பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். பிரசங்கி: 7 :8.
பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
பிரசங்கி: 7 :8.
==========================
எனக்கு அன்பானவர்களே!
தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையை அளிக்கிற தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு பெரிய தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது.
ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது.
வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, *” நீ இங்கே எத்தனை வருஷமா இருக்க? “என்று கேட்டது.
தென்னங்கன்று சொன்னது,
” ஒரு வருஷமாய் “.
“ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னை விடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? ஏதாச்சும் உனக்கு வியாதியா ?” என்று கேட்டு விட்டு நக்கலாய்
சிரித்தது.
தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது. ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை விட உயரமாக வளர்ந்து விட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.
வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றை விட இருமடங்கு உயரமாக வளர்ந்து விட்டது. இப்போ தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது இன்னும் அதிகமானது.
“கடவுளுக்கு உன்னை பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல உன்னை வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!
நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணீர் தான் எனக்கும் கிடைக்குது. ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன் பாரு.
உன் வளர்ச்சி அவ்வளவு தான் போல் ” தோன்றுகிறது என்று பல வார்த்தைகளாலேயே குத்திக் குத்தி காயப்படுத்தியது.
தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.
இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் ,காய்களுமாக அழகாக மாறியது.
அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும் அதன் அருகில் இருந்த தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.
நல்ல உயரம் , பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை என வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின .
ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை .
இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான். முதலாவது மனிதன் பிடித்துக் கொள்ள ,அதன் குலைகளை வெட்டி எடுத்தான்.
வாழை மரம் கதறியது. அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது. ஆம் ,வாழைமரம் வெட்டி சாய்க்கப் பட்டது.
ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப்பட்டது.
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழை மரத்துக்குப் புரிந்தது.
ஒவ்வொரு நாளும் நமக்கும் இதைப் போன்று எத்தனை, எத்தனை கேலிகள், கிண்டல்களினால் மனம் சோர்ந்து போய் விட்டீர்களா?
கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போய் விடும்.” ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது.
பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்…
வேதத்தில் பார்ப்போம்,
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1 யோவான் :2 :16.
நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப் போவதாக.
சங்கீதம்: 31:18.
நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத் தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
1 பேதுரு: 5 :5.
பிரியமானவர்களே,
இந்த நவீன உலக வாழ்க்கையில் தாழ்மையாக நடப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. தாழ்மையுள்ள மனிதர்களைப் பார்ப்பதும் மிகவும் அரிதாயிருக்கின்றது.
எல்லா மனிதர்களும் மேட்டிமையுடனும் பெருமையுடனும் வாழ்வதைத் தான் பார்க்க முடிகின்றது. நான் பெரியவன் நீ பெரியவன் என்று போட்டி போட்டுக் கொண்டு வாழ்கின்றார்கள்.
அதின் காரணமாக போட்டிகள் பொறாமைகள் நிறைந்து மனதில் அன்பும் , சமாதானமும், இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
உன் தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையாய் நடப்பதை அல்லாமல், வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?”
(மீகா 6:8)
மனிதன் தேவனிடம் தேவைகளைக் கேட்கிறான். உலகம், வசதிகளை, ஆரோக்கியத்தை, செல்வங்களைக் கேட்கிறது. ஆனால் கர்த்தர் ஒருவனிடம் என்ன கேட்பார் தெரியுமா? மனத் தாழ்மையைத்தான்!
மேற்சொன்ன வசனத்திற்கு விளக்கம் தரும் ஒரு ஆங்கில வேதாகமம், “தேவனோடு கூட, நடக்கும் படியாக உன்னைத் தாழ்த்து” என்று குறிப்பிட்டிருக்கிறது. மனத் தாழ்மையுள்ளவர்களோடு தேவன் சரி சமானமாய் நடக்கிறார்; சஞ்சரிக்கிறார்.
ஏனெனில் அவர் மனத் தாழ்மையை தரித்துக் கொண்டவர். தம்மைத் தாமே வெறுமையாக்கி.. சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர்: 2:6,8.
இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில், தலைவிரித்தாடும் மாயை ஒன்று உண்டானால், அது ஆவிக்குரிய பெருமை தான்.
எனக்கு ஈடு இணை உண்டோ என்று பெருமைப்படுவது மட்டுமல்லாமல், மற்ற சகோதரர்களை தாக்கும்படி, தண்டாயுதங்களை எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் வரங்களை பெற்று விட்டாலோ, கேட்கவே வேண்டாம்!
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று சொல்லுகிறது மத்தேயு: 5:3.
தேவபிள்ளைகளே, திட்டமாய் அறிந்து கொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்;
“மன மேட்டிமையுள்ளவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை”
நீதிமொழிகள்: 16:5,18
கிறிஸ்துவின் தாழ்மையைத் தரித்துக் கொள்ளுங்கள்.
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்”
மத்தேயு: 11:29.
இன்றைக்கும் இது போன்ற ஒரு தாழ்மையான ஆவியை தரும்படி ஆண்டவரிடத்தில் நாம் கேட்போம். தாழ்மையுள்ளவர்களை அவர் நிலைநிறுத்துவார்.
ஏற்ற நேரத்தில் கனப்படுத்துவார்.
ஆம் நாமும் தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையை தரித்து தேவன் தருகிற ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்