உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர். ஏசாயா: 26 :3.
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்.
ஏசாயா: 26 :3.
=========================
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முறை ஒரு குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். போகிற வழியில், ஒரு பெரிய ஏரி எதிர்பட்டது .
அதன் அருகில் பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
குரு தன்னுடைய சீடர்களில் ஒருவர் மனக் குழப்பத்துடன் இருப்பதைக் கண்டு, அவரை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி மறுகரையில் ஏறியைக் கடந்து சென்றார்.ஏரி நீர் கலங்கி விட்டது.
அத்துடன் ஏரியின் கீழ்ப்பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக்
கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டு போய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பி விட்டான். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம்
சென்ற பிறகு, குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.நீர்நிலை அருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை மொண்டு கொண்டு சீடன் குருவிடம் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு நீ என்ன செய்தாய்..? என்று கேட்டார்
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி! என்றான்.
நம் மனமும் அப்படிப்பட்டது தான்..
நம் மனம் குழப்பத்தில் இருக்கும் போது ஒன்றும் செய்ய வேண்டாம். அமைதியாக மனதை அப்படியே கடவுளிடம் விட்டு விட வேண்டும்.
சிறிது நேரத்திற்குப் பின் அந்த மனது கடவுளின் அருளால் சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்.
அது கடவுளின் அற்புத சக்தியால் அமைதியாகிவிடும் .
நடக்க வேண்டியது எல்லாம் சரியாய் நடக்கும் அது நம்முடைய முயற்சியின்றி நடக்கும்.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! கடவுளின் பங்கு மாத்திரமே அதற்கு முக்கியம் என்றார். உடனே சீடன் தன் குருவின் அறிவுரையைக் கேட்டு மனத் தெளிவு அடைந்தான்.
வேதத்தில் பார்ப்போம்,
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா:35 :4.
நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
ஏசாயா:1:19.
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா:54 :10.
பிரியமானவர்களே,
நம்முடைய வாழ்க்கையில் பயம் நம்மை மனம் பதறச் செய்கிறது. அநேக வேளைகளில் எதிர்காலத்தைக் குறித்த பயம், மற்றும் பலவிதமான பயங்கள் நம்மைப் பற்றிக் கொள்கிறது.
பயம் நம்முடைய மனதைப் பாதிக்கிறது. நிலையற்ற விதத்தில் நம் மனம் பதறுகிறது. ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், நீங்கள் பயப்படாதிருங்கள் திடன் கொள்ளுங்கள் என்று.
நம்முடைய தேவன் வெறுமையாய் பயப்படாதிருங்கள் என்று சொல்லாமல், அவர் நமக்குச் செய்யப் போகும் நன்மையான காரியத்தைக் குறித்தும் பேசுகிறார்.
ஒரு வேளை நாம் கைவிடப்பட்டதைப் போல சோர்ந்து போயிருப்போமானால் ஆண்டவர் நமக்குப் பதிலளிக்க நம் பட்சத்தில் வருகிறேன் என்றும் சொல்லுகிறார்.
அவர் வந்து நம்மை இரட்சிப்பார். இந்த வார்த்தை நமக்கு எவ்வளவு பெரிய ஒரு ஆறுதலும் தேறுதலுமான வார்த்தையாய் இருக்கிறது. இவ்விதமாய் நமக்கு ஆறுதல் அளிக்கக்கூடியவர் இந்த உலகில் வேறு யாராகிலும் இருக்கக் கூடுமா?
நம்முடைய வாழ்க்கையில் தேவனைப் பற்றிக் கொள்வோம்.
ஆண்டவருடைய பாதையில் நடப்பதற்கு நம்மைத் தாழ்த்தி ஒப்புக் கொடுப்போம்.
தேவன் மிகுந்த கிருபையும் இரக்கமும் உள்ளவர். அவர் ஒரு நாளும் நம்மைக் கைவிட மாட்டார்.அவரே நமக்கு ஆறுதலையும், மனத் தெளிவையும், சமாதானத்தையும் தருகிறவர்.அவரின் அன்பிலே ஒவ்வொரு நாளும் நிலைத்திருப்போம்.
கைவிடாத நேசராம் இயேசு கிறிஸ்து நம்மோடு கூடவே இருந்து நம்மை காத்து வழிநடத்துவாராக.
ஆமென்.