Daily Manna 172

நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணுவோம். தீத்து :2 :12.

நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணுவோம்.
தீத்து :2 :12.

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஆசை ஆசையாய் தான் அனிந்திருந்த விலை உயர்ந்த நகைகளையும் ஆடைகளையும் களைந்து விட்டு தன் வீட்டையும் துறந்து வீதிக்கு வந்தார் பட்டினத்தார் ஒருவர்.

மனைவி, தாயார்,
உற்றார்,உறவினர் என மொத்த உறவும் முட்டி மோதி கேட்டுப் பார்த்தும், கெஞ்சியும், சொல்லிப் பார்த்தும் அவரது மனம் லௌகீக வாழ்வில் லயிக்கவில்லை.

உறவின் மீதான உணர்வு அற்றவராய் வாழ்க்கையே இனி வானம் பார்த்து தான் என்று மரத்தடியைத் தேடிப் போனார் பட்டினத்தார் என்ற உயர் துறவி.

ஒரு நாள் பட்டினத்தார் வயல் வரப்பில் தலையில் கையை மடக்கி வைத்து படுத்திருந்தார்.

அவ்வழியே போன இரு பெண்களில் ஒரு பெண் சொன்னாள் இங்கே படுத்திருப்பவர் தான் இல்லம் துறந்த துறவி என்றாள். இரண்டாமவள் சொன்னாள், சுற்றம் துறந்தவர் சுகம் துறக்க மறுப்பதேன்? தரையில் படுக்கும் துறவிக்குத் தலையனைச் சுகம் தேவையோ!” என்றாள்.

இதைக் கேட்ட பட்டினத்தாரோ வெட்கிப் போனார். சுகத்தைத் துறக்காத நான், எல்லாம் துறந்தேன் என்று எண்ணிக் கொண்டேனே என்று அங்கிருந்து நகர்ந்தவர் அருகிலிருந்த தரைக்குச் சென்று கையை தலையில் வைக்காது படுத்திருந்தார்.

இளக்காரமாய் பேசிச் சென்ற பெண்கள் தண்ணீர் குடத்தோடு திரும்பி வந்த போது முதல் பெண் “பார்த்தாயா பட்டினத்தாரை, நீ சொன்னதைக் கேட்டதால் தலைச் சுகத்தையும் துறந்து தரையில் கிடப்பதை. இவரைப் போய் ஏளனம் செய்தாயே”! என்றாள்.

இதைக் கேட்ட மற்றவள் “கடந்து போகும் பெண்கள் தம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்கும் புத்தி, இன்னும் இவரை விட்டு மாறவில்லை. பூலோக வாழ்க்கையில் நாட்டம் கொண்டிருக்கிறார். இவரெல்லாம் என்ன துறவி?” என்று போட்டாளே இன்னொரு போடு.

பட்டினத்தாருக்கு உண்மையான துறவு பற்றி மீண்டும் பாடம் கிட்டியது. துறவு என்று வந்து விட்டால் அகம், புறம், இகம், சுகம், என்று உலக நடப்புகளில் நாட்டமின்றி இறை சிந்தனையும் அவரை அடைவதுமே லட்சியமென்றும் மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்திருப்பதே துறவு என்பதை பட்டினத்தாரின் உணர்த்துக் கொண்டார்.

துறவு என்பது சுகங்களின் மீதும் உணர்வுகளின் மீதும் பற்றறிருப்பது. சல்லிக் காசு கூட தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் சாதாக்குடிலில் இருப்பது.

ஆனால் இன்றைய துறவிகளாக தன்னைக் காட்டிக் கொள்பவர்கள் தனக்கென்று ஒரு ஆடையை வடிவமைத்துக் கொண்டு மக்களிடம் இறை போதனைகள் செய்பவர்கள் எத்தகையவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் துறவு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாது இருக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
ரோமர் :8:9

வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
சங்கீதம் :119:113.

பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக் கடவன்.
லூக்கா:9 :23.

பிரியமானவர்களே,

மனித மனமும் வாழ்வும் எப்போதுமே சிக்கல்கள் நிறைந்த ஒரு போர்க் களமாகவே உள்ளது. முரண்பாடுகள் நிறைந்த மனமே அதற்கான காரணம்.

இறைவன் பற்றிய ஆன்மீகத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறேன் என்று ஆன்மீகம் பற்றிய அத்தனை புத்தகங்களையும் படித்து விட்டு அதை அப்படியே மக்களுக்கு சுவை பட எடுத்துச் சொல்ல வேண்டும்.

கல்லூரி ஆசிரியர் கூட தனக்கு எந்த துறையில் நல்ல தேர்ச்சி இருக்கிறதோ அதேத் துறையை நன்கு படித்து அந்த பாடத்தைப் பற்றி அடுத்து வரும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

இப்படி வெறுமனே எடுத்துச் சொல்பவர்களுக்கு ஏன் இத்தனை பரிவாரங்களும், பணமும் ஆர்பாட்டங்களும் என்பது விளங்கவில்லை.

ஆன்மீகத்தை வியாபாரப் பொருளாக விற்றுக் காசு பார்க்கிறார்கள். இந்த வியாபாரப் போட்டியில் ஒன்றுமில்லா வேசத்தையும் போலிகளையும் மக்களிடம் பெரிய மனிதர்களாக அடையாளம் காட்டி மக்களை ஏமாறத் தூண்டுகின்றனர் என்றால் மிகையாகாது.

ஆன்மீகத்தில் எந்த விதத்திலும் சுய ஆராய்ச்சியில் ஈடுபடாமலும், இறைவனோடு ஒன்றிப் போகும் தவமோ, குறைந்த பட்சம் ஜெபமோ, தியானமோ கூட செய்து பார்க்காதவர்கள்,
ஏட்டுப் புத்தகத்தில் கற்றதை ரோட்டுக்கு வந்து வாந்தி எடுக்கும் வேலையை மட்டும் செய்பவர்களை துறவிகள் என்று மக்கள் நினைத்துக் கொண்டு அவர்களுக்கு முக்கியம் கொடுத்து பெரியவர்களாக்குவது பரிதாபத்திற்கு உரியது.

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே எடுத்துச் சொல்பவன் துறவி அல்ல. வாழ்ந்து காட்டுபவன் தான் உண்மையான துறவி. நிஜத் துறவிகள் என்றும்
தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

இறைவனை நீங்களே தேடுங்கள். தனியாக அமர்ந்து தியானியுங்கள்.
வேதத்தை பற்றிய சந்தேகம் வரும் போது தேவ உதவியோடு தேவ மனிதர்களை நாடி மறைபொருள் பற்றிய தெளிவை பெறலாம்.

கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்;எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக் கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக் கொள்ளுவேன்.

உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் என்ற வசனத்தை படிப்பதோடு மட்டுமல்ல நம் வாழ்வை கர்த்தருக்குள்ளாக சீரமைத்து அவரின் பாதையில் நடப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் இன்றும் என்றும் சதாகாலமும் நம்மோடு கூட இருப்பதாக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *