அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; சகரியா 3:4.
அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்;
சகரியா 3:4.
~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு அரண்மனைக்கு அருகில் பிச்சைக்காரன் ஒருவன் வசித்து வந்தான், அவன் அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.
அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன்,
அரண்மனை வாசலில் அவந்து வாயிற்காவலனிடம், ராஜாவைப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தான். அந்தக் காவலன், அரசரைப் பார்க்கச் சென்றான்.
அதிர்ஷ்டவசமாக பிச்சைக்காரனுக்கு அனுமதி கிடைத்தது. அவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.
உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ”என்னைப் பார்க்க வேண்டும் என்றாயாமே?” என்று அரசர் கேட்டார்.
அதற்கு அவன், ”ஆமாம்! ராஜாவே நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை.
நீங்கள் தயைக்கூர்ந்து உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்” என்று மிகவும் பவ்வியமாக கூறினான். அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு அவன் வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம், ”விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று… இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப்படாது.
உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ, தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது” என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்பினான்.
பிறகு, மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளை கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. ‘ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்… அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!’ என யோசித்தான்,
உடனே சட்டெனச் தன் பழைய உடைகளை வாரி எடுத்துக் கொண்டான்.வீடு வாசல் இல்லாததால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே சென்றாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான்.
மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. ஏனென்றால்,அடிக்கடி கைனழுவி கீழே விழுந்த பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களை அவனால் சரிவர ருசிக்க முடியவில்லை.
அரசர் சொன்னது போலவே அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.
மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்; அவனைக் ‘கந்தல் பொதி கிழவன்’ என்றே அழைத்தனர்.
அவன் இறக்கும் தருணத்தில் இருந்த பிச்சைக்காரனைப் பார்க்க அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகம் அடைந்ததை அவன் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி அவன் நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.
வேதத்தில் பார்ப்போம்,
அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.
சகரியா 13 :1.
சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
பிலிப்பியர் 3: 13-14
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
எபிரேயர் 12 :1.
பிரியமானவர்களே,
அந்த பிச்சைக்காரன் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது. அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை… எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.
அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர கூட முடியாமல் நாம் இருக்கிறோம்.
நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தமாய் வாழ முடியாமல் செய்து விடுகிறது.
பவுல் கடந்தகாலம் நம்மை முடக்கிபோட வல்லதென அறிந்திருந்தார். கிறிஸ்துவின் உதவியின்றி, பரிபூரணமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு பல வருடங்கள் முயன்றார்,
அவர் கிறிஸ்துவோடு உறவு வைப்பதில் ஓர் அற்புதமும் வல்லமையும் இருந்ததை கண்டார். எனவே தன் கடந்தகால வாழ்க்கையைத் தூக்கியெறிந்தார் விசுவாசத்தோடு வாழ்வதற்கான ஒரு போது வாழ்வை பெற்றுக்கொண்டார்.
“பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (வச. 13-14) என்றார்.
இன்று பெரிய அரண்மனைகளில் வாழுகிறார்கள் கூட, பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆசிரமங்களிலும், குடிசையிலும் அரசர்களைப் போல் வாழ்வோரும் உண்டு.
வெளித் தோற்றம் முக்கியமல்ல;
நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறியவோ, அல்லது அதை பயன் பயன்படுத்துவோருக்கு கொடுக்க மனமில்லை.
வீடையே பண்டகசாலையாக மாற்றி, வேண்டாத பொருட்களை சேகரித்து வைக்கிறோம்.
முக்கியமானவற்றை விட்டு விட்டு, வேண்டாத விஷயங்களில் நம் வாழ்க்கையை வீணடித்து கொண்டிருக்கிறோம்.
இல்லத்தை மட்டுமல்ல; உள்ளத்தையும் வேண்டாத எண்ணங்களால் பண்டகசாலையாக மாற்றுகிறோம். மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.
நம் விட்டு விட வேண்டியவைகளை விட்டு விடவும். நமக்கு வாழ்வும், மகிழ்ச்சியும் தருபவைகளை நாம் பற்றிக் கொண்டு வாழ
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக…
ஆமென்.