Daily Manna 184

உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. லேவியராகமம்: 25:37

உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.
லேவியராகமம்: 25:37
~~~~~~~
எனக்கு அன்பானவர்களே,

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக் கொடுக்கும் ஒரு செல்வந்தனை அணுகினான். அதற்கு செல்வந்தன் “பணத்தை எப்போது திருப்பிக் கொடுப்பாய்?” என்று கேட்டார்.

தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருக்கேன். நல்ல விலை போகும் என் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் செல்வந்தன் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.
பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை.

ஆகையால் அவன் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.
தெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான்.

தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கும்
இவனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.
சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.

போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.
சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து “உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமனோ “குதிரையின் விலை 1 பவுன் தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால் தான் இக்குதிரையைக் கொடுப்பேன்” என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் வட்டிக்கு பணம் கொடுக்கும் செல்வந்தரிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை அவன் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான்.

அதற்கு தெனாலிராமன் “ஐயா செல்வந்தனே குதிரையை விற்றுத் தான் உமக்குப் பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன் படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே… இது என்ன நியாயம்” என்றான்.

செல்வந்தனோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னரிடம் சென்றது.
மன்னர் இவ்வழக்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.

என் அன்புக்குாியவா்களே
பணத்தை வட்டிக்கு விடக் கூடாது என்பது தேவனுடைய பிரமாணம்.அநியாய வட்டிப் பணத்தினால் ஒரு நாளும் ஆசீா்வதிக்கபட முடியாது என்று வேதம் சொல்கிறது‌.

வேதத்தில் பார்ப்போம்,

வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கே உண்மையாய்த் தீர்த்து,
எசேக்கியேல்:18:8.

வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
எசேக்கியேல்: 18 :13.

தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப் படுவதில்லை.
சங்கீதம்:15 :5.

பிரியமானவர்களே,

உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப் போனவனானால், அவனை ஆதரிக்க வேண்டும், பரதேசியைப் போலும் தங்க வந்தவனைப் போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.
லேவி 25:35 -37 என்று கூறுகின்றன.

கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டி வாங்காயாக. உபாகமம் 23:19 -20 என்று ஆண்டவர் கூறுகின்றார்.

நீ அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப் பண்ணுகிறவன், தரித்திரர் பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.
நீதிமொழிகள்: 28 :8. அநியாய வட்டி வாங்குகிறவன் அதை ஒரு போதும் அவனாலும் அவன் சந்ததியாலும் அதை நிம்மதியாய் அனுபவிக்கவே முடியாது.

ஏனென்றால் ஆண்டவரின் வார்த்தையை மீறி செயல்படும் போது, அங்கு ஆசீர்வாதத்தை ஒரு போதும் காண முடியாது. அங்கே சஞ்சலமும் தவிப்பும் வேதனையும் பெருகிக் கொண்டே இருக்கும்.

அநியாய வட்டி வாங்கின செல்வந்தனைப் போல நம்மில் ஒருவர் கூட ஆண்டவர் வெறுக்கிற எந்த ஒரு காரியத்தையும் நாம் செய்யாத படிக்கு கவனம் உள்ளவர்களாக இருப்போம்.

அநியாயமாய் சம்பாதித்த போருள் ஒரு நாளில் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடும் என்பதை அறியாமல் வட்டி வாங்கி பிழைத்தான்.அது போல நீங்கள் இராதீா்கள். அது உங்களுக்கு ஒரு போதும் ஆசீா்வாதமல்ல.

உங்கள் பணம் பாதுகாக்கப்பட ஏழைகளுக்கு வட்டியில்லாமல் கொடுங்கள்.
அதினால் நீங்கள் ஆசீா்வதிக்கப்படுவீா்கள். .

வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு, அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்: எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். என்று வேதம் கூறுகின்றன.

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நீதிமொழிகள்: 19 17.
என்ற எண்ணத்துடன் உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்யுங்கள். கா்த்தா் உங்களுக்குத் தேவையான சகல நன்மைகளையும் தருவதோடு உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் ஆசீா்வாதமாயிருப்பதை உங்கள் கண் காணும்படியும் செய்வார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தருகிற இந்த ஆசீர்வாதங்களை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *