சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. 1 இராஜாக்கள்:3:10
சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
1 இராஜாக்கள்:3:10
எனக்கு அன்பானவர்களே!
நம் வேண்டுதலை நிறைவேற்றுகிறவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் “கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே…உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே…” என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.
அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி, “நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்க வேண்டும்.” என்றார்.
பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு கேட்டார். என் மகன் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்.” என்றுக் கேட்டான்.
இந்த வரத்தில் தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை நூறாண்டு நாங்கள் வாழ வேண்டும், , ஏழு மாடி வீடு வேண்டும் என்பதையெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.
அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார்.
புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையில் முன்னேற மிக முக்கியமான ஒன்று தான்.ஆனால்
நாம் விரும்பியதை எல்லாம் கேட்பதல்ல, நம் கர்த்தர் என்ன விரும்புகிறார் என அறிந்து ஜெபிப்பதே உகந்த ஜெபமாக மாறும்.
அவரின் சித்தத்தை அறிந்து அதன்படி கேட்கும் ஜெபத்திற்கு ஆற்றல் அதிகம்.
வேதத்தில் பார்ப்போம்,
ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக் கொண்டபடியினால்,
1 இராஜாக்கள் 3:11
உன் வார்த்தைகளின் படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.
1 இராஜாக்கள்:3:12
இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.
1 இராஜாக்கள் :3:13
பிரியமானவர்களே,
ஆசீர்வாதத்தைக் கேட்டு கேட்டு தேவனிடமிருந்து வாங்க வேண்டும் என்று நினைப்போம். அது உண்மை தான். ஆனால் நாம் எப்படி கேட்க வேண்டும் என தெளிவாக அறிந்து கேட்கும் போது, ஆண்டவர் நம்மை அபரிதமாய் ஆசீர்வதிக்கிறார்.
இங்கு வேத்தில் 1இராஜாக்கள் 3வது அதிகாரத்திலே சாலொமோனிடத்திலே ஒரு வார்த்தையை ஆண்டவர் கேட்கிறார். இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
சாலொமோன் என்ன சொன்னார் தெரியுமா? நான் போக்குவரத்து அறியாத ஒரு சிறு பிள்ளையாய் இருக்கிறேன், ஜனங்களோ பெரிய அளவில் இருக்கிறார்கள், ஆகையினாலே எனக்கு, ஞான இருதயத்தைத் தாரும் என்று அவர் கேட்கிறார்.
சாலொமோன் ஞான இருதயத்தை கேட்ட போது, ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. ஆகையினால் தேவன் அவனை நோக்கி:
நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக் கொண்டபடியினால், உன் வார்த்தைகளின் படி செய்தேன்;
ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை 1இராஜா.2:10-12.என்றார்.
தேவன் சாலொமோன் கேட்ட ஞான இருதயத்தைக் கொடுத்து விட்டு, 13-வது வசனத்தில், இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.
உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப் பண்ணுவேன் என்றார்.
ஆசீர்வாதம் எப்படி வருகிறதென்று பாருங்கள்! அவர் நாம் கேட்பதை இன்னதென்று அவர் காது கொடுத்து கேட்கிறார், நாம் என்ன நோக்கத்திற்காக கேட்கிறோம் என்பதை அவர் யோசித்து பார்க்கிறார்.
ஆனால் அவர் கொடுக்கும் போது எப்படிக் கொடுக்கிறார் என்றால், நீ சரியானதைக் கேட்டாய், ஆகையினாலே உனக்கு வேண்டிய யாவற்றையும் ஆசீர்வதிக்க விரும்புகிறேன் என்று சொல்லி நம்மை ஆசீவதிக்கிறார்.
சாலொமோன்
கேட்காத அனேக ஆசீர்வாதங்களை கூட அவனுக்கு நிறைவாய் கொடுத்தார் தேவன்.
நாமும் ஜெபத்தில் நமக்கு வேண்டியவற்றை ஞானமாகவும், தேவனுக்கு பிரியமானதாகவும் கேட்டு பெற்றுக் கொள்ள பழகுவோம்.
அப்போது தேவன் நாம் கேளாத ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும் தலைமுறை தலைமுறையாக நினைத்தருளி நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
இத்தகைய ஆசீர்வாதங்களை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்