கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக் கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுது கொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அப்போஸ்தலர்: 7:59.
எனக்கு அன்பானவர்களே!
நமது அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் “சிமிர்னா” சபையின் பிஷப்புமாக இருந்த “பொலிகாப்” அவர்கள் கிறிஸ்துவில் கொண்டிருந்த விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததால் எரியூட்டப்பட வேண்டுமென்ற தீர்ப்பு ரோம சாம்ராஜ்யத்தினால் வழங்கப்பட்டது.
அப்போது அவருக்கு வயது 86. இந்த வயதின் காரணமாக கிறிஸ்துவை மறுதலிப்பதற்கு அவருக்கு ஒரு தருணம் கொடுக்கப்பட்டது.
அப்போது அவர், “இந்த 86 வருடங்களாக நான் சேவித்தவரை, எனக்கு ஒரு தீமையும் செய்யாதவரை, என் ராஜாவை என் இரட்சகரை நான் எப்படிப் பழித்து மறுதலிப்பேன்” என்றார்.
அக்கினியில் எரியூட்டப்படுவாய் என்று சொன்னபோது, பொலிகாப் அவர்கள், “நீ இந்த அக்கினியைக் காட்டி என்னைப் பயமுறுத்துகிறாய். இந்த அக்கினி ஒரு மணி நேரத்தில் அணைந்து விடும்.
ஆனால், நித்திய ஆக்கினைக்குரிய நியாயத் தீர்ப்பின் அக்கினி தேவனை மறுதலிக்கிறவர்களுக்காக வைக்கப்பட்டிருப்பதை நீ அறியாய். ஆகையால் நீ செய்ய விருப்பதைச் செய்” என்றார்.
அவரை மரத்தோடு சேர்த்துக் கட்டி, அவர் ஜெபித்து ஆமென் என்று சொன்னதும் நெருப்பைக் அவர் மேல் கொளுத்தி விட்டார்கள். ஆனால், அக்கினி அவரை எதுவும் செய்யவில்லை.
அதைக் கண்ட போர்ச்சேவகன் கூரிய ஆயுதத்தால் அவரைக் குத்திக் கிழித்துக் கொலை செய்தான் என்றும், பின்னர் கிறிஸ்தவ நண்பர்கள் அவரது சரீரத்தை அடக்கம் செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.ஆம், உலகம் அவரைக் குற்றவாளியாக கொன்றது;
ஆனால், தன் மரணத்திலும் அவர் தேவனை மகிமைப்படுத்தினார்; அதற்கு அவர் தேவனுக்குள் வாழ்ந்த வாழ்வே காரணம்.
இன்றும் தேவபிள்ளைகள் வியாதிப்பட்டு, மாறாத புற்றுநோயினால் அவஸ்தைப்பட்டு, இந்தக் கோவிட் கொள்ளை நோயினால் நேராய் வாய்ப்பட்டு மரித்தபோதும் கூட இவர்கள் உலகுக்குக் கேள்விக்குறியானார்கள் என்பதை மறுக்க முடியாது.
ஆனால், இந்த மரணங்களுக்குப் பின்னே உள்ள மகிமையை இந்த உலகத்தால் உணரமுடியாது.
வேதத்தில் பார்ப்போம்,
உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக் கொள்ளவும் அவைகளின் படி செய்யவும் பண்ணுவேன்.
எசேக்கியேல்:36 :27.
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக் கொண்டீர்.
சங்கீதம்: 31 :5.
என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
எசேக்கியேல்: 37 :14.
பிரியமானவர்களே,
புதிய ஏற்பாட்டிலே முதலாவது இரத்தச் சாட்சியாக மரித்த ஸ்தேவானுடைய மரணம் அற்புதமானது அப்போஸ்தலர்:7-ல் பரிசுத்த ஆவியினாலும், விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவனாய், ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தவனே ஸ்தேவான்.
கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக நின்ற இவரைப் பிடித்து, இவருக்கு எதிராக பொய் சாட்சிகளை நிறுத்தி, இவரது பேச்சுக்கு எதிர்பேச முடியாதிருந்த அவர்கள் மூர்க்கமடைந்தார்கள்.
அவனோ பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு, மரணம் நிச்சயம் என்று அறிந்திருந்தும், தான் கண்டதை அறிக்கை பண்ணத் தயங்கவில்லை.
அவர்களோ அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி கல்லெறிந்தார்கள்.
“கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்”என்றும், கல்லெறிகள் மத்தியிலும் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே. இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்” என்றும் சத்தமிட்டுச் சொல்லி நித்திரையடைந்தான் ஸ்தேவான்.
இவனுடைய மரணம், பிதாவிடம் தமது ஆவியை ஒப்புக்கொடுத்து, “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்கள்” என்று ஜெபித்த ஆண்டவராகிய இயேசுவின் சாயலை வெளிப்படுத்தியது.
கர்த்தருடைய நாமம் இவரது மரணத்தில் மகிமைப்பட்டது எப்படி? அவருடைய வாழ்வு தேவனை மகிமைப்படுத்துவதாக இருந்ததே அந்த இரகசியம்.
இந்த உலகம் உள்ள வரைக்கும், இந்த மாம்ச சரீரத்தில் நாம் வாழும் வரைக்கும் துன்பம், வியாதி, வேதனை, உபத்திரவம், பாவசோதனை, சரீர மரணம் யாவையும் நாம் கடந்து வந்தே
ஆக வேண்டும்.
இவற்றின் மத்தியிலும் நாம் தேவனை எப்படி மகிமைப்படுத்துகிறோம் என்பதில் நமது விசுவாசம் விளங்கும்.
ஆகவே நாம் வாழுகின்ற இந்த கொஞ்ச காலத்தில் தேவனை மகிமைப்படுத்தி அவருக்கு சாட்சியாக வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்