Daily Manna 229

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள்: 19:17.

எனக்கு அன்பானவர்களே!

‌ கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு ராஜா தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோவிலில் அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனைப் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை,இவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்ற பின்பு நாம் வாங்கிக் கொள்வோம் என்று தள்ளி நின்றான்.

நேரம் போய்க் கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக் கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்து விட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்?

போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே என்று தன் விதியை நினைத்து நொந்து கொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது.

‘அப்பனே ஆண்டவா…என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்’ என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான்.
குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார்.”என்னப்பா…சாப்பிட்டாயா?” என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.

கேட்பது ராஜா என்று தெரியாமல் “ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா” என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்து நீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்று தானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்?

ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து ‘மன்னித்து விடப்பா… ரொம்ப பசிக்கிறதா உனக்கு?” என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். ‘ராஜா…
நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்து கொண்டே பதில் சொல்லி விட்டேன்…
மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று பதறினான். இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார்.

‘வா…இன்று நீ என்னோடும், குழந்தை, மற்றும் ராணியோடும் விருந்து உண்ணப் போகிறாய்’ என்று அவனை பேச விடாமல் எழுத்துச் சென்று தன்னுடைய தேரில் ஏற்றிக் கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார்.

‘போய் குளித்து விட்டு வா’ என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார்.
குளித்து, புத்தாடை அணிந்து வந்தான்.ராஜாவும் அறுசுவை விருந்து கொடுத்தார்.

சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார்

‘இன்றிலிருந்து நீ ஏழை இல்லை…இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்” என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.

‘ஏனப்பா அழுகிறாய்?’ என்று ராஜா கேட்க. “நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும் தான் நினைத்திருந்தேன் ராஜா…இந்தத் தருணம் தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்து கொண்டேன்” என்று சொன்னான்.

ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க “வாழ்க்கையில் இன்று தான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்…

கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றி விட்டார்…கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதை விட இன்னும் பல மடங்கு தருவார் என்று இன்று வரை புரியாமல் ஒரு முட்டாளாகத் தானே இருந்துள்ளேன்” என்று சொல்லி அழுதான்….

ஆம்,நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியை விட மிகச் சிறந்த ஒன்றை நமக்கு கடவுள் தரப் போகிறார் என்று நம்புங்கள்……

வேதத்தில் பார்ப்போம்,

சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
சங்கீதம்: 41:1

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
சங்கீதம்: 112:9.

பிறனை அவமதிக்கிறவன் பாவஞ் செய்கிறான்: தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
நீதிமொழிகள்: 14:21.

பிரியமானவர்களே,

ஆண்டவர், நாம் செய்கிற ஒவ்வொரு கிரியைகளையும் காண்கிறார். சிலர் நற் கிரியைகளையும், சிலரோ துர்க்கிரியைகளையும் செய்கிறார்கள். அத்தனைக்கும் அவர் பலன் கொடுக்கிறவராகவே இருக்கிறார்.

நம் கண்ணேதிரே தேவையில் உள்ளவர்களுக்கு உதவுவது நம் கடமை. நாமும் தேவையில் இருக்கும் போது பிறரிடமிருந்து அநேகம் உதவிகளைப் பெற்றிருக்கலாம்.

இப்போழுது நாம் உதவி செய்யக் கூடிய நிலையில் இருக்கும் போது யாருக்காவது உதவ வேண்டியது நமது பொறுப்பு. உண்மையான தேவையில் இருப்பவர்களை நாம் இனங்கண்டு உதவுவதும் முக்கியமானதாகும்.

அதே சமயம், மற்றவர்கள் நமது உதவிகளைத் தவறாகப் உபயோகித்து இன்னமும் கெட்டுப் போவதற்கு நாம் காரணராகி விடக் கூடாது.

‘ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்’ என்று வார்த்தை சொல்லுகிறது. எனவே ஏழைகள் மற்றவர்களால் தாங்கப்பட வேண்டியவர்களே.

நமது குடும்பம், நமது பொறுப்புக்கள் என்று மற்றவர்களை கவனிக்காமல் நாம் வாழ்ந்திட முடியாது. நாம் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதம், இரட்சிப்பு, எல்லாவற்றையுமே மற்றவர்களும் கண்டு கொள்ளும் படியாக நாம் சாட்சிகளாய், முன் மாதிரிகளாய் வாழ்ந்திட வேண்டும்.

தேவையில் இருப்பவர்களைக் கண்டும் காணாதவர்களாய், அல்லது அவர்களுக்கு நமது இருதயத்தை அடைத்தவர்களாய் இருந்தால் தேவ அன்பு ஒரு போதும் நம்மில் வெளிப்பட முடியாது.

யோவானும் தனது நிருபத்தில் இதைத் தான் சுட்டிக் காட்டுகிறார். இவ்வுலக ஆஸ்தியுடையவனாய் ஒருவன் இருந்தும், தன் சகோதரனுக்குக் குறைச்சல் உண்டென்று கண்டும் அவனுக்கு உதவாமற் போனால் அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்வதெப்படி? என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த விஷயத்தில் நமது மனப்பான்மை என்ன என்பதைச் சிந்திப்போமாக. ஏழைகளுக்கும், தேவையில் உள்ளவர்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்ய முன் வருவோமாக.

நன்மை செய்யத் திராணியிருக்கும்போது செய்வது நல்லது. பின்னர் மனமிருந்தாலும் முடியாமலும் போகலாமே!

“ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக் கொள்ளுகிறவன் தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்”
(நீதிமொழிகள்:21:13).

விசேஷமாக, கர்த்தருடைய நாமத்திற்காக நாம் காண்பிக்கிற பிரயாசங்கள், பரிசுத்தவான்களுக்கு நாம் செய்கிற ஊழியம், ஏழைகளுக்கு காண்பிக்கிற இரக்கம், இவற்றையெல்லாம் பார்த்து, அவைகளை மறவாமல் தமது தெய்வீக ஆசீர்வாதங்களால் நிரப்புவார்.

ஆகவே நாமும் நமது தேவைகளை கர்த்தரிடம் கேட்டு, பிறருக்கு தேவைப்படும் போது உதவிகளை செய்து வளமான வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.

ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *