Daily Manna 225

கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப்பலன் அளிப்பாராக; 1 சாமுவேல்: 26 :23.

எனக்கு அன்பானவர்களே!

‌உண்மையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு தேசத்தின் ராஜா ஒருநாள் தன் சிறைக் கைதிகளை சந்திக்கும்படி சென்றார். ஒவ்வொரு கைதிகளிடமும் சென்று நீங்கள் என்ன தவறு செய்து விட்டு இங்கே வந்தீர்கள்? என்று கேட்டார்.

ஒவ்வொரு கைதியும் என்மீது எந்த தவறுமில்லை; காரணமில்லாமல் என்னை சிறையில் அடைத்து விட்டார்கள் என்றே பதில் கூறினர். ஒருவரும் அவர்களுடைய தவறுகளை ஒப்புக் கொள்வதாக இல்லை.

கடைசியாக ஒரு கைதியை சந்தித்த ராஜா மற்றவர்களிடம் கேட்ட அதே கேள்வியை இந்த கைதியிடமும் கேட்டார். அதற்கு அந்த கைதி, ராஜாவே, நான் தவறு செய்து விட்டேன். ஒரு மனிதனை கொலை செய்து விட்டேன்.

ஆனால் இப்போது அந்த குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். தன் கணவனை மரிக்கக் கொடுத்த அந்த மனைவி தன் பிள்ளைகளுக்கு உணவளிக்க என்ன செய்வார்கள்? எப்படி குடும்பத்தை பராமரிப்பார்கள்? என நினைத்து அந்த கைதி மிகுந்த கவலைப்பட்டான்.

ராஜாவே,தயவு செய்து நீங்கள் அந்த குடும்பத்தை பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். என்று மனவேதனையினால் ராஜாவினிடத்தில் அந்த குடும்பத்தை பராமரிக்கும் படி கெஞ்சி கேட்டான்.

ராஜா அவனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்! உன்னுடைய தவறை நீ ஒப்புக் கொண்டபடியால், இன்றைக்கு நான் உன்னை விடுதலையாக்குகிறேன், நீ சென்று உன்னால் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு முடிந்த உதவிகளை செய் என்றார் ராஜா.

ஆம் பிரியமானவர்களே, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என்று
1 யோவான்: 1:9- ல் பார்க்கிறோம்.

ஒவ்வொரு காரியத்திலும் நம்மிடத்தில் உண்மையிருக்க வேண்டுமென்றே ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.

வேதத்தில் பார்ப்போம்,

என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
யோபு: 33 :3.

அவர் முன்பாக மன உண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக் கொண்டேன்.
2 சாமுவேல்: 22 :24.

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; .
நீதிமொழிகள்: 28 :20

பிரியமானவர்களே,

இந்த நாளிலும் ஆண்டவர் உண்மையுள்ள மனுஷனை உருவாக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறார். உண்மையுள்ள மனுஷர்களாய் நாம் வாழும் போது, தேவனுடைய ஆசீர்வாதம் நம்மை தேடி வரும்.

உண்மையுள்ள மனுஷன் தான் பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வான் என்று வேதமும் கூறுகிறது.
ஆபிரகாமைக் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம்.

” அவன் உண்மையுள்ள மனிதனாயிருந்தான். தேவன் ஆபிரகாமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி….
அவன் இருதயத்தை உண்மையுள்ளதாகக்கண்டு புறஜாதிகளுடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி அவனோடு உடன்படிக்கை பண்ணி, தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்”
(நெகேமியா 9:7,8).

ஆம், இந்த நாளிலும் கர்த்தர் உங்களையும் என்னையும் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கவே விரும்புகிறார்.
அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை பெறுவதற்கு நாம் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும்.

கர்த்தர் ஆபிராமுக்கு கொடுத்த ஆசீர்வாதம்: “…நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதியாகமம் 12:1-3). என்று அவனுக்கு வாக்குறுதி கொடுத்தார்.

இன்றைக்கு இந்த ஆசீர்வாதங்களை கர்த்தரிடத்தில் கேட்டு உரிமையாக்கிக் கொள்ளுங்கள். அவர் உண்மையுள்ள இருதயத்தை தேடுகிறார். உண்மையுள்ளவர்களை அவர் மிகவும் நேசிக்கிறார்.

“மனுஷன் முகத்தை பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்”
1 சாமுவேல் 16:7; நீதிமொழிகள் 21:2 போன்ற வசனங்களில் இருதயத்தை கூட ஆராய்ந்து அறிகிறவர் என்றும், இருதயத்தை நிறுத்துப் பார்க்கிறார் என்றும் பார்க்கிறோம்.

இந்த நாளிலும் நம்முடைய இருதயத்தை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

உண்மையுள்ள இருதயத்தில் தேவன் வாசம் பண்ண விரும்புகிறார். அவர் தங்கியிருக்கிற எந்த குடும்பத்திலும் இருதயத்திலும் ஆசீர்வாதத்திற்கு எந்த தடையும் இருக்காது.

ஆகவே நாம் உண்மையுள்ளவர்களாய் வாழ்ந்து, பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.

கர்த்தர் தாமே உண்மையுள்ள வாழ்வு வாழ நம் யாவருக்கும் அருள் புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *