அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்.” யோபு :23:10.
அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக
விளங்குவேன்.”
யோபு :23:10.
=========================
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பொன்னை விரும்பாத மனுஷனே இல்லை என்று சொல்லாம். அரசனானாலும், ஏழையானாலும் எவராலும் போற்றக் கூடியதுமான இந்தப் பொன், விலையுயர்ந்ததும், தரத்தில் உயர்ந்ததுமாகும்.
இவ்வுலகில் மட்டுமல்ல, நாம் அனைவரும் வாஞ்சிக்கும் பரலோகத்தின் வீதி கூட சுத்த பொன்னினால் வெளி.21:21 ஆனது என்று வாசிக்கிறோம்.
இந்த சாதாரணமாக “சுத்த பொன்” எப்படிப் பெற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை ஒப்பிட்டே, நமது ஆவிக்குரிய வாழ்வில் ‘புடமிடுதல்’ என்பதைக் கற்றுக் கொள்கிறோம்.
மண்ணிலிருந்து எடுக்கப்படுகின்ற மூலப் பொருளானது உலையில் போடப்பட்டு அக்கினியினால் சுடப்படுகிறது. தேவையற்ற உலோகங்கள் அகற்றப்பட்ட பின் எஞ்சுவது தான் சுத்தமான பொன்.
இப்படியே, ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் புடமிடப்படுகின்றனர். ஏசாயா :48:10 இல், “இதோ, உன்னைப் புடமிட்டேன்…” என்றும், எரேமியா:9:7 இல், நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன்…” என்றும் கர்த்தரே கூறினார்.
ஆம், தண்டித்தோ, சிட்சித்தோ, நமது வாழ்விலுள்ள அழுக்குகளையெல்லாம் நீங்கும் படி, பல பாடுகளை அனுமதித்தோ, தமது முகம் நம்மில் தெரியுமளவுக்கு நாம் சுத்த பொன்னாக விளங்கும் வரைக்கும் ஆண்டவர் நம்மைப் புடமிடுகிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்;
எரேமியா: 9 :7.
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
நீதிமொழிகள்: 17 :3.
வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு.
யோபு :28 :1.
பிரியமானவர்களே,
ஆகவே, புடமிடுதல் என்பது நன்மைக்குரியதே தவிர கடின பாதையானாலும் அது தீமையானதல்ல. நம்மிலுள்ள பாவ அழுக்குகள் நீங்கப் பெற்று, நாம் கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளும் படிக்கு புடமிடுதல் நம் வாழ்வில் பெரிய காரியம் செய்கிறது.
அக்கினியில் போடப்பட்டு, சோதிக்கப்படாத பொன் எப்படி விலை மதிப்பற்றதோ, சோதிக்கப்படாத விசுவாசமும் அப்படியே. சோதனை என்ற அக்கினியில் தான் நாம் உறுதிப்படுகிறோம், பரிசுத்தமாக்கப்படுகிறோம் என்ற இரகசியம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த சுத்திகரிப்பானது, நமது விசுவாச ஓட்டத்தை உறுதியோடு ஓட நம்மைப் பெலப்படுத்துகிறது.
யோபுவின் வாழ்க்கையில் நாம் இதனைக் காண்கிறோம். இறுதியில் யோபு இருமடங்கு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். ஆகையால், விலையேறப் பெற்ற நமது விசுவாசம் சோதிக்கப்படும் போது நாம் சோர்ந்து போக வேண்டாம்.
“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்”
யாக்கோபு.1:12.
இந்த பாக்கியத்தை நினைக்கையில், இவ்வுலக பாடுகள் நமது விசுவாச ஓட்டத்தை எவ்விதத்திலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஆகவே, வாழ்வில் எதிர்கொள்ளும் எவ்வித பாடுகளையும் தைரியத்தோடு சந்தித்து அதை மேற்கொள்வோமாக. தேவன் நமக்குப் பெலன் தருவார்.
நாமும் தேவ பெலத்தினால் சோதனையை வென்று ஜீவகிரீடத்தை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.