சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் :8:32
எனக்கு அன்பானவர்களே!
சத்தியமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஐரோப்பாவில் பல யுத்தங்கள் நடந்தன. அதில் ஒரு யுத்தத்தில், சிறைப் பிடிக்கப்பட்ட ஒரு வீரனுக்கு 15 ஆண்டு சிறைவாசம் கிடைத்தது.
பின்னொரு காலத்தில் இரு நாடுகள் இடையே சமரச–சமாதான உடன்படிக்கை ஏற்படவே அந்தக் கைதி விடுவிக்கப்பட்டான்.
அவன் வெளியே வரும் போது அவனை வரவேற்க வந்த ஒரு நண்பன் ஐம்பது பவுண்டுகள் (பிரிட்டிஷ் நாணயம்) உள்ள ஒரு பர்ஸைக் கொடுத்து விட்டுச் சென்றான்.
கைதிக்கு ஒரே ஆனந்தம், பேரானந்தம்!
“விடுதலை,
விடுதலை விடுதலை!!!என்று பாடிக் கொண்டே தெருவில் கூத்தாடிக் கொண்டு வந்தான்.
வழியில் பறவைகள், செல்லப் பிராணிகளை விற்கும் ஒரு கடையைப் பார்த்தான். கூண்டுக்குள் நிறைய கிளிகள் கீச்சு, கீச்சு என்று கத்திக் கொண்டிருந்தன.
கடைக்குள் சென்று எல்லாப் பறவைகளுக்கும் என்ன விலை என்று கேட்டான். கடைக்காரன், 49 பவுண்டுகள் 99 காசுகள் என்று சொன்னான்.
உடனே கையில் உள்ள எல்லா பணத்தையும் கொடுத்து விட்டு பறவைகளுடன் வெளியே வந்தான். கூண்டின் கதவைத் திறந்து விட்டு, ஒவ்வொரு பறவையாக வெளியே வரும் போது பேரானந்தம் அடைந்து கைகொட்டி ஆரவாரம் செய்தான்.
எல்லாப் பறவைகளும் விடுதலையானவுடன் தெருவில் ஆனந்தக் கூத்தாடினான்.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்த கடைக்காரனுக்கு ஒரே ஆச்சரியம்.
“அன்பரே, கையில் உள்ள பணம் எல்லாவற்றையும் கொடுத்து விலைக்கு வாங்கிய எல்லாப் பறவைகளையும் விடுதலை செய்து இப்படி ஆனந்த நடனம் ஆடுகிறீர்களே, நீங்கள் யார், என்ன செய்தி?” என்று கேட்டான்.
“நண்பரே, நான் ஒரு போர்க்கைதி; 15 ஆண்டு சிறையில் கிடந்துவிட்டு இன்று தான் விடுதலை ஆனேன். இந்த பரந்த வானம், புதிய காற்று, பரிபூரண சுதந்திரத்தின் அருமை பெருமை எனக்குத் தான் தெரியும்.
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று கூண்டில் அடைபட்ட இப்பறவைகளுக்கும் விடுதலை தர விரும்பினேன்” என்று சொல்லி விட்டு போய் விட்டான்.
வேதத்தில் பார்ப்போம்,
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் :14:6
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,
யோவான்: 8 :36.
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1 தீமோத்தேயு: 2:4.
பிரியமானவர்களே,
வேதம் சொல்கிறது, சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”
யோவான் :8:32.
இந்த சத்தியம் யார்? யோவான் 14:6-ல், “அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று கூறுகிறார்.
ஆம், இயேசு தான் அந்த சத்தியம். நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது, இந்த விடுதலையை பெற்றுக் கொள்கிறோம்.
நீங்கள் பாவம் அல்லது சாபங்களால், சமூக எதிர்பார்ப்புகளால் அல்லது மக்களின் புண்படுத்தும் வார்த்தைகளால் கட்டப்பட்டிருக்கலாம்.
அல்லது நீங்கள் மக்களுடைய உதவியை தேடிக் கொண்டிருக்கலாம்.
எனக்கு அன்பானவர்களே,
நம் அருமை இயேசு உங்கள் காயங்களையும், உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார்.
நம் அனைத்து கட்டுகளிலிருந்தும் விடுவிப்பார்., “குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்”.
ஆம், இயேசு தான் சத்தியம் என்று நீங்கள் விசுவாசித்தால் இந்த விடுதலையை நீங்கள் நிச்சயம் பெற்றுக் கொள்வீர்கள்.
இனி நீங்கள் பாவத்தினாலும் சாபத்தினாலும் கட்டப்படாதபடி உங்களுக்கு விடுதலை அளிக்கவே இயேசு கிறிஸ்து வந்தார்.
ஏனென்றால், கர்த்தரே ஆவியானவர், கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையும் உண்டு (2 கொரிந்தியர் 3:17).
இயேசுவிடம் வந்தவர்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதை வேதத்தில் காண்கிறோம். இயேசு ஜனங்களுடைய நோய்கள், பாவங்கள், பிசாசின் கட்டுகளிலிருந்து, இல்லாமையிலிருந்து விடுதலையாக்கினார்.
அதே ஆண்டவர் இன்றைக்கும் தம்மிடம் வருவோரை தள்ளாது, அவர்களுக்கு விடுதலை அளிக்க வல்லவராயிருக்கிறார்.
இந்த ஓய்வு நாளில் நாமும் கர்த்தரிடம் சென்று விடுதலைப் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்