார்ப்போம்,
இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.
யாத்திரா: 3 :9.
கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
யாத்திரா: 3:7.
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டு போய்ச் சேர்க்கவும் இறங்கினேன் என்றார்.
யாத்திரா: 3:8
பிரியமானவர்களே,
நமது ஆண்டவருக்கு முன்பாக ஆணவமாக நிற்கும் எந்த மனிதனும்,எந்த ராஜ்யமும் நிலை நிற்பதில்லை.
தேவனுக்கு முன்பாக ஆணவமாக நின்ற பார்வோன் மட்டுமல்ல, நெபுகாத்நேச்சார் போன்ற பல ராஜாக்களும், பல தேசங்களும், அதிகாரத்தினால் ஆணவத்துடன் செயல்பட்ட எல்லா மனிதரின் நிலையும் இவ்விதமாகவே இருந்திருக்கிறது.
“பூமியெங்கும் என்னைப் போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன்”
யாத்திரா:9:14 என்று கர்த்தர் சொல்லுகிறார்.
வாதை உண்டாகும் வேளையில் கர்த்தருக்கு பயந்து ஜனங்களை போக விடுகிறேன் என்று சொல்லும் பார்வோன், “இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்ட போதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவி கொடாமற் போனான்”
யாத்திரா: 8:15.
நம்மில் பலர் பிரச்சனைகள் நின்றதும் கர்த்தருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணம் நம்மை விட்டு நீங்கி போகிறது. மனம் கடினப்படுகிறது.
அது போல தான் பார்வோனும் இலகுவான சூழ்நிலை உண்டானதும் தான் சொன்னபடி செய்யாமல் போனான். அவன் இருதயம் இன்னும் அதிகமாக கடினப்பட்டது.
பார்வோனின் இருதயத்தை தேவன் வேண்டுமென்றே கடினப்படுத்தவில்லை. அவனுடைய இருதயம் கடினப்பட்ட நிலையில் தான் இருந்தது. அவனுடைய கடினப்பட்ட இருதயத்தை அறிந்திருந்த தேவன் தொடர்ந்து அந்நிலையில் இருக்க அனுமதித்தார்.
எனவே, யார் கர்த்தருக்கு விரோதமாக இருந்து தங்கள் மனதைக் கடினப்படுத்துகிறார்களோ, அவர்கள் இருதயம் மென்மேலும் கடினப்பட்டு போகும்.
தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, மனந்திரும்பும் மனிதனின் இருதயத்தை தேவன் கனிவாக மாற்றி, தமது அன்பை வெளிப்படுத்துவார்.
ஆகவே நாமும் நம் இருதயத்தை கடினப்படுத்தாதப்
படி, கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்துவோம். அப்போது அவர் நம்மை உயர்த்துவார்.
இத்தகைய உயர்வுகளை பெற்றுக் கொள்ள கர்த்தர் தாமே நம் யாவரையும் ஆசீர்வதித்து ஆண்டு வழிநடத்துவாராக.
ஆமென்