எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” நீதிமொழிகள்: 11:25.
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
17- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜெர்மன் போதகர் ஆகஸ்ட் H. ஃபிராங்க், என்பவர் ஹாலேயிலுள்ள அனாதை குழந்தைகளை பராமரிப்பதற்காக, ஒரு அனாதை இல்லத்தை நிறுவினார்.
ஒருநாள் ஃபிராங்க் தனது வேலையைச் செய்வதற்கு நிதி தேவையோடு இருந்தார். அதேசமயம் ஒரு ஏழை கிறிஸ்தவ விதவை அவருடைய வீட்டு வாசலில் நின்று ஒரு டக்கட் – தங்க நாணயத்தை பிச்சை கேட்டார்.
அவரது நிதி நிலையின் காரணமாக, அவரால் அந்த பெண்மணிக்கு உதவ முடியாது என்று வருந்தி கூறினார். மனமுடைந்த அந்தப் பெண் அழத் தொடங்கினாள். அவளுடைய கண்ணீரால் துயரப்பட்ட ஃபிராங்க், அவளை காத்திருக்கும்படி சொல்லி விட்டு ஜெபிக்கும் படி தனது அறைக்குள் சென்றார்.
தேவனுடைய வழிநடத்துதலுக்காக ஜெபித்த போது, பரிசுத்த ஆவியானவர் அவருடைய மனதை மாற்றிக் கொள்ள உணர்த்துவதை அவர் உணர்ந்தார். எனவே, தனது சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வைத்திருந்ததை எடுத்து ஆண்டவரை நம்பி,அவளுக்கு கொடுத்தார்.
இரண்டு நாட்களுக்குப் பின், அந்த விதவையினிடத்திலிருந்து ஒரு நன்றி கடிதம் வந்தது. அதில் உமது தாராள மனப்பான்மையால், நீர் நடத்தும் அனாதை இல்லத்திற்கு தேவன் தமது பரிசுகளை பொழிந்தருள வேண்டுமென்று ஜெபித்ததாக குறிப்பிட்டிருந்தது.
அதே நாளில், ஒரு பணக்கார பெண்மணியிடமிருந்து பிராங்க்கிற்கு 12 டக்கட்கள் வந்தது. மேலும் ஸ்வீடனில் உள்ள நண்பனிடமிருந்து இரண்டு டக்கட்கள் வந்தது. விதவைக்கு உதவியதினிமித்தம் தனக்கு கிடைத்த வெகுமதியாக அவர் இதை நினைத்தார்.
அதுமட்டுமல்ல, இளவரசர் லோட்விக் வான், என்பவர் உர்டன்பர்க் தோட்டத்திலிருந்து 500 தங்கத் துண்டுகளை அனாதை இல்லத்திற்கு தருவதாக அவருக்கு செய்தி கிடைத்தது. இதைக் கேட்ட ஃபிராங்க் கண்ணீருடன் தேவனுக்கு நன்றி கூறினார்.
ஆண்டவர் நம் அருகில் இருப்பவரை விட ஏதோவொரு விதத்தில் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆகவே, மற்றவர்களுடைய தேவைக்கு என்னால் உதவ முடியாது என்று நாம் சொல்லவே முடியாது.
தொடர்ந்து கொடுப்பவர்கள் பரலோக சந்தோஷத்தை பெற்றிருக்கிறார்கள். ஆம்,
“உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்”
(நீதிமொழிகள்:11:25) என்று வேதம் தெளிவாய் கூறுகிறது.
அதுமட்டுமல்ல,
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் என்று
நீதிமொழிகள்:19:17 கூறுகிறது.
ஆண்டவர் திருப்பிக் கொடுப்பது ஒன்று இரண்டு அல்ல, நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.
உபாகமம் 1:11.
அந்த ஏழை விதவைக்கு கொடுத்ததின் மூலம் அவர் ஏழையாகவில்லை, மிகவும் வசதி படைத்த செல்வந்தராக மாறினார்.
வேதத்தில் பார்ப்போம்,
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
மத்தேயு :5 :7.
நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெரு வெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
ஏசாயா: 25 :4.
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக் கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
நீதிமொழிகள்: 21:13.
பிரியமானவர்களே,
தேவனுடைய வார்த்தை கூறுகிறது. “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்” என்று
பிரசங்கி 11:1 – நமக்கு கூறுகிறது.
கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” லூக்கா 6:38 என்று வேதம் பார்க்கிறோம்.
நாம் மற்றவருக்கு கொடுத்ததை விட அதிகமானதை தேவன் நமக்குத் தருவார்.
மற்றவருக்கு கொடுப்பது தேவனுடைய கரத்திலிருந்து நாம் அதிகமாய் பெறுவதற்கு ஒரு வழியாகும். தேவனுக்கு கொடுப்பதின் மூலம் உங்கள் வருமானம் பொத்தலான பையில் விழாமல் பாதுகாக்கப்படும்.
கொடுப்பதின் மூலம் உங்கள் கரங்களிலுள்ள செல்வம் பெருகும். கொடுப்பதே ஆசீர்வாதத்தின் மகத்தான செயல்.
உங்களிடம் உள்ள செல்வத்தில் சிறுதுளியை ஏழைகளுக்கு கொடுத்து பாருங்கள்.அது உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வித்தியாசத்தை பாருங்கள். அது மிகுந்த ஆசீர்வாதம் நிறைந்ததாக இருக்கும்.
கர்த்தர் தருகிற ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக் கொள்ள முதலாவது நாம் பிறருக்கு கொடுக்க வேண்டும்.
இத்தகைய நன்மைகளை நாமும் பெற்று, பிறருக்கு பயன்படும் வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.