கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம்: 1:2
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம்: 1:2.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!
வேதத்தின் வழியில் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முறை டி.எல்.மூடி என்ற பக்தன் சொன்னார், “நீங்கள் வாலிப வயதில், வேதத்தைத் தூக்கிச் சுமந்தால் வயதான நாட்களிலே, வேதம் உங்களை தூக்கிச் சுமக்கும்.
வேதம் உங்களைப் பாவத்துக்குத் தூரப்படுத்தும். நீங்கள் வேதத்தின்படி நடவாவிட்டால், பாவம் உங்களை வேதத்துக்குத் தூரப்படுத்தும்.”
என்றார்.
உலகத்தை அசைத்த தேவனுடைய மனுஷனாகிய பில்லிகிரகாம் சொன்னார், “இந்த உலகத்தில் ஒரு பாக்கியமான வாழ்வு வாழும் படி கர்த்தர் எனக்கு உதவி செய்தார்.அதன் காரணம் இந்த வேத புத்தகமே” என்றார்.
அவர் வேதாகமத்தைத் திரும்பத் திரும்ப, ஆராய்ந்து படித்தவர். நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பிரசங்கங்களை, வேத வசனத்திலிருந்து ஆயத்தம் செய்தவர்.
இன்று தம் முதிர்வயதில், வாலிபருக்கு தமது பாக்கியமான வாழ்வின் இரகசியத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். உங்களைப் பாக்கியசாலிகளாய் மாத்திரமல்ல, நற் குணசாலிகளாகவும் மாற்றும்.
“பெரோயா பட்டணத்தார் மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால்,
தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும், நற்குணசாலிகளாயிருந்தார்கள்” என்று
அப்போஸ்த:17:11-ல் வாசிக்கிறோம்.
தேவப் பிள்ளைகளே,
நீங்களும் நற்குணசாலி என்ற நற்சாட்சி பெற வேண்டாமா? வேதத்தைத் தினந்தோறும் ஆராய்ந்து பாருங்கள்.
வேதத்தை வாசிப்பதினால், நமக்குக் கிடைக்கும் இன்னொரு மிகப் பெரிய ஆசீர்வாதம், கனி கொடுக்கும் வாழ்க்கையாகும்.
கனி கொடுத்த வாழ்க்கை வாழ்ந்த தாவீது ராஜா சொல்லுகிறார்: “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”
சங்கீதம். 1:2,3.என்று கூறுகின்றார்.
வேத வசனங்களை வாசிக்கிறதும் பாக்கியம், வாசிக்கிறதைக் கேட்கிறதும் பாக்கியம், எழுதியிருக்கிறவைகளைக் கைக் கொள்ளுகிறதும் பாக்கியம்
(வெளி. 1:3). வேதத்தை அனுதினமும் வாசித்து நமக்கு தேவன் வைத்திருக்கும் சிறந்த வாழ்வை சுதந்தரித்துக் கொள்ளுவோம்.
வேதத்தில் பார்ப்போம்,
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
சங்கீதம் :37 :31.
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.
சங்கீதம்: 119 :92.
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம்: 19:7.
பிரியமானவர்களே,
வேத வசனங்களை அனுதினமும் வாசித்து தியானித்து அதின்படி நடக்கும் போது கனி கொடுக்க முடியும்.
நாம் தினந்தோறும் எவ்வளவோ வேத வசனங்களை, செய்திகளை கேட்கிறோம். எத்தனை வசனங்கள் நம் இருதயத்திற்குள் செல்கின்றன?
எத்தனை வசனங்களுக்கு நாம் கீழ்ப்படிகிறோம்? சற்று சிந்தித்து பார்ப்போம்.வேதம் கூறுகிறது நல்ல நிலத்தில் விழுந்த விதை சிலது நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தந்தது.
நிலம் நம்முடைய இருதயம். விதை தேவனுடைய வசனம். நல்ல நிலமாகிய இருதயத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான்.
நாம் வசனத்தை கேட்கிறதால் தியானிக்கிறதால் அல்ல; அதனை உணர்ந்து நம் இருதயம் கீழ்படியும் போது நல்ல கனிகளை கொடுக்க இயலும்.
வேதம் கூறுகிறது எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
[எபிரெயர்:6:7].
பூமி எப்படியாய் தன் மேல் விழுகிற மழை நீரை உறிஞ்சுகிறதோ அதேப் போல வேத வசனங்களை நம்முடைய இருதயம் உறிஞ்சி ஏற்றுக் கொண்டு,அதனை உணர்ந்து அதின் படி வாழும் போது நாமும் கனி கொடுக்கிறவர்களாய் மட்டுமல்ல தேவனுடைய ஆசீர்வாதத்தையும் பெறுவோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
“வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே”
யோவான் 5:39
என்று வேதம் கூறுகிறது.
ஆம் நித்திய ஜீவனை அடையும் படி ஒவ்வொரு நாளும் வேத வசனத்தை வாசிப்பதோடு, அதன் படி வாழவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.