உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
யாக்கோபு 1:5
எனக்கு அன்பானவர்களே!
ஞானத்தின் உறைவிடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள்.ஒரு முறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டது. இந்த விஷயம் முனிவரிடம் வந்தது.
அப்போது முனிவர் சீடர்களிடம் இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது, சமையல் வேலை முடிய தாமதமாகும். எனவே இரண்டு பேரும் அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள் என்றார்.
குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல் முள் செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடி ஒரே எத்தில் மரத்தை தொட்டான்.
பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான்.
மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கண நேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.
இரண்டாவது சீடன் ஒரு அரிவாளை எடுத்து வந்து. முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் களைப்போடு அவன் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். பின்னர் அந்த மரத்தடியில் படுத்து இளைப்பாறினர்.
சீடனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான். இப்போது முனிவர் முதல் சீடனிடம் சென்று, இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி, என்றார். முதலாம் சீடன் கோபப்பட்டான். சுவாமி, இன்னும் போட்டியே வைக்கவில்லை, அதற்குள் எப்படி அவனை சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான்.
முனிவர் அவனிடம் நான் பழம் பறிக்கச் சொன்னதே, ஒரு வகை போட்டி தான், நீ மரத்தருகே தாவிக் குதித்து பழத்தைப் பறித்தது, சுய நலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய், நான் மட்டுமே பலன் அடைந்தேன்.
ஆனால் இரண்டாம் சீடனோ, பாதை இல்லாத இடத்தில் பாதையைச் அமைத்து எனக்கு மட்டுமின்றி, ஊராருக்கும். வழிப் போக்கர்களுக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும் படி செய்தான். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க செய்பவனே, “அதிபுத்திசாலி” என்றார்.
புத்திசாலி என்பவன் தனக்காக மட்டுமே உழைத்து, சம்பாதித்து, தான் மட்டுமே உண்டு, உடுத்தி முன்னேறுவது அல்ல….
அப்படிபட்டவனுடைய பெயர் சுயநலவாதி ..
பிறருக்கும், தன்னால் முடிந்த உதவிகளை தேவையிலிருப்போருக்கு செய்து கொடுத்து,
அது மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்த அனைவருமே முன்னேற வழி செய்பவனே உண்மையான புத்திசாலி என்றார்.தன்னுடைய ஞானத்தை சிறந்த முறையில் பயன்படுத்திய இரண்டாம் சீடனே புத்திசாலி என தீர்ப்பளித்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
சங்கீதம் :111:10.
புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக் கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக் கொள், அதுவே உனக்கு ஜீவன்.
நீதிமொழிகள்: 4:13
புத்திமதிகளைக் காத்துக் கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;
நீதிமொழிகள்: 10:17.
பிரியமானவர்களே,
ஒரு மனிதன் எவ்வளவு தான் படித்திருந்தாலும், அவன் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவனை சார்ந்தவர்கள் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடையும் போது தான் அவன் பெற்ற அறிவு அறிவாய் மாறுகிறது.
வேதாகமத்தில் எஸ்தர் ராஜாத்தியின் வாழ்க்கை ஓர் சிறந்த எடுத்துக்காட்டாய் அமைகிறது.
தான் சுகமாய் வாழ்ந்திருப்பது போல தன் ஜனங்கள் அனைவரும் வாழ வேண்டும் என்று நினைத்து தன் ஜீவனையும் பொருட்படுத்தாது ராஜாவின் முன்பாக நின்றாள்.அதன் முகாந்திரம் அவளும் அவளின் சர்வ ஜனங்களும் இரட்சிக்கப்பட்டார்கள்
தான் மட்டும் வாழ்ந்தால் போதாது, தன் மக்களையும் நேசித்து அவர்களுக்காக போராடிய தலைவர்கள் இவ்வுலகில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் நமது படிப்பு, பட்டம், பதவி, ஊழியம் என எதுவாயினும் நமக்கு இருக்கும் அறிவை அல்லது தாலந்தை மற்றவர்களுக்கும் பிரயோஜனமுன்டாக பிரயாசப்படுவோம்.
ஏனெனில் நமக்கு அறிவைத் தருகிறவர் தேவன் ஒருவரே. எனவே ஞானத்தை தரும் தேவனை நோக்கிப் பார்ப்போம் தேவ ஞானத்தை பெற்றுக் கொள்வோம்.
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
தேவன் தருகிற ஞானத்தைப் பெற்று யாவருக்கும் பயனுள்ள வாழ்வை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.