இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங்கீதம்: 121:4
எனக்கு அன்பானவர்களே!
நம்பிக்கையின் நங்கூரமாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்.
ஒரு நாட்டில் கொடிய யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, ஒரு தேசத்திலே ஒவ்வொரு இரவும் குண்டுகள் அளவில்லாமல் வீசப்பட்டன.
அபாய சங்குகள் ஒலிக்கும் போது அந்த தேச மக்கள் பயந்து ஓடிப்போய், குழியிலே பதுங்கிக் கொள்ளுவார்கள். இரவெல்லாம் அந்த குண்டுகள் தங்கள் மேல் விழுந்து விடுமோ என்று நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஒருவர் மாத்திரம் நிம்மதியாய் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரைப் பார்த்து, “இப்படி குண்டு வீசிக் கொண்டிருக்கிற பயங்கரமான சூழ்நிலையில் உன்னால் எப்படி நிம்மதியாய் தூங்க முடிகிறது?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், சொன்னார் “இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் தான் உறங்காமல் என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாரே.
அவர் விழித்துக் கொண்டிருக்கும் போது நான் ஏன் வீணாய் விழித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே என்னை அவர் கையில் ஒப்புக் கொடுத்து விட்டு, நிம்மதியாய் தூங்கி விட்டேன்” என்றார்.
கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்
சங்கீதம்.34:7.
இது தாவீதினுடைய வாழ்வின் அனுபவமாகும்.
ஆம், பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு ; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை, குறிப்பாக அவருக்குப் பயந்தவர்களை, அவர்களுக்கு வரும் சோதனையினின்றும் ஆபத்தினின்றும் அழிவினின்றும் போராட்டத்தினின்றும் கண்மணிப் போல் பாதுகாக்கிறார்
வேதத்தில் பார்ப்போம்,
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான்.
சங்கீதம் 91:1.
கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
சங்கீதம்: 121:5.
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
சங்கீதம் :121:7
பிரியமானவர்களே,
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
ஆனால் பாதுகாப்பு இல்லாத இந்த உலகத்தில் எப்போது எந்த தீங்கு வரும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் ஆண்டவரைத் தேடுகிற பிள்ளைகளை அவர் ஒரு நாளும் அழிந்து போவதற்கு விடவே மாட்டார்.
எத்தனை பாடுகள் எத்தனை போராட்டங்கள், எத்தனை சோதனைகள், போதுமப்பா இந்த வாழ்க்கை….. இனிமேல் இப்படி ஒரு வாழ்க்கை வேண்டவே வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் பலர் உண்டு.
இது வரைக்கும் எனக்கு எந்த பெரிய பிரச்சனையும் இல்லை. இனி மேல் வந்து விடுமோ?? என்று பயந்து, பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு. ஆனால் கர்த்தரை தேடுகிற பிள்ளைகளை அவர் ஒரு போதும் அழிந்து போக விடமாட்டார்.
என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை எந்த தீமைக்கும் ஒப்புக் கொடுக்க மாட்டார் என்கிற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
அந்த நம்பிக்கையோடு நம்முடைய ஓட்டத்தை ஓடுவோம். நம்முடைய ஓட்டம் நிச்சயமாக ஜெயமான ஓட்டமாய் காணப்பட ஆண்டவர் நமக்கு உதவி செய்வார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள நம்பிக்கையில் நம் வாழ்வை அவரிடம் ஒப்புக் கொடுப்போம். அவரே நம் வாழ்வை நன்மைகளால் நிரப்பி சமாதானமான வாழ்வை அருளிச் செய்வாராக.
ஆமென்.