மனத் தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள். பிலிப்பியர் :2:3
மனத் தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள்.
பிலிப்பியர் :2:3
••••••••••••••••••••••••••••••••••••••••••
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,..
அவர் ஒருநாள் பூங்காவில் வந்து அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.
டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..?’ என்று கேட்டாள்.
ஓ வாரேனே என்று அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.
மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள்.
அதைக் கேட்ட டால்ஸ்டாய், ‘உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ சொல்லு என்றார்.
அதற்கு அந்தச் சிறுமி, ‘நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ சொல்லுங்கள் என்றாள்.
உலகப் புகழ் பெற்ற தன்னை, இந்த சின்ன சிறுமி, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்காக அவர் வெட்கப்பட்டார்…!
ஆம்… பிரியமானவர்களே,
நாம் யாரும் யாரைவிடவும் குறைந்தவருமில்லை, தாழ்ந்தவருமில்லை.
உயர்ந்தவரென்றோ, தாழ்ந்தவரென்றோ,
மதிப்புமிக்கவரென்றோ, அறிவானவரென்றோ அழகானவரென்றோ, படித்தவரென்றோ, படிக்காதவரென்றும் இல்லை.
ஆண்டவர் பார்வையில் நாம் அனைவரும் சமம்.
இவ்வுலகில் இறைவன் படைத்த ஒவ்வொரு மனிதரும் சிறப்புக்குரியவர்கள் தான்.
வேதத்தில் பார்ப்போம்,
ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.
நீதிமொழிகள்:22 :2.
ஆகையால் நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
1 தெசலோனி: 5:11
ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக் கொண்டது போல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ரோமர்:15 :7.
பிரியமானவர்களே,
ஒருவரை ஒருவர் தங்களிலும் மேன்மையாக எண்ண வேண்டும் என்று வேதம் கற்பிக்கும் விதத்தைக் கவனியுங்கள். இன்று படிப்பு, பணம், செல்வாக்கு, அழகு என்று ஏதோ ஒருவகையில் தங்களை விட மற்றவர்களைக் குறைவாகவே எண்ணுவதுண்டு.
சிலர் சாதிகளை வைத்து, தொழிலை வைத்து, மற்றவர்களைக் குறைவாகவே எண்ணுவதும் உண்டு.
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீன னென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லா ரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின் படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்
கலாத்தியர்: 3:28-29.
தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
என்று வேதம் சொல்லுகின்றது.
இந்த ஆசீர்வாதம் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்கு உரியது. எனவே, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத் தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொண்டவர்களாய், மற்ற மனிதர்களை, மற்ற சபையினரை நியாயந்தீர்ப்பதை விட்டு விடுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே நீதியுள்ள நியாயாதிபதி. அவர் நம் மேல் நீடிய பொறுமையுள்ளவ ராயிருக்கின்றார்.
எனவே நண்பர்களே! யாரையும் தாழ்வான எண்ணத்தோடு பாராதிருங்கள். யாருக்குத் தெரியும் எது எப்பொழுது நடக்கும் என்று…
எனவே தேவனுக்கு முன் தாழ்மைப்பட்டு மற்றவர்களை மேன்மையாக எண்ணுங்கள்.
கர்த்தர் தாமே இத்தகைய நல்ல குணத்தை நம் யாவருக்கும் தந்து, நம்மை ஆசீர்வதித்து காப்பாராக.
ஆமென்.