Daily Manna 231

செத்தவனைப் போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப் போலானேன். சங்கீதம் :31:12.

எனக்கு அன்பானவர்களே,

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு ஊரில் ஒரு வீட்டில் கூட்டு குடும்பமாய் வாழ்ந்து வந்தார்கள். அங்கு அன்பும், பாசமும் நிறைந்து இருந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் அவ்வீட்டில் ஒரு நபர் இறந்து விட்டார்.
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

இந்தக் குடும்பத்துக்கே குருவாக விளங்குபவர் ஒருவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!

இறந்தவரின் மனைவி சொன்னாள்..
”குருவே.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரென்றால் அதற்காக நான் எதுவும் செய்ய தயராவேன்..!” என்றார்..!

குரு அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை…

கடைசியில் அவர்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை இறந்த உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் சொன்னார்..
”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இறந்தவர் திரும்பி வருவார் என்றவுடன் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”
ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”

தந்தை சொன்னார்
”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”என்றார்.

தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”என்றாள்.

அடுத்து இறந்தவரின் மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ்ந்தே ஆக வேண்டும்” என்றாள்
.
குருஜி பையனைப் பார்த்துக் கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”உடனே அவன் தாய் அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்.

”குருவே, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் இப்படி கேட்கலாமா.?” என்று கத்தினாள்.

உடனே குரு சொன்னார்
”உங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்பது புரிகிறது.

எனவே தான் இவனை ஆண்டவர் எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!

பிரியமானவர்களே,
”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம், சொந்த பந்தம் எல்லாம்”
“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.
எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.

வேதத்தில் பார்ப்போம்,

செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப் போலானேன்.
சங்கீதம்: 31:12.

என் மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.
சங்கீதம்: 25 :16.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்.
யோவான்: 12 :24.

பிரியமானவர்களே,

உலகத்தின் எல்லா காரியங்களும் மாயையானது. நம்முடைய ஆஸ்தி, அந்தஸ்து, ஞானம்,சம்பத்து, ஐசுவரியம், புகழ், பொருள், மூடநகைப்பு, வெற்றி, அங்கீகாரம் எல்லாம் நிலையற்றது. இவைகள் ஒன்றுக்கும் பிரயோஜனப்படாது.

மனுஷன் பிறக்க ஒரு காலமுண்டு; இறக்க ஒரு காலமுண்டு அதை மனிதன் அறியான் [பிரசங்கி :2:1-11].
தேவன் மாத்திரமே அறிவார்.

எனவே மனித வாழ்க்கையும் மாயையே. மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்து போகிற நிழலுக்குச் சமானம்
[சங்கீதம் :144:4] மனிதனுடைய நாட்கள் கொஞ்சமானது. வேதம் மனிதனுடைய வாழ்க்கையை புல்லுக்கு, புகைக்கு ஒப்புமைப்படுத்துகிறது.

இந்த மாயையான உலக வாழ்க்கையில் அதிக கரிசனைக் கொண்டு அதிக வருடம் உயிரோடு வாழ வேண்டும் என மனிதன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் மாயையானது. மனிதனுடைய ஓட்டம் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமானது. தாவீது ராஜா கூறுகிறார் இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்
[சங்கீதம் 39:5 ]. பக்தனாகிய யோபு கூறுகிறார் .

“நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின் மேல் நம்முடைய நாட்கள் நிழலைப் போலிருக்கிறது
[யோபு:8:9]”

இன்றைக்கு நாம் வாழுகிறோம். அடுத்த நொடி நாம் உயிரோடு இருப்போமா ? இல்லையா?என்பதே நமக்கு தெரியாது.

நம்முடைய மாயையான இந்த வாழ்க்கையில் எத்தனை கசப்புகள் வெறுப்புகள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். நம்முடைய நாட்களின் தொகையை அறிந்தவர் தேவன் மாத்திரமே. பிரயோஜனமானதை நமக்கு போதித்து நம்மை நல்வழியில் நடத்துகிற தேவன் அவர்.

எனவே பிரயோஜனமற்ற இந்த உலக வாழ்க்கையின் மேல் பற்றுக் கொள்ளாமல் பிரோயோஜனமானதை நமக்கு போதித்து நம்மை நித்திய வழியில் நடத்துகிற தேவனையே பற்றிக் கொள்ளுவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நல் வழியில் நடந்து, பரலோக வாழ்வை சுதந்தரித்துக் கொள்ள கர்த்தராகிய ஆண்டவர் நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *