அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். லூக்கா: 7 :48.
அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
லூக்கா: 7 :48.
=========================
எனக்கு அன்பானவர்களே!
பாவங்களை நீக்கி பரிசுத்தப்படுத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நகரத்தில் ஒரு நீதிபதியின் மகன் பல குற்றம் செய்து குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டான். அவனுடைய குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டது.
நீதிபதி தீர்ப்பை கூறுவதற்கு முன்பு மகன் நீதிபதியை நோக்கி அப்பா என்னை மன்னித்து விடுங்கள். நான் தெரியாமல் செய்து விட்டேன், இனி மறுபடியுமாய் அந்த தவறை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று கதறி, கதறி அழுதான்.
நீதிபதியோ தன் தீர்ப்பை வாசித்தான். 5 ஆண்டு கடுங்காவல் அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் தண்டனையாக விதிக்கப்பட்டது. அந்த வாலிபரோ 10 லட்சம் ரூபாய்க்கு நான் எங்கே போவேன் என்று கூறி அழுதான்.
நீதிபதியோ தீர்ப்பை வாசித்த பிறகு ஆசனத்திலிருந்து இறங்கி தன் சீருடையை கழற்றி வைத்து விட்டு குற்றவாளி கூண்டுக்கு முன்பாக வந்து தன் கையில் வைத்திருந்த சூட்கேஸை திறந்து தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்து வைத்த 10 லட்சம் ரூபாயை உனக்காக கிரயம் செலுத்தி விட்டேன்.
இனி குற்றம் செய்யாதே என்று சொல்லி அவனை தண்டனையிலிருந்து விடுவித்தார் ஒரு உலக தகப்பன்.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்டு எடுக்க, தமது சொந்த இரத்தை கிரயமாய் செலுத்தி நம்மை மீட்டெடுத்தார் .
நாம் நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”
1 யோவான் 1:9
என்று வேதம் கூறுகிறது.
மன்னிப்பு என்பது தேவனுடைய அன்பினால் கிடைக்கின்ற மாபெரும் பரிசு, அது நம்முடைய பாவத்தையும் அதனால் ஏற்படுகிற விளைவுகளையும் அழித்துப் போடுகிறது.
“பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்” சங்கீதம் 103:11,12 என்று சங்கீதக்காரன் கூறுகிறான்.
வேதத்தில் பார்ப்போம்,
ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி;
லூக்கா: 7 :47.
நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்
சங்கீதம்: 32 :5.
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
ரோமர்: 4 :7.
பிரியமானவர்களே,
இயேசு உங்களை மிகவும் நேசிக்கிறார். அவர் உங்களை தமது சொந்த பிள்ளையாக ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறார்.
ஆம், அவருடைய அன்பிலிருந்து ஒருவராலும் உங்களை பிரிக்க இயலாது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தேவனை சார்ந்து கொள்ளுவது தான்.
ஒருமுறை இயேசு ஒரு பரிசேயன் வீட்டில் இருந்தார். அந்த நேரத்தில் அவ்வூரில் பாவமான வாழ்க்கை வாழ்ந்த ஒரு ஸ்திரீ ஒரு பரணியில் பரிமள தைலத்துடன் அங்கு வந்தாள்.
இயேசுவின் பாதங்களை அவள் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமள தைலத்தைப் பூசினாள்.
அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்ட போது, இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்”
லூக்கா :7:48. அவ்வூரார் முழுவதும் அவளை கேலியும் கிண்டலும் செய்தனர்.
“இந்த பாவி ஏன் இந்த வீட்டிற்குள் வருகிறாள்? அவள் ஏன் இயேசுவை தொந்தரவு செய்கிறாள்? அவள் ஏன் இங்கே இருக்கிறாள்?” என்று அநேக கேள்விகள் அவர்களுடைய மனதில் எழுந்திருக்கும்.
அவர்கள் அனைவருடைய சிந்தனையும் அவளை அங்கிருந்து துரத்த வேண்டுமென்பதே. மனிதர்களுடைய கேலியும் பரிகாசமும் நிறைந்த வார்த்தைகளால் அவள் அவமானத்தினால் நிறைந்து தலைகுனிந்து நின்றாள்.
ஆனால், இயேசுவின் அன்போ அவளுக்கு மன்னிப்பு வழங்கியது.
நம்முடைய தேவன் “இரக்கத்தில் உயர்ந்தவர்” என்பது எவ்வளவு உண்மை (எபேசியர் 2:4). அவரிடத்தில் வருகிற அனைவரையும் அவர் மன்னிப்பார்.
உண்மையான விடுதலையை பெற்றுக் கொள்ள உங்கள் பாவங்களை மறைக்காமல், அவற்றை இயேசுவிடம் அறிக்கை செய்யுங்கள். சிலுவையை நோக்கிப் பாருங்கள். அவர் ஒவ்வொரு பாவங்களையும் உங்களை விட்டு அகற்றுவார்.
“உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார் மேகத்தைப் போலவும் அகற்றி விட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக் கொண்டேன்”
ஏசாயா 44:22 என்று தேவன் நமக்கு உறுதியளிக்கின்றார்
அவைகள் மீண்டும் ஒரு போதும் உங்களை தொடராது மீகா: 7:19. அவர் அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் உங்கள் வாழ்வை கட்டுவார்.
நம்முடைய பாவங்களையும், மீறுதல்களையும் நோக்காமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இந்த ஓய்வு நாளில் பரிசுத்த வாழ்வு வாழ நம்மை தகுதிப்படுத்துவாராக
ஆமென்.