Daily Manna 20

உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். 1 கொரி:1:28

அன்பானவர்களே!
குறைகளை நிறைவாக்கி நம்மை நடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நம்மை அளவில்லாமல் நேசிக்க இயேசு கிறிஸ்துவை விட மேலான தெய்வம் எங்கும் இல்லை என்றே சொல்லலாம்.

இன்று அநேகம் பெற்றோர் விசாரிப்பற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறார்கள்.

சில பிள்ளைகள் அனாதைகளைப் போல காணப்படுவதையும், திருமணம் முடித்த எத்தனையோ சகோதரிகள் கண்ணீரோடு விசாரிப்பற்று இருப்பதையும் காணலாம்.

நாம் நம்பும் அல்லது நாம் நேசிக்கும் மனிதர்கள் நம்மை விசாரிக்காமல் விடலாம். ஆனால் நம்மை விசாரிக்க ஒருவர் உண்டு; அவர் தான் நமதருமை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

பாருங்கள், பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளத்தின் அருகே முப்பத்தெட்டு வருஷம் படுத்த படுக்கையாக ஒரு மனிதன் கிடந்தான். அவனுக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை.

ஆனால் அவனை தேடி இயேசு வந்தார். அவனுடைய பரிதாபமான நிலையை கண்ட இயேசு அவனைப்பார்த்து எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்றார்.

இந்த உலகத்தாரின் பார்வையில் அற்பமாய் எண்ணப்படுபவர்கள் யாரோ, அவர்களை தூசியிலிருந்தும், குப்பையிலுமிருந்து எடுத்து அவர்ளை உயர்த்துவது தான் நமது ஆண்டவரின் உன்னத திட்டமாகும்.

ஆனால் நமது அருமை ஆண்டவரின் தெரிந்தெடுப்பு ஞானிகளும், பலமுள்ளவர்களும் தேவனுக்கு முன்பாக பெருமை பாராட்டாதபடிக்கு அப்படி செய்தார் 1 கொரி 1:26-31 என்றுவேதம் கூறுகிறது.

ஆனால் உலக ஞான முள்ளவர்களையும், கல்விமான்களையும், பெலமுள்ளவர்களையும்,திறமையானவர்களையும், அழகானவர்களையும் தெரிந்தெடுத்து அவர்களுக்கு பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுக்கிறது. இது உலகத்தின் தெரிந்தெடுப்பு.

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
நாகூம் 1 :7

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
புலம்பல்: 3:25

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம்: 136 :1

பிரியமானவர்களே,

நம்முடைய தேவனின் தெரிந்தெடுப்பு மிகவும் வித்தியாசமானது. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி பைத்தியங்களையும், பலவீனமானவர்களையும், இழிவானவர்களையும், அற்பமாய் எண்ணப்படுகிறவர்களையும் அவர் தெரிந்தெடுக்கிறார்.

ஒருவனை தெரிந்தெடுக்க அவர் பார்க்கும் தகுதியை பாருங்கள், எல்லாராலும் தள்ளப்பட்ட ஆட்டிடையனான தாவீதை முழு இஸ்ரவேலுக்கு ராஜாவாக தெரிந்தெடுத்தார்.

திக்கு வாயை உடைய மோசேயை அடிமைத்தன எகிப்திலிருந்து முழு இஸ்ரவேலையும்
விடுதலையாக்க தெரிந்து கொண்டார்.

மீதியானவர்களுக்கு பயந்து ஆலைக்கு சமீபமாய் போரடித்துக் கொண்டிருந்த கிதியோனை பராக்கிரமசாலியே என்று அழைத்து, இஸ்ரவேலை அதன் எதிரிகளிடமிருந்து இரட்சித்தார்.

நமது ஆண்டவர் தகுதியுள்ளவர்களை அல்ல, தகுதியில்லாதவர்களை தகுதியுள்ளவர்களாக மாற்றி, தமக்கு என்று உபயோகிக்கிறார்.

கர்த்தரை நேசிக்கிற இருதயம் உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக உலகம் முழுவதும் உங்களை வெறுத்து தள்ளி விட்டாலும், கர்த்தர் உங்களை சேர்த்துக் கொள்வார்.

உங்களை தமக்காக தெரிந்து கொள்வார். நீங்கள் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் தேவன் உங்களை தேடி வந்து, தமக்காக எடுத்து உபயோகிப்பார்.

பலமுள்ளவர்களுக்காகிலும், பலனற்றவர்களுக்காகிலும் உதவி செய்வது இலேசான காரியம்.

ஆம், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும், நம்மிடமுள்ள குறைகளை நீக்கி நிறைவாக்கி நடத்தி செல்பவர் நம்மோடு இருக்கிறார்.

அந்த நம்பிக்கையிலே நாம் ஒவ்வொரு நாளும் வளர கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *