அநீதியான உலகப் பொருளைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால்,யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? லூக்கா:16 :11.
அநீதியான உலகப் பொருளைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால்,யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
லூக்கா:16 :11.
*************
அன்பானவர்களே!
நீதியின் நியாதிபதியாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாட்டின் ராஜா தனது அரண்மனையின் கருவூலத்தில் பணி செய்வதற்காக உண்மையுள்ள மனிதர்கள் சிலரை தெரிவு செய்ய விரும்பினார். ஆகவே தனது சிப்பந்திகள் மூலமாக நாடு முழுவதும் தகவல் தெரியப்படுத்தினார்.
அரசு வேலை என்பதால் அந்நாட்டைச் சேர்ந்த பலரும் பெரும் ஆர்வம் காட்டினர். குறிப்பிட்ட நாள் வந்தபோது ராஜா தனது கருவூலத்தில் பணி செய்ய விரும்புவோர் அனைவரையும் அழைத்தார். அனைவரும் அரண்மனை வளாகத்தில் கூடினர்.
தனது சிப்பந்திகளில் சிலரை அழைத்து அவர்களை நோக்கி இவர்களை அழைத்துக் கொண்டு போய் நமது அரண்மனை முழுவதையும் சுற்றிக் காட்டுங்கள் குறிப்பாக இவர்கள் பணி செய்ய இருக்கின்ற கருவூலத்தையும் சுற்றிக் காட்டுங்கள் என்று கூறினார்.
ராஜாவின் கட்டளைப்படி சிப்பந்திகள் அவர்களை அழைத்துச் சென்றார். அரண்மனையைச் சுற்றிப் பார்த்த அவர்கள் கடைசியாக கருவூலத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்து வரப்பட்டனர். அங்கே தங்கம், வைரம், வைடூரியம் மற்றும் விலையேறப் பெற்ற ஆபரணங்கள் பல இருந்தன.
அந்த ஆபரணங்களைக் கண்ட அவர்களுக்கு அதன்மீது ஆசை ஏற்பட்டது. ஆகவே, சிப்பந்திகள் தங்களைக் கவனிக்காத சமயங்களில் தங்கம், வைரம், ஆபரணங்கள் போன்றவற்றில் சிலவற்றை எடுத்துக் கொண்டனர். கருவூலத்திலிருந்து வெளியேறிய அவர்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டு வரப்பட்டனர்.
ராஜா அவர்களை நோக்கி: எனது அரண்மனையின் கருவூலத்தில் பணியாற்ற விரும்புகின்ற உங்களுடைய திறமையை பரிசோதிக்க விரும்புகிறேன்.
எனவே முதலாவதாக, நீங்கள் அனைவரும் நன்றாகக் குதித்து நடனமாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். ராஜாவின் கட்டளையைக் கேட்ட அனைவரும் திகைப்புற்றனர்.
ஏனெனில் நடனமாடினால் தங்களுடைய ஆடைகளில் தாங்கள் பதுக்கி வைத்துள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள் கீழே விழுந்து விடுமே என்று அஞ்சினர். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் எந்தவொரு தயக்கமுமின்றி நன்றாக குதித்து நடனமாடினார்.
ராஜா நடனமாடத் தயங்கியவர்களை நோக்கி: நீங்கள் செய்துள்ள தவறு எனக்குத் தெரியும், உங்களுடைய உண்மையைப் பரிசோதிப்பதற்காகவே உங்களைக் கருவூலத்தைப் பார்வையிட அனுமதித்தேன் என்று கூறினார். அப்பொழுது அவர்கள் அனைவரும் வெட்கி தலை குனிந்தனர்.
ஆனால், எந்தவொரு ஆபரணங்களையும் எடுக்காமல், தனது உண்மைத் தன்மையை வெளிப்படுத்தின நபரையோ கருவூலத்தின் தலைமை அதிகாரியாக
ஏற்படுத்தினார்.
ஆம், உண்மை என்றுமே உயர்வைத் தரும்.
வேதத்தில் பார்ப்போம்,
எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
லூக்கா:9:17.
கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
லூக்கா:16 :10
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
நீதிமொ:28:20.
பிரியமானவர்களே,
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் என்று திருமறை கூறுகிறது. நாமும், நமது வாழ்வின் அனைத்துச் செயல்களையும் உண்மையாகச் செய்வோமெனில் ஆண்டவர் நம்மையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.
திருமறையில் “நெகேமியா” என்ற ஒரு பக்தரைக் குறித்துக் காண்கின்றோம். அவர் எருசலேம் நகரின் அதிபதியாக பணி செய்த காலங்களில் மிகவும் உண்மையுள்ளவராக பணியாற்றினார். தனக்கு முன்னிருந்த அதிபதிகள் மக்களுக்குப் பாரமாயிருந்தார்கள் என்றும், நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படி செய்யவில்லை நெகேமியா 5: 15
என்றும் தனது உண்மைத் தன்மையைக் குறித்துக் குறிப்பிடுகிறார்.
நாமும் பணி செய்கின்ற இடங்களில் உண்மையுள்ளவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணி செய்யுமிடத்திற்கு செல்வது, காலை முதல் மாலை வரை கடினமாக உழைப்பது, ஊதியத்திற்கு அதிகமான வருமானத்தை எதிர்பாராமல் வாழ்வது, பணி செய்யும் நிறுவனத்திற்கு அனைத்து விதங்களிலும் நம்பகத் தன்மையுடன் செயல்படுவது போன்றவற்றை உண்மையாக வாழ்வதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இவ்விதம் நாம் உண்மையுள்ளவர்களாக வாழ்ந்தால் கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்
மத்தேயு 25 : 21 என்ற திருமறை வாசகத்திற்கேற்ப கடவுள் நம்மையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.
மோசேயை குறித்து கர்த்தர் சொல்லும் போது, என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என கூறுகிறார்.
ஆகவே அன்பார்ந்தோரே!
நாம் உண்மையுள்ளவர்களாய் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.நாம் வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் உண்மை உள்ளவர்களாய் வாழுவோம்.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து சகல
ஆசீர்வாதங்களையும்
உயர்வுகளையும், பெற்றுக் கொள்ள கர்த்தராகிய தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்