நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா தானியேல் 6:20
நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா
***********
எனக்கு அன்பானவர்களே!
யாவற்றையும் நன்மையாய் செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு பழங்குடியின தலைவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவருக்குப் பிறகு அவருடைய ஒரே மகன் தான், சிங்காசனத்தில் அமரக் கூடியவன்.
ஆனால், அதற்கு அவன் தகுதியுள்ளவன் தானா என்பதை நிருபிக்கும் பொருட்டு, “அவன் ஒரு பயங்கரமான இருள் நிறைந்த காடு ஒன்று அங்கு இருக்கிறது.
அந்தக் காட்டில் பலவிதமான கொடிய மிருகங்களும், விலங்குகளும், விஷம் நிறைந்த பட்சி பறவைகளும், திருடர்களும் உயிரை பறிக்கும் அனைத்து விதமான தீமைகளும் அந்தக் காட்டில் நிறைந்து இருந்தன.
அந்த அடர்த்தியான காட்டை அவன் தனியாகவே கடந்து வர வேண்டும்” என்பது தான் நிபந்தனை.
அவன் பயத்தோடும், நடுக்கத்தோடும் காட்டிற்குள் சென்றான்.
அவனை, காட்டு மிருகங்கள் ஒன்றும் தீமை செய்யவில்லை. அவன் எந்த சேதமுமின்றி காட்டை கடந்து வந்தான். இது எப்படி நடந்தது என்று அந்த சிறுவனும், அவ்வூர் மக்களும் அதிசயம் அடைந்தனர்.
தன் மகன் இளவரசனாய் முடிசூட்டப்பட்டான்.
முடிசூட்டு விழா முடிந்தவுடன், அந்த பயணத்தைப் பற்றிய விபரங்களை தகப்பன் மகனுக்குத் தெரிவித்தார்.
என் மகனே, அந்த பயங்கரமான காட்டில் உனக்கு எந்தச் சேதமும் அணுகிவிடாதபடிக்கு, உன்னை பாதுகாக்க, நானும், என்னுடைய சில வீரர்களும் யாருக்கும் தெரியாமல் உன்னை பின் தொடர்ந்தே வந்தோம் என்று கூறினார
தன் தகப்பன் தன்னை பாதுகாக்க தன் பின் தொடர்ந்து வந்ததை அறிந்ததும், மகன் மிகுந்த பரவசமடைந்து தன் தகப்பனின் மார்பில் சாய்ந்து ஆனந்த கண்ணீர் விட்டு அப்பா, அப்பா என்று மகிழ்ந்தான்.
பிரியமானவர்களே,
ஒரு உலகப் பிரகாரமான தகப்பனின் உள்ளத்தில் இவ்வளவு அன்பு இருக்கும் போது, நம்மை உருவாக்கி, நம் மேல் அன்பு காட்டி பாதுகாத்த, அன்பு நிறைந்த ஆண்டவர், நம் மீது எவ்வளவு அன்பு வைத்திருப்பார்.
அவர் நம்மை ஒரு போதும் எந்த தீமைக்கும் ஒப்புக் கொடுக்க மாட்டார்.
நம் ஆண்டவர் சொல்லுகிறார். இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது என்று சொல்லுகிறார். அப்புறம் நான் ஏன் பயப்பட வேண்டும்.
வேதத்தில் பார்ப்போம்,
ராஜா கெபியின் கிட்ட வந்த போது, துயரச் சத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு, தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
தானியேல்:6:20
துன்பப்பட வேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சகாலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
1 பேதுரு 1:6
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குக் புடமும் சோதனை: மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
நீதிமொழிகள்:27:21
பிரியமானவர்களே,
தானியேலுக்குத் தீங்கு செய்ய, ராஜ்ய பிரதிநிதிகள் எல்லாரும் சதி ஆலோசனை செய்தார்கள். ராஜாவும், தானியலை தூக்கி சிங்கக்கெபியில் போடும்படி கட்டளையிட்டான். கர்த்தரோ, தானியேல் கூடவே இருந்து தீமையினின்று பாதுகாத்துக் கொள்ள சிங்கங்களின் வாயைக் கட்டிப் போட்டு தானியேலை தப்புவித்தார்.
ஆண்டவரை தேடுகிறவன் சிங்கங்கள் நடுவில் இருந்தாலும் நிம்மதியாய் தூங்குவான்.
தீமை செய்கிறவன் அரண்மனையில் இருந்தாலும் , கலக்கம் அவனை தூங்க விடாது.
இங்கு துயரப்பட வேண்டிய தானியேல் துணிவாய் இருக்க, துணிவாய் இருக்க வேண்டிய ராஜா துயரமாக இருந்தான் பாருங்கள்…
இடைவிடாமல் தேவனை ஆராதிக்கிற மனுஷனுக்கு தடைகள் ஏது? தடை போட நினைத்த மனுஷர் எல்லாம் சிங்கங்களின் தாடைகளுக்கு உணவாக ஆனார்கள்…
இடைவிடாமல் ஜெபித்து பாருங்கள்.. இடைவிடாமல் கர்த்தரை துதித்துப் பாருங்கள்… இடைவிடாமல் தேவனோடு உறவாடி பாருங்கள்.. இடைவிடாத மகிழ்ச்சி உங்களுக்கு சொந்தமாகும்.
போர்க்களங்கள் காண நேர்ந்தாலும், போராட்டங்கள் நம்மை சுற்றிலும் நடந்தாலும், நம் இருதயம் முழுவதும் தேவ பிரசன்னம் நிரம்பியிருக்கும்..
ஆண்டவர் அருளும் விடுதலை வித்தியாசமானவை.
ஜெபம் என்பது “ஒரு பகுதி அல்ல” அது ஆண்டவரோடு இணைந்து வாழும் வாழ்க்கை”. அது ஒரு உன்னத உறவு.
ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உறவு சரியாய் இருந்தால் கடலே பொங்கி வந்தாலும் கலங்க மாட்டோம்.
வேதம் சொல்லுகிறது, அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்.
{சங்கீதம் 46:3.}என்று .
ஏன் என்றால், அண்ட சராசரங்களையும், உருவாக்கி ஆளுகை செய்கிற கர்த்தர் நம்மோடு இருக்கிறார். எனவே நாம் பயப்படத் தேவையில்லை. நம்முடைய வாழ்க்கையில் நடப்பது அனைத்தும் நம் நன்மைக்கே.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிற தென்று அறிந்திருக்கிறோம்.
ஆம், நாமும் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து சகலத்தையும் நன்மைக்கேதுவாக நம் வாழ்வில் நடக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக
ஆமென்.