Daily Manna 186

செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும். சங்கீதம்:112:4

செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்.
சங்கீதம்:112:4
*************
அன்பானவர்களே,

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அருட் திரு. மார்டின் நீமோலர் (Rev. Martin Niemoller), என்பவர் ஜெர்மனியில் மிகவும் பிரசித்தி பெற்ற போதகர்.

அவர் வெளிப்படையாக ஹிட்லரை எதிர்த்து பேசியதால் எட்டு வருடங்கள் நாஜி போர்க் கைதிகள் முகாமில் சிறைவாசம் அனுபவித்தார்.

1944ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று நீமோலர் டாச்சோவில் (Dachau) தன்னுடன் இருந்த மற்ற சிறைக் கைதிகளை பார்த்து “என் அருமை நண்பர்களே,
இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, பெத்லகேமில் குழந்தையாய்ப் பிறந்து, நம்முடைய கடினமான பாரங்களை சுமக்க வந்த அந்த ஒப்பில்லாதவரைத் தேடுவோம்.

பரத்திலிருந்து ஓர் விடியல் நம்மேல் உதித்தது,” என்றார்
இருண்ட சிறைச்சாலையில் தங்கியிருந்த நீமோலர், “அன்று ஆடு மேய்ப்பவர்கள் மேல் பிரகாசமான ஒளி உதித்தது. அது போலவே இன்று நம்
இருள் சூழ்ந்த சிறை வாழ்க்கைக்குள் ஒளியாய் புகுந்து விட்டார்.

நாம் சுமந்து செல்லும் துன்பம், துயரம், குற்ற உணர்வு, தனிமை ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.
இந்த இருளிலும் ஜீவ ஒளியின் கதிர்கள் நம் மேல் உதிக்கும்” என்ற நற்செய்தியை பகிர்ந்து கொண்டார்.

ஒரு வேளை நாமும் இருளில் இருப்பதை போல உணரலாம்.இருளில் ஒளியாக வந்துதித்த தேவன் நம் வாழ்வையும் பிரகாசிக்க செய்வார்.

வேதத்தில் பார்ப்போம்

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது ,
மத்தேயு: 4:15

அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
லூக்கா :1:78.

நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
லூக்கா :1:79

பிரியமானவர்களே,

இருள் என்னும் சிறையிலிருக்கும் மக்களை விடுவிப்பதற்காக, இயேசு கிறிஸ்து உலகத்திற்கு ஒளியாக வந்தார். “அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதை பற்றிக் கொள்ளவில்லை என்று வேதம் கூறுகிறது.

இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்” ஆம்! இயேசு சென்ற இடமெல்லாம் “வெளிச்சம்” வீசியது.

“தேவன் அருளிய தீபத்தால் நான் இருளை கடந்து போனேன்”என்று யோபுவும், “கர்த்தர் அருளிய வெளிச்சத்தினால் என் இருளானது வெளிச்சமாக மாறுகிறது” என்று சங்கீதக்காரனும் கூறுகிறார்கள்.

“நான் இருளிலே உட்கார்ந்திருந்தாலும் என் தேவன் என்னை சுற்றிலும் வெளிச்சமாக இருப்பார்” என்று மீகா தீர்க்கன் கூறுகிறார். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மிகவும் அருமையானவைகள்.

இன்றைக்கு இந்த வார்த்தைகளை உங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் இதை தியானித்து ஆசீர்வாதம் பெறுங்கள்.

அவரே உங்கள் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறார். வெளிச்சத்தின் தேவன் நம்மோடு இருக்கும்போது, நாம் ஏன் இருளில் வாழ வேண்டும்?

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நெருங்கி அந்த ஒளியிலேயே நடப்போம். ஒவ்வொரு நாளும் மன சமாதானத்தை காண்போம்.

நம் அருமை இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தாமே நம் யாவருக்கும் மனநிறைவையும் சமாதானத்தையும் கட்டளையிடுவாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *