Daily Manna 214

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. உபாகமம்:6 :5.

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.
உபாகமம்:6 :5.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

அன்பு நிறைந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு விதவைத் தாய் தன் ஒரே மகன் சூதாடுகிறான் என்று கேள்விப்பட்டு கண்ணீரோடு அவனைக் கண்டித்தாள்.

ஆனால் அவனோ, தன் அன்பின் தாயின் வார்த்தைகளைக் கேளாமல் தொடர்ந்து சூதாடியபோது போலீசால் பிடிக்கப்பட்டான். அவனோடுகூட பிடிபட்ட மற்ற வாலிபர்கள் அபராதத் தொகையைக் கட்டி, விடுதலையாகி விட்டார்கள்.

ஆனால் இந்த வாலிபனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்ட வழியில்லாததால் சிறையிலடைக்கப்பட்டான். மகன் இப்படி தன் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனானே என்பதற்காக அந்தத் தாயின் அன்பு கொஞ்சம் கூட குறைந்து போகவில்லை.

ஒரு நாள் அவனை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது கம்பி வழியாக வெளியே பார்த்த போது, தன் தாய் கருங்கல்லை உடைக்கும் கடின வேலை செய்யும் போது தன் தாயின் கையிலிருந்து இரத்தம் கொட்டியதைப் பார்த்தான்.

ஐயோ என்னால் அல்லவா என் தாய் இத்தனை வேதனை படுகிறார்கள். அன்று என் தாயின் வார்த்தைக்கு நான் கீழ்ப்படியாததால், இன்று என் தாய்க்கு இத்தனை வேதனை என்று நினைக்கையில் வேன் கடந்து சென்றது.

காலையிலிருந்து இரவு வரை கல்லுடைத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, பல மாதங்களுக்குப் பின் தன் மகனது அபராதத் தொகையைக் கட்டி மகனை விடுவித்து அழைத்து வந்தாள்.

பிரியமானவர்களே,
அன்பு ஒன்றுக்குத் தான் எல்லாவற்றையும் தாங்கும் சக்தியுண்டு.
அன்புள்ள தாய் தன் பிள்ளைகளின் மேலுள்ள பாசத்தால் கஷ்ட கஷ்டங்களையும், பாடுகளையும் தாங்குகிறாள்.

அதன் பிறகு தாயும் மகனும் ஒருவரையொருவர் பல மடங்கு நேசித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, மகன் பொறுப்பும், தேவ பக்தியுள்ளவனாய் மாறினான்.

நாமும் சில நேரங்களில் தேவனின் அன்பை புரியாதவர்களாய் கதையில் சொல்லப்பட்ட வாலிபனைப் போல கர்த்தருடைய வார்த்தைகளை கேளாமல் அவரின் அன்பை புறக்கணிக்கிறோம்.
நம் தேவனின் அன்பு தாயினும் மேலான அன்பு.

வேதத்தில் பார்ப்போம்,

ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
யோசுவா :23 :11.

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
நெகேமியா :1:5.

அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
லூக்கா:10 :27.

பிரியமானவர்களே,

நம்முடைய தேவனின் அன்பு எந்த எதிர்பார்ப்புமில்லாதது. ஆனால் நாம் பல நேரங்களில் தேவனிடம் அன்புகூருவது நம்முடைய சுயநலமான ஆசீர்வாதங்களுக்காய் மட்டுமே.

தேவன் தம்முடைய ஒரே குமாரனை நமக்காக ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து நம் மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தினார்
(1யோவான்:4:9,10). அவருடைய அன்பை உணர்ந்தவர்களாய் நாம் உண்மையாய் தேவனில் அன்பு கூருகிறோமா?

அவருடைய வசனங்களுக்கு செவிகொடுத்து அவர் கட்டளைகளை கைக் கொள்ளுவதே அவரில் அன்பு கூருவது.
வேதம் கூறுகின்றது தேவனில் அன்புகூருகிறவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் [கொரி-8:3]. என்று.

தானியேல் தேவனிடம் உண்மையாய் அன்புகூர்ந்தபடியால்
அவரின் கற்பனைகளை உண்மையான அன்பால் கைக்கொண்டு நிறைவேற்றினான்.

உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக் கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்று உபாகமம்: 30:20-ல் பார்க்கிறோம்.

அது மட்டுமல்ல,நம் அன்பான இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. நாம் அன்பில் பூரணப்படும் போது இயேசு இருக்கிற பிரகாரமாகவே இவ்வுலகில் பிற மக்களிடமும் இருப்போம். .

“உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்ற ஒரே வார்த்தையில் நியாயப் பிரமாணம் முழுவதும் நிறைவேறும் என்று பவுல்
கலாத்தியருக்கு 5:14-ல் எழுதுகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
நாம் தேவ அன்பினால் நிறைந்து பரிசுத்த ஆவியானவரின் துணையோடு சுத்த இருதயமுள்ளவர்களாய் நல்ல மனசாட்சியோடே மாயமற்ற விசுவாசத்தோடு கூடிய அன்பினால் தேவனிடம் அன்புகூருவோம்.

தேவனோடு நம்முடைய உறவு உண்மையாய் இல்லையென்றால் நாம் சக மனிதனிடம் அன்பு கூர முடியாது. அதேப் போல மனிதனோடு நம்முடைய உறவு உண்மையாய் இல்லையென்றால் நாம் தேவனிடமும் உண்மையாய் அன்பு கூர முடியாது.

நாம் நமது குடும்பத்தாரிடம், உறவுகளிடம், பிள்ளைகளிடம், சுற்றத்தாரிடம் உறவில் எப்படி இருக்கிறோம் என்பதை சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். தேவனோடு உள்ள உறவில் சரியாய் இருந்தால் மற்ற உறவுகளும் அன்பால் கட்டப்பட்டிருக்கும். இல்லையென்றால் நம்மை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஆகவே நாம் தேவனோடும் மனிதனோடும் உள்ள உறவை காத்துக் கொள்ளுவோம். வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

நாம் முழு இருதயதோடும் அன்புகூர கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இந்த ஓய்வு நாளில் நமக்கு கிருபையை தந்து வழிநடத்தி காப்பாராக.

ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *