Daily Manna 183

சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; நீதிமொழிகள்: 13:4.

சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது;
நீதிமொழிகள்: 13:4.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும் படி வேண்டினான்.
அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் “டொக் டொக்கென்று” மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.

அதைப் பார்த்த ஒரு மனிதன்,அட “மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?” என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, “”மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் நிச்சயம் உணவு கிடைக்கும்…” என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, கொத்தி மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, “”மனிதனே, நீயும் தேடு… மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது உணவு கிடைக்கும்” என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், “நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமை தான் கிட்டும்” என்றார்

சோம்பேறித்தனம் என்றால் அலட்சியம், மந்தநிலை, தன் கடமைகளை புறக்கணித்தல் என்று பொருள்.

சோம்பேறித்தனம் என்பது தம் பணிகளைச் செய்யவோ, அல்லது வேலை செய்யவோ முக்கியமான கூடுகையில் கலந்து கொள்ளவோ ​​விருப்பமில்லாமல் இருப்பார்கள்.

இவர்கள் தூங்குவதற்கு முன் பல தீர்மானங்கள் எடுப்பார்கள். ஆனால், தூங்கி எழுந்தவுடன் அவையெல்லாம் இப்போது அவசியமில்லை என்று தாமதப்படுத்துவார்கள்.

அதோடு மட்டுமல்ல பலருக்கு பொருளாதார இழப்புகளையும் இவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள்.

வேதத்தில் பார்ப்போம்,

மிகுந்த சோம்பலினால் மேல் மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும்.
பிரசங்கி :10 :18.

அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடு வீடாய்த் திரியப் பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
1 தீமோத்தேயு: 5 :13.

புத்தியுள்ள மறு உத்தரவு சொல்லத் தகும் ஏழு பேரைப் பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
நீதிமொழிகள்:26 :16.

பிரியமானவர்களே,

“சோறு கண்ட இடம் சொர்க்கம்
திண்ணை கண்ட இடம் தூக்கம்” என்பது நம் முன்னோர் பழமொழி.

சோம்பேறிகள் பொதுவாக சொகுசு வாழ்க்கையை வாழ விரும்புபவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் எந்தச் சிந்தனையும் இல்லாமல், தூங்குவதிலேயே பாதி நேரத்தைக் கழிப்பார்கள்.

கனவு காண்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை.
சோம்பேறித்தனம் என்பது நம் ஆற்றலை மழுங்கடிக்க செய்யும் செயல் என பல அறிஞர்கள் விளக்கம்.

வாரம் முழுவதும் வேலை செய்யும் ஒருவர் ஞாயிற்றுக் கிழமையில் எந்த வேலையும் செய்யாமல் உண்பது, உறங்குவது என வீட்டிலேயே இருந்து விடுவார். அதையே ஒருவர் தினமும் செய்தால் ” “சோம்பேறி” என்ற பெயர் கிடைக்கும்.

சோம்பேறிகள் என்று அழைக்கப்படுபவர்கள் உண்மையில் சோம்பேறிகள் அல்ல, அவர்கள் சோம்பல் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள்.

அருமையான சகோதர, சகோதரியே,
இன்றைக்கு நாம் ஆவிக்குரிய சோம்பேறியாக இருக்கிறோமா? என சிந்திப்பது அவசியம். அநேகர் ஆவிக்குரிய சோம்பேறியாக இன்றைய நாட்களில் இருக்கிறார்கள்.

ஆகவே அவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய மெய்யான ஆசீர்வாதத்தைப் பார்க்க முடிவதில்லை. நீதிமொழிகள் 6:9 –ல் “சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” என்று வேதம் கடிந்து கொள்ளுகிறது.

வேதம் சொல்லுகிறது அதிகாலையில் தேவனை தேட வேண்டும் என்று. ஆனால் அநேகர் படுக்கையிலிருந்து எழும்புவதைக் கூட விரும்புவது கிடையாது.

ஆகவே நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தருக்குரிய காரியங்களில் விழிப்பாய் காணப்படுவது நல்லது.

நீ சோம்பேறியாக இருக்கும் பொழுது அநேக காரியங்களை விரும்பலாம், ஆனால் அவை உனக்கு கிடைக்காது என்று வேதம் சொல்லுகிறது.
“சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; நீதிமொழிகள்: 6:4. எனவே நமக்கு ஆவிக்குரிய கருசனை தேவை.

“சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை” நீதிமொழிகள்: 15:19. உன்னுடைய வாழ்வில் நீ சோம்பேறியாய் இருக்கும் போது, உன் வாழ்க்கை கரடுமுரடான முள்வேலிக்கு சமம்.அது மனிதர்கள் வாழ தகுதியான இடம் அல்ல.

ஞானத்தை நாம் கற்றுக் கொள்ளும்படியாக ஞானியையோ, அல்லது பெரிய ராஜாவையோ வேதம் நமக்கு உதாரணம் காட்டவில்லை. சாதாரண எறும்பை வைத்திருக்கிறார்.

நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார். எறும்பினுடைய ஞானத்தைப் பார். எறும்பு சரியான காலங்களில் தனக்குத் தேவையான தானியங்களைச் சேர்த்து வைப்பதுண்டு.

அந்த தானியங்களை சேர்க்கும் போது, அவைகள் முளைக்காமல் இருக்க விதையின் ஒரு பகுதியைக் கடித்து விட்டு, பத்திரமாய் சேர்க்கும். தேவன் படைத்த அந்த சிறிய எறும்பினிடத்தில் எவ்வளவு பெரிய ஞானம் உள்ளது என்பதைப் பாருங்கள்.

ஆகவே நாமும் ஞானத்தை நாடி, சோம்பலை தவிர்த்து புதிய உற்சாகத்தின் ஆவியைப் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.
.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *