Daily Manna 161

மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 1 கொரிந்தியர்:15 :33.

மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
1 கொரிந்தியர்:15 :33.
*************
அன்பானவர்களே,

இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஆண்டவரால் சிருஷ்டிக்கப்பட்ட முதல் பெண்மணி ஏவாள்.
“உலகனைத்திற்கும் தாயானவள்” என்ற பெயரை பெற்றவள். மாத்திரமல்ல, உலகம் அனைத்தையும் பாவத்தினால் கறைபடுவதற்குக் காரணமாக இருந்தவளும் இந்த ஏவளே.

ஏவாள் பாவம் செய்ய ஏதுவாயிருந்த காரணிகள் எவை என்பதை நாம் சிந்திப்பது நல்லது. முதலாவதாக, அவளுக்குள் உண்டான “இச்சை”தான் காரணம் என்று நாம் கூறலாம்.

இந்த “இச்சை” உண்டாக காரணமாய் அமைந்தது என்ன? கேள்விகளோடு கூடிய “தவறான சம்பாஷணை” தான் காரணம்.இந்த சம்பாஷணை அநேக நேரம் மிகவும் சாதாரணமாகவே ஆரம்பமாகும்.

ஒருவரோடொருவர் பேசாமல் யாருமே வாழ முடியாது. ஆனால், சம்பாஷணைகளில் பல ரகம் உண்டு. இருவருக்கு இடையிலான சம்பாஷணையாக இருக்கலாம், அல்லது பலர் கூடிய சம்பாஷணைகளாகவும் இருக்கலாம்.

மாத்திரமல்ல, இந்த சம்பாஷணைகள் ஒருவனை நல்வழிப்படுத்தலாம் அல்லது தவறான வழியிலும் இழுத்துச் செல்லலாம்.

ஏவாளுக்கும் சர்ப்பத்திற்கும் இடையேயான சம்பாஷணையோ, ஏவாளை மிகவும் தவறான நிலைக்கே இழுத்துச் சென்றது.

இந்நிலைக்கு ஏவாள் இழுப்புண்டு போகக் காரணம், சர்ப்பத்தின் கேள்வி முறையான சம்பாஷணை தான் என்றால் மறுப்பதற்கில்லை.

அந்தக் கேள்விகள் ஏவாளைத் தவறான சிந்தனைக்குள் இழுத்துச் சென்று, இறுதியில் தேவ கட்டளையையே மீற வைத்து விட்டது. இன்று நம்முடைய சம்பாஷணை யாரோடு எப்படி இருக்கிறது?? என்று சிந்தித்துப் பாருங்கள்.

வேதத்தில் பார்ப்போம்,

ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளினாலே மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
எபேசியர் :5:6

மோசம் போகாதிருங்கள். ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்
1கொரிந்தியர்:15:33.

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு:12:36

பிரியமானவர்களே,

காலையில் எழுந்ததிலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை, நாம் யாரோடு பேசினோம், எதைக் குறித்து என்ன பேசினோம் என ஒரு கணக்கு வைக்கக் கூடுமானால், அனேக நேரம் நம்மைக் குறித்து நாமே நிச்சயம் வெட்கப்பட நேரிடும்.

விசேஷமாக இந்த நாட்களில் தொலைபேசி தொடர்புகள் அதிகரித்திருப்பதால் பேச்சுக்களும் அதிகரித்து விட்டன.

அவற்றில் எத்தனை ஆரோக்கியமானவை, எத்தனை வீணானவை என்பது யாருக்குத் தெரியும்? வீண் பேச்சுக்கள் நமது கிறிஸ்தவ ஒழுக்கத்தையே கெடுத்துப் போடும்.
என்று பவுல் எச்சரிக்கின்றார்.

அன்றாட வாழ்க்கையில் நாம் யாருடன் சம்பாஷிக்கின்றோம், எப்படியான சம்பாஷணைகளில் ஈடுபடுகின்றோம், அவை நம்மையும் பிறரையும் நல்வழிப்படுத்துகின்றனவா? அல்லது தேவனுக்கும் நமக்குமுள்ள ஐக்கியத்தைப் பலப்படுத்தியிருக்கின்றதா?

நமது இருதயம் எப்போதும் வேத வசனங்களால் நிரம்பியிருக்கட்டும்.
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகாது:

தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
ஆம், நம் உதட்டை ஒவ்வொரு நாளும் காத்துக் கொள்ளவும் ஆண்டவருக்கு பிரியமானதை பேச கற்றுக் கொள்ளவும் தேவனாகிய கர்த்தர் தாமே நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *