Daily Manna 154

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள். 1 பேதுரு 5 :7.

எனக்கு அன்பானவர்களே!

கைவிடாத நேசராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இங்கிலாந்து தேசத்தில் “பிளாரன்ஸ் நைட்டிங்கேல்” என்ற அம்மையார் இருந்தார்கள். பல வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவில் ஒரு கடுமையான யுத்தம் நடந்தது.

அதின் முடிவில் ஏறக்குறைய ஐயாயிரம் ரஷ்ய வீரர்கள் படுகாயமடைந்து, யாருடைய உதவியுமின்றி வேதனையில் தவித்தனர்.

அவர்களுக்கு உதவிச் செய்வதற்காக நைட்டிங்கேல் அம்மையார் முன் வந்தார்கள். அரசாங்கமும் அவர்களை முழு மனதுடன் அனுப்பி வைத்தது.

யுத்தத்தில் காயப்பட்ட மக்கள் யாதொரு மருத்துவ உதவியுமின்றி தவிப்பதை கண்டு அவர்கள் உள்ளம் பதை பதைத்தது. இரவும் பகலும் அந்த வீரர்களுக்கு அவர்கள் ஊழியம் செய்து வந்தார்கள்.

அவர்களுக்கு வேண்டிய மருந்துகள் மற்றும் உணவுகளை கொடுத்து பராமரித்து வந்தார்களாம். இரவு பதினொரு மணிக்கு தனிமையாக ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு, ஒவ்வொரு இராணுவ வீரரின் அருகிலும் நின்று, இன்னும் உங்களுக்கு ஏதாகிலும் உதவி வேண்டுமா என்று விசாரித்து விட்டு செல்வார்களாம். இதனால் தான் அவர்களை “த லேடி வித் தி லாம்ப்”( The lady with the lamp) என்று கூறுவார்கள்.

ஆம் பிரியமானவர்களே,
நம் அன்பான இயேசு கிறிஸ்துவும் அவ்வாறே நம்மை ஒரு தாயைப் போல , நம்மை தேற்றுகிறார். அது மட்டுமல்ல, நம் அருகில் வந்து நம்மை விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.

அவர் நமக்காக தன் ஜீவனையே கொடுத்திருக்கிறார் யோவான் 10:11.
அவர் நம்மீது வைத்த அன்பினால், தம் ஜீவனையே நமக்காக கொடுத்து நம்மை இரட்சித்து நமக்கு புது வாழ்வையும் தந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நல்ல ஆண்டவருக்கு நாம் எவ்வளவு உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும்?

வேதத்தில் பார்ப்போம்,

ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்;
ஏசாயா:66:13

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்.
1 பேதுரு :5 :7.

என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
சங்கீதம் :94 :19.

பிரியமானவர்களே,

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த போதகர் பிராங்க் கரேப், தனக்கெதிராக இருந்த சில வழக்குகளால் மிகவும் சோர்ந்து போயிருந்தார்.
அவைகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்த போது,“அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்” 1பேதுரு 5:7.என்ற வசனம் அவரது நினைவுக்கு வந்த போது ஒரு புது மகிழ்ச்சியும் சமாதானமும் அவரது உள்ளத்தை நிரப்பிற்று.

ஆவியில் களிகூர்ந்தவராக பின்வரும் பொருள் தரும் பாடலை எழுதினார். “இயேசு விசாரிக்கிறாரா? ஆம், அவர் விசாரிக்கிறார். நான் அறிவேன், அவர் விசாரிப்பை! என் கவலைகள் அவர் இருதயத்தைத் தாக்கிற்று” என்பதாகும்.

இஸ்ரவேலரும் தங்கள் பயணத்தில் தேவன் தங்கள் மேல் கரிசனை உள்ளவராக இருக்கிறாரா என்று கேட்கும் நிலைக்கு வந்தனர். எகிப்திலே பல்லாண்டுகள் நெருக்கப்பட்டனர்.

பின்னர் வனாந்தரத்தில் அலைய வேண்டியதாயிற்று.
வந்த இடத்திலோ அருந்த முடியாத நீர் கிடைத்தது. அவர்களுக்கு வாழ்வு அத்தனை இலகுவானதல்ல; ஆனால் இறுதியாக தேவன் அவர்களை “ஏலிம்” என்ற இடத்துக்கு அழைத்து வந்தார்.

அங்கே நல்ல நீர் தாராளமாகக் கிடைத்தது. துன்பங்களின் மத்தியிலும் தேவன் அவர்களை இளைப்பாறுதலுள்ள ஓரிடத்துக்கு அழைத்து வந்திருந்தார்.

ஒரு வேளை நீங்கள் கடினமான பாதை வழியே சென்று கொண்டிருக்கலாம். உங்களை தேவன் விசாரிக்கிறாரா என்று வினவுகிறீர்களா? நிச்சயமாக அவர் உங்கள் மேல் கரிசனையுள்ளவராக இருக்கிறார்.

கலங்காதீர்கள். எதிர்காலத்தில் தேவன் உங்களை ஏலிமுக்கு அழைத்து வருவார். “உங்களுடைய திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங் கொடாமல்…” 1கொரி.10:13 என்ற வேத வசனம் நமக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது.

பாடுகளினால் சோர்ந்து களைத்து வருத்தப்பட்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவன் இளைப்பாறுலை நிச்சயம் தருவார். நீங்கள் இப்பொழுது கசந்த மாராவில் தங்கியிருப்பீர்கள் என்றால், அது எப்போதும் இராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாம் மாறும்.

இதோ உங்கள் கண்களை ஏறிட்டு, உங்களுக்கெதிரே இருக்கிற சமாதானத்தின் ஏலிமை நோக்கிப் பாருங்கள்.

நாம் எதிர் கொள்கிற ஒவ்வொரு சோதனையையும், எல்லாவித வேதனைகளையும் தேவன் தமது வேளையில் சாதனைகளாக மாற்றித் தருவார். அன்று இஸ்ரவேலுடன் வழிநடந்த தேவன், இன்று நம்முடனும் நடக்கிறவர்.
அவர் உங்களைக் கைவிடுவாரா! இல்லை. அவரே நமக்கு கைவிடாத கன்மலை.

ஆகவே நாம் கன்மலையாம் கிறிஸ்து இயேசுவை நோக்கிப் பார்ப்போம்.கசந்த மாராவை மதுரமாக்கின தேவன் நம் வாழ்விலும் புதிய ஆசீர்வாதங்களை தந்து வழிநடத்துவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *